PUBLISHED ON : செப் 26, 2020

முன்கதை: ஏழை சிறுவர்கள் மாணிக்கம், முருகன் ஒரே குடியிருப்பில் வசித்தனர். தந்தையர் குடியால் பள்ளிப் படிப்பை நிறுத்தி, பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு வந்தனர். செருப்பு தைக்க சென்றான் மாணிக்கம். குப்பை பொறுக்க சென்றான் முருகன். இனி -
குப்பைத் தொட்டியை துழாவியபோது, கைப்பை சிக்கியது. அதைச் சட்டென்று மறைத்தான்; பின் சுற்றும் முற்றும் கவனித்தான்; யாரும் பார்த்ததாக தெரியவில்லை.
பையை திறந்தான் முருகன். மஞ்சள் நிறத்தில் சங்கிலிகள் ஜொலித்தன. தங்கச் சங்கிலிகளாக இருக்கலாம் என தோன்றியது.
எவனோ வழிப்பறி திருடன், குப்பைத் தொட்டிக்குள் போட்டு தப்பியிருக்க கூடும். இப்படி நினைத்ததும் நடுக்கம் அதிகமானது.
மாணிக்கம் துணையுடன், அதை காவல்துறையிடம் ஒப்படைக்க நினைத்தான் முருகன். கோணியின் அடிப்பக்கத்துக்கு தள்ளிவிட்டு நடந்தான்.
பயத்தில் நெஞ்சு படபடத்தது. யாரேனும் பின் தொடரக்கூடும். குப்பை கம்பெனிக்கு போகவும் அச்சமாக இருந்தது. எனவே, வீட்டுக்குப் போக முடிவு செய்தான்; இரவில் தான் மது நெடியோடு வந்து கதவை இடிப்பார் அப்பா.
திருட்டுப் பொருளுக்கு ஆசைப்படாதவள் அம்மா என்பதால் வீடு நோக்கி நடந்தான். தெரு முனையில் காவல்துறை வாகனம் தென்பட்டது. நகைப்பை நினைவால் வெலவெலத்தான். வாகனத்திலிருந்து குதித்த காவலரைக் கண்டு அடித்தது நெஞ்சு.
நெருங்கி வந்த காவலர், ''என்னடா கோணியில்...'' என்றபடி, குண்டாந்தடியால் தட்டினார்.
''குப்பையில் பிரித்து எடுத்த பொருட்கள் ஐயா...''
''எங்கே... காட்டு பார்க்கலாம்...''
கட்டளை இட்டதும் கால்கள் தொய்ந்தன. மூட்டைக்குள், தடியை விட்டு துழாவி, சந்தேகம் தீர்ந்து புறப்பட்டார் காவலர்.
பக்கத்து தெருவில் திருடியவனைத் தேடி வந்திருந்தனர் காவலர்கள். அவர்கள் வந்த வாகனம் வேகமெடுத்ததும் பெருமூச்சு விட்டபடி விரைந்தான் முருகன்.
குபேரனும், சாந்தனும் அடிக்கடி சிறை செல்லும் கேடிகள். திருட்டு, வழிப்பறி, கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவர்கள். பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். பறித்திருந்த சங்கிலிகளை பையில் போட்டு எடுத்து வந்தனர். காவல்துறை வாகனத்தைக் கண்டதும், குப்பைத்தொட்டியில் மறைத்து தப்பினர்.
அந்த நகைகள் தான் முருகன் கையில் சிக்கியிருந்தது.
இருட்டிய பின், குப்பை தொட்டிக்குள் மறைத்திருந்த நகைப்பையை எடுக்க இருவரும் வந்தனர். குப்பைத் தொட்டியை துழாவிய சாந்தன், ''காணோம்...'' என்றான்.
குபேரனும் கிளறினான்; பின் சற்றே ஐயத்துடன் சாந்தனைப் பார்த்தான்.
''நம் இருவருக்கும் தெரியாமல் யார் எடுத்திருக்க முடியும்...''
''என் மேல் சந்தேகப்படுகிறாயா...''
''சேச்சே... அப்படி சொல்லவில்லை; நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாச்சே என்று தான் கேட்டேன்...''
சமாதானப்படுத்த முயன்றான் குபேரன்.
''நீ சொல்வது போல நானும் கணிக்கலாம் தானே...''
''சே...சே... உன்னைச் சந்தேகிப்பேனா...''
''சரி... சரி... பை மறைந்த மாயத்தை கண்டுபிடித்தாக வேண்டும்...''
''குப்பை பொறுக்குகிறவன் கையில் சிக்கியிருக்கும்...''
''எத்தனையோ பேர் குப்பை பொறுக்கு கின்றனர்; யாரென்று கண்டுபிடிப்பது...''
''யாராக இருந்தாலும், சில நாட்கள் இந்த பக்கம் வரமாட்டான்...''
''அப்படி சொல்லிவிட முடியாது. முன் ஜாக்கிரதையால் எதுவும் தெரியாதது மாதிரி வரலாம் தானே...''
''அதுவும் சரிதான்...''
இருவரும் பேசியபடி நடந்தனர்.
திடீர் என, ''அதோ பார்... குப்பைக் சாக்குடன் போய்க் கொண்டிருக்கிறான் ஒருவன். மடக்கிப் பார்க்கலாம்...'' என்றான் சாந்தன்.
ஓட்டமும், நடையுமாக தெருமுனையில் வழிமறித்தனர். திடுக்கிட்டான் முருகன்.
''பையில் என்னடா...''
அதட்டும் குரலில் கேட்டான் குபேரன்.
எச்சில் விழுங்கினான் முருகன்.
அதே நேரம் -
அம்மாவுக்காக காத்திருந்தான் மாணிக்கம். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்ட யோசனை வெற்றி தருமா என்பதில் ஐயம் இருந்தது. முயன்றால் தானே தெரியும்.
இரவு 7:00 மணிக்கு திரும்பி சமையல் செய்து கொண்டிருந்தாள் அம்மா. அருகே உட்கார்ந்தபடி, ''உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்...'' என்றான் மாணிக்கம்.
''என்ன விஷயம்...''
''படிப்பை தொடரலாம் என்று பார்க்கிறேன்...''
வெங்காயம் அரிவதை நிறுத்தி, விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.
''நீ படிக்கப் போவதில் எனக்கு சந்தோஷம் தான்; ஆனால்...''
''என்னம்மா...''
''என் சம்பாத்தியத்தில் முடியுமா... அப்பா வேறு கட்டையை நீட்டி விட்டார். அவர் வைத்தியச் செலவுக்கு பணம் தேவைப்படுமே...''
''சமாளித்துவிடலாம்... எப்படி இருந்தாலும், அப்பா சம்பாத்தியத்தில் ஒரு காசும் குடும்பத்துக்கு கொடுத்ததில்லை. உங்கள் பணத்தை வேறு பிடுங்கி போய்விடுவார்... இப்போது அந்த தொல்லை இல்லை தானே...''
''நீ சொல்வதும் சரிதான்...''
''படிப்பு தவிர்ந்த நேரத்தில் சம்பாதிக்க முயற்சிக்கிறேன்...''
''அதெப்படி முடியும்... என்ன வேலை செய்வாய்... செருப்பு தைக்கும் வேலையா...''
''அது மட்டுமில்லை; பல வேலைகள் செய்ய யோசிக்கிறேன்...''
''பள்ளியில் சேர்ந்தால் வேலை செய்ய நேரம் எப்படி கிடைக்கும்...''
''காலை 6:00 மணி முதல், 8:00 வரை வேலை செய்ய முடியுமே... பள்ளி பக்கத்தில் இருப்பதால் சுலபம்...''
''அந்த நேரத்தில் என்ன சம்பாதிக்க முடியும்...''
''வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிக்கலாம்; அதற்கு மிதிவண்டி வேண்டியிருக்கும். செருப்பு தைத்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்கப் போகிறேன்; அதில் மிதிவண்டி வாங்க முடியும்...''
''சரியாப் போச்சு போ... அத்தைக்கு மீசை முளைத்த கதை தான்...''
''என்னம்மா இப்படி பேசுகிறீர்கள்... நம்பிக்கை ஏற்படுற மாதிரி ஏதாவது சொல்லுவீர்கள் என்ற பார்த்தால்...''
''நடைமுறை பற்றி பேசுகிறேன்...''
''பார்க்கலாம். ஆரம்பிக்கும்போதே அவநம்பிக்கைப்படாதீங்க. அப்பாவை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டால், மருத்துவ செலவு வராது...''
''உடம்பு சரியானதும் வீட்டுக்கு அனுப்பி விடுவரே...''
''இப்போதைக்கு சரியாக வாய்ப்பு இல்லை என்று தானே சொன்னீங்க...''
''ஒருவேளை குணமாகி, சீக்கிரம் திரும்பிவிட்டால் உன்னைப் படிக்க அனுமதிக்க மாட்டாரே...''
''அதெல்லாம் நடக்காது; படிப்பை விடமாட்டேன்; வீட்டை விட்டு ஓடிவிடுவேன்...''
- தொடரும்...
ஜோதிர்லதா கிரிஜா
