தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புரட்சி சிறுவன்! (7)

புரட்சி சிறுவன்! (7)

புரட்சி சிறுவன்! (7)


PUBLISHED ON : அக் 10, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தந்தையரின் குடிப்பழக்கத்தால், ஏழை சிறுவர்களின் பள்ளிப் படிப்பு நின்றது. செருப்பு தைத்த சிறுவன் மாணிக்கம், சுகவீனமான தந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தான். பின், பள்ளி செல்ல முயன்றான். இனி -

அன்று காலை -மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு புறப்பட்டான், மாணிக்கம். ஆசிரியர் ரங்கமணியை சந்தித்தான். அவரது பரிந்துரைப்படி, 5ம் வகுப்பில் சேர்ந்தான். பாடங்களை மிகவும் கவனமாக மனம் கொண்டான். வீட்டுப்பாடங்கள் முடிக்க உரிய நேரத்தை ஒதுக்கினான்.

மருத்துவமனையிலிருக்கும் அப்பாவையும், தனியாக தவிக்கும் அம்மாவையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு மனதில் இருந்தது. எனவே, பகுதிநேரமாக வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டான். அக்கம் பக்கத்தில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் பற்றி விசாரித்தான்.

முழுமனதுடன் அவனுக்கு உதவி வந்தார் ஆசிரியர் ரங்கமணி. பகுதிநேரமாக வேலை தேடுவது குறித்து, அவரிடமும் நினைவூட்டி வந்தான். சற்று தயக்கம் காட்டினாலும், சிறுவனின் தேவையை உணர்ந்திருந்தார் ரங்கமணி.

''குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது சட்டப்படி தவறு. அந்த சட்டத்தை கடுமையாக அமல் படுத்த அரசை வலியுறுத்தி வருபவன் நான். இந்த நிலையில், உன்னை வேலைக்கு போ என்று சொன்னால், அது முறையாக இருக்காது. ஆனாலும், உன் நேரத்தை சரியாக செலவிட்டு, சிறு வருவாய் ஈட்டும் வகையில் பணி ஒன்று பெற்று தர முயற்சி செய்கிறேன்...'' என உறுதியளித்தார் ஆசிரியர்.

''பசியை போக்க ஏதாவது செய்து தானே ஆக வேண்டும் ஐயா...''

பணிவைக் காட்டினான் மாணிக்கம்.

''உண்மை தான்... உன்னைப் போல் ஆர்வமும், லட்சியமும் உள்ளவர்களுக்கு நிச்சயம் வழி பிறக்கும். நம்பிக்கை இழக்காதே... அப்படி எதுவும் கிடைக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் உதவுகிறேன்...''

ஆசிரியரின் வார்த்தைகள் தெம்பு அளித்தது.

''காலையில் செருப்பு தைப்பதன் மூலம் சிறிது பணம் சம்பாதிப்பேன். மாலையிலும் சம்பாதிக்க முடியும். இரவில், தெருவிளக்கு ஒளி உதவியால் படிப்பேன்... மழைக்காலத்தில் தான் சற்று சிரமம் ஏற்படும். சமாளித்துவிடுவேன்...''

''சிரமம் ஏற்பட்டால், என் வீட்டுக்கு வந்துவிடு... உன் போன்ற லட்சியவாதிகளுக்கு, என் இதயத்தில் எப்போதும் இடம் உண்டு...''

''மிகவும் நன்றி ஐயா...''

''முதலில் உன் தந்தையின் உடல் நிலையை நன்றாக கவனி... அவரை பரிவுடன் அணுகு...''

''அம்மாவும் அதைத்தான் சொல்கிறார். உங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன் ஐயா...''

உறுதி கூறி விடை பெற்றான்.

அன்று மாலை, பார்வையாளர் அனுமதி நேரத்தின் போது, மருத்துவமனைக்குச் சென்றான். அப்பாவுக்கு நினைவு திரும்பியிருக்கவில்லை.

மாணிக்கம் பள்ளியில் சேர்ந்த பின், அவன் வசித்த பகுதியில் சிறு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழ் சினிமாவில் வருவது போன்ற நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.

அது கண்டு தாங்கமுடியாத வியப்படைந்தான் மாணிக்கம்.

குடியிருப்பில் வசித்த சிறுவர், சிறுமியர் எல்லாம், பள்ளிக்கு போகப்போவதாக போர்க்கொடி துாக்கியிருந்தனர்.

'கேட்பதற்கு எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; இது மாதிரி செயல் எல்லாம் தமிழ் சினிமாவில் தான் நடக்கும்...'

நம்பிக்கை இழந்து பேசினர் பகுதி பெண்கள்.

சிறுவர்கள் விடுவதாக இல்லை.

படிப்பு தொடர்பாக, மாணிக்கத்தை முன்னுதாரணமாக காட்டிப் பேசினர். நம்பிக்கை இழந்திருந்த அம்மாக்களை சம்மதிக்க வைத்தனர்.

'அப்பன்களிடம் அடிவாங்காமல் சாதித்தால் சரிதான்...'

ஒப்புதல் அளித்தனர் குடிசை பெண்கள்.

''எல்லாவற்றையும் சாமர்த்தியமாக செய்வோம்...''

உறுதி தொனிக்க சொன்னான் முருகன்.

குப்பை தொட்டியில் கிடைத்த நகைப்பையை, காவல்துறையில் அவன் ஒப்படைத்திருந்த விவரம் பரவியிருந்தது. அவனது நேர்மையை அனைவரும் பாராட்டினர். அந்த பகுதியில் அவன் மதிப்பு உயர்ந்திருந்தது.

மறுநாள் பள்ளி சென்ற மாணிக்கத்தை அழைத்தார் ரங்கமணி.

ஆர்வமாக சென்றவனிடம், ''உன் வேலை விஷயமாக ஒரு தகவல் வந்துள்ளது. மருத்துவர் ஒருவருக்கு உதவியாளர் தேவையாம்...

''அவரிடம் மருத்துவ பரிசோதனைக்கு வருவோரை, நேரம் குறித்து அனுப்புவது தான் பணி... படிப்பதற்கு எந்த தடையுமில்லை...'' என்று கூறினார்.

மாணிக்கத்துக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. நன்றியின் அடையாளம் கண்களில் வழிந்த நீரில் தெரிந்தது. அதை புரிந்து, முதுகில் தட்டிக் கொடுத்தர் ஆசிரியர்.

மாலையில் அந்த மருத்துவரை சந்தித்து, உதவியாளராக சேர்ந்தான் மாணிக்கம்.

வேலை என்று பெரிதாக எதுவும் இல்லை. மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வருபவர்களிடம் பண்புடன் பழகினான். வரிசைப்படி அனுப்பினான்.

பணி முடிந்து வீடு திரும்பியதும், விவரத்தை அம்மாவிடம் தெரிவித்தான் மாணிக்கம்.

''மனிதர்களுக்கு எப்போதும் கஷ்டங்கள் மட்டுமே வருவதில்லை; மகிழ்வான நிகழ்வுகளும் அவ்வப்போது வரும்...''

மகிழ்ந்து கூறியவள் கண்களில் நம்பிக்கை ரேகை படிந்திருந்தது.

சாப்பிட்டு கண்ணயர்ந்தான் மாணிக்கம்.

அன்று பள்ளியில் வகுப்பு முடிந்து, பணி செய்ய மருத்துவரைத் தேடிச் சென்றவனுக்கு, சிறு அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர் அறையில் இருந்த சிறுமியைப் பார்த்ததும், பழைய நினைவுகள் தீண்ட வியப்படைந்தான்.

அவளும் மவுனமாக நின்றாள்.

பின் தணிந்த குரலில், ''அப்பா... இந்த சிறுவனுக்குத்தான் செருப்பு தைத்த கூலி தர வேண்டும்...'' என்றாள் சிறுமி.

''ஓ... பள்ளி சென்றபோது அறுந்த செருப்பை, தைத்து தந்தது இவன் தானா...''

பரிவுடன் கேட்டார் மருத்துவர்.

அமோதித்த சிறுமி, நட்புடன் சிரித்தாள்.

உழைப்பில் மாணிக்கம் கொண்டிருந்த பற்று, மருத்துவருக்கு, அவன் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.

- தொடரும்...

ஜோதிர்லதா கிரிஜா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us