PUBLISHED ON : நவ 04, 2011

ரப்பரின் அருமை பண்டைகால மக்களுக்குத் தெரியவில்லை. நீண்ட காலமாக ரப்பரின் மீள் சக்தியைப் பயன்படுத்திப் பொருட்கள் செய்யப் படவில்லை. பென்சிலால் எழுதியதை அழிப்பதற்கு ஓர் அழிப்பானாகவே அது பயன்பட்டு வந்தது. ரப்பர் என்னும் பெயர் 'தேய்ப்பான்' என்னும் பொருளில் வரும் காரணப் பெயர்தான்.
ரப்பர்பால் பல்வேறு தாவரங்களில் உண்டாகிறது. சுமார் 50 இன தாவரங்களிலிருந்து ரப்பர் எடுக்கப்படுகிறது. ஆனால், மிகச் சில தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் ரப்பரே லாபகரமாக இருக்கிறது.
'மோரேசியீ', 'யூபோர்பேசியீ', 'அப்போ சைனேசியீ' என்னும் தாவரக் குடும்பத்திலிருந்து ரப்பர் எடுக்கப்படுகிறது. பாரா ரப்பர் என்பது ரப்பர் மரங்களில் மிக முக்கியமானது. இதற்கு, 'ஹவேயா பிரேசிலி யென்ஸிஸ்' என்னும் விஞ்ஞானப் பெயர் உண்டு. ஹவேயா என்பது இம்மரத்திற்குத் தென் அமெரிக்க மக்களால் இடப்பட்ட பெயர். இம்மரத்திலிருந்து உலக ரப்பர் உற்பத்தியில் 95 சதவீதம் எடுக்கப் படுகிறது. ரப்பர் மரம், தென் அமெரிக்காவில் அமேஸான், ஆரினுக்கோ பள்ளத்தாக்குகளில் நன்றாக வளர்கிறது.
