
கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை, அரசு நடுநிலைப் பள்ளியில், 1990ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
மாணவர்கள், ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் சூட்டி வகுப்பில் கிண்டலாக அழைப்பது வழக்கம். அன்று, இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதை கவனித்த தமிழ் ஆசிரியர் முகமது விசாரித்தார்.
வகுப்பு தலைவன் எழுந்து, 'சுடலை முத்துவும், முத்துசாமியும் பட்டப்பெயர்கள் சூட்டி சண்டையிடுகின்றனர்...' என்றான்.
இருவரையும் எச்சரித்த ஆசிரியர், ஒருவனிடம் மனப்பாட பகுதியில் ஒரு திருக்குறள் கூறக் கேட்டார்.
திணறியவனை ஆத்திரத்தில் வெளுத்தபடி, 'மனப்பாட பகுதி மனதில் நிற்கவில்லை... ஆனால், பட்டப்பெயர் மட்டும் மறக்கவில்லை...' என்று கண்டித்தவர், செயல்முறையாக திருக்குறளை கற்பித்தார்.
வராண்டாவில் அடுக்கியிருந்த பூந்தொட்டிகளைக் காட்டி, 'ரோஜா செடிக்கு, 'தொட்டனைத் துாறும்' என பட்ட பெயர் சூட்டவும்; அடுத்து, மல்லிகையை, 'மணற்கேணி' என வைத்துக்கொள்ளவும்...' என வரிசைப்படி, செடி, கொடிகளுக்கு குறள் சொற்களை சூட்டி, மனதில் பதிக்க சொன்னார்.
அந்த வழிமுறையை பின்பற்றினோம்; மனப்பாடம் எளிதானது. இதே முறையை, உயர்நிலை படிப்புகளிலும் பின்பற்றினேன்; கணித பார்முலா உட்பட, பலவும் மனதில் தங்கின. பின்னாளில், என் பிள்ளைகளுக்கும், இதே முறையை கற்று கொடுத்தேன்.
தற்போது, என் வயது, 43; கற்பிப்பதில் புதிய யுக்திகளை புகுத்திய அந்த ஆசிரியர் முகம், இன்றும் மனக்கண்ணில் இருக்கிறது.
- மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 94870 56476