
மதுரை மாவட்டம், திருமங்கலம், பி.கே.என்.ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1958ல், 6ம் வகுப்பு படித்தேன்.
வகுப்பு ஆசிரியர் சோலை முத்து, பாடங்களுடன், சிக்கனத்தை எப்படியெல்லாம் கடைப்பிடிப்பது என கற்றுக் கொடுத்தார்.
அதை கடை பிடிக்கும் வகையில், சில நடைமுறைகளை கொண்டு வந்தார். ஒவ்வொரு மாதமும், வகுப்பு தேர்வுக்கு, புதிய பேப்பர் வாங்குவதை தடுக்கும் வகையில், 'பழைய நோட்டுப் புத்தகத்தில், பயன்படுத்தாமல் உள்ள தாளில் தேர்வு எழுதுவோருக்கு கூடுதலாக, 10 மதிப்பெண் கொடுக்கப்படும்...' என்றார்.
அந்த அறிவிப்பை மிஞ்சும் வகையில், திரைப்பட விளம்பரம் அச்சிட்ட நோட்டீஸ் பின்புறம் மற்றும் அலுவலகங்களில் ஒரு புறம் மட்டும் எழுதி குப்பையில் வீசிய பேப்பரை பயன்படுத்தி எழுதினேன்.
என்னைப் பாராட்டி, கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்தார்.
என் வயது, 74; அந்த ஆசிரியர் கற்றுத்தந்த பழக்கத்தை இன்றும் தொடர்கிறேன். என் தீப்பெட்டி தொழிற்கூடத்தில், இது போன்ற சிக்கன நடைமுறைகளை கடைப்பிடித்து வருகிறேன்.
- எஸ்.பாலசுந்தர், மதுரை.
தொடர்புக்கு: 98652 40049