PUBLISHED ON : மார் 14, 2014

முகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ளது சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா. இதன் விஸ்தாரம்- 152.95 ஏக்கர்.
1969ல் முதலில் இந்த இடம் தாவரவியல் பூங்காவாக துவக்கப் பட்டது. அதாவது அரிய மலர்கள், செடி, கொடிகள் போன்றவற்றை அறிவியல் ஆய்விற்காக வளர்க்கப் படும் பூங்காவாக இது இருந்தது.
ஆனால், இதனை விஸ்தரிக்க எண்ணியபோது, மாநில கவர்னர், தன்னுடைய கண்காணிப்பில் வந்த 34 ஏக்கர் நிலத்தை தந்து உதவினார்.
அடுத்து...
மாநில, பொதுமக்கள் பயன்படு வேலை இலாக்கா மற்றும் அரசு வருமானம் சார்ந்த இலாக்கா ஆகியவை தலா 58.2 ஏக்கர் மற்றும் 60-75 ஏக்கர் என வழங்கின.
இதனால் மாநில அரசு, தன்னுடைய இலாக்காக்களால் வழங்கப்பட்ட இடத்தை இணைத்து, பாதுகாக்கப் பட்ட காடு என அறிவித்தது. பலன்... மிருகக்காட்சி சாலையும், தாவரவியல் பூங்காவும் சேர்ந்தது. இதனால், 1983ல் இந்த இடம், 'சஞ்சய் காந்தி!' உயிரியல் பூங்கா என பெயர் மாற்றம் பெற்றது.
* இந்த உயிரியல் பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் உள்ளன. இவை 300 வகையான மரங்கள், மருந்துக்குப் பயன்படும் குட்டை, புதர் செடிகள், குத்துச் செடிகள் என பலவகைப்படும்.
* இவை தவிர மருத்துவம் சார்ந்த தாவரங்களுக்கு தனி நர்சரி...
* ஆர்க்கிட் வகைகளுக்கு தனி வீடு...
* பசுந்தாவர பெரணி செடிகள் வீடு,
* கண்ணாடி மாளிகை... ரோஜா தோட்டம், மீன்கள் காட்சியகம் என நிறைய பிரிவுகள் உள்ளன.
* மீன்கள் காட்சியகத்தை பார்க்க தனி கட்டணம்! உள்ளே 35 வகையான மீன்களை காணலாம். எளிதில் மனதையும், கண்களையும் கவரும்.
* 5 வகைகளில் 32 பாம்புகள்,
* பூமிக்கடியில் குளம் அமைத்து, அதனுள் நீந்துவதற்கு ஏதுவாக விரல்கள், தோல்களால் இணைக்கப்பட்ட, கால்களையுடைய ஊன் உண்ணும் பாலூட்டி இன நீர் வாழ்விலங்குகளான, நீர் நாய் போன்றவை வளர்க்கப் படுகின்றன. இவற்றை கண்ணாடி வழியாக பார்க்கலாம்.
* உலகில் மறைந்து வருவதாக கூறப்படும் அரிய இனங்களை இந்த உயிரியல் பூங்கா வளர்க்க அக்கறை எடுப்பது தனிச்சிறப்பு.
*காட்டு விலங்குகளை பிடித்து வந்து புதிய குட்டிகளை உருவாக்குவதில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த பூங்கா.
* உதாரணமாக ஒத்தைக் கொம்பு காண்டாமிருகம் இங்கு குட்டி போட்டு சாதனை படைத்தது. அது இன்றும் தொடருகிறது.
* ஆறு, ஏரி, குட்டைகளில் வாழும் நீர் யானைகளும் இங்கு உள்ளன.
* மஞ்சள் நிறத்தோலும், கருமை யான புள்ளிகளும் கொண்ட சிறுத்தை புலி இங்கு இரு குட்டி களை ஈன்றுள்ளது வெற்றிக் கதை.
* பெரியவகை முதலைக்கும் இங்கு 2001ல் குழந்தை பிறந்தது. பிறகு அடிக்கடி பிறக்க இங்கு கடந்த 5 ஆண்டுகளில் கரியால்ஸ் மற்றும் முதலைகளின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.
*2011ல் இங்கு குட்டி ஒட்டகச்சிவிங்கி பிறந்துள்ளது.
* முள்ளம்பன்றியைக் கூட இங்கு ஊர் அறிய இரண்டு குட்டி போட வைத்துள்ளனர்.
* இப்போது இரண்டு வெள்ளைப் புலிகள் வந்துள்ளன. இதனால் ஆண் வெள்ளை புலியை வரவழைத்து, அதன் இன உற்பத்தியை அதிகரிக்க புது முயற்சி நடக்கிறது.
* இங்கு ஆண் வரிக்குதிரை உள்ளது. பெண் வரிக்குதிரையை தேடி வருகின்றனர். கிடைத்தால் அதன் குட்டி ஜனனமும் இங்கு நிகழும்.
ஆக இந்த உயிரியல் பூங்கா... அழிந்து வரும் இனங்களுக்கு புது உயிர்ப்பு அளிக்கும் பணியில் இயங்கி வருவது புரிகிறதா?
* உள்ளே 4.2 கிலோமீட்டர் தூரத்திற்கு பொம்மை ரயில் வசதி உள்ளது.
* ஏரி உள்ளது. அதனுள் படகு சவாரி செய்யலாம். இந்த ஏரியில் எழும்பி விழும் மூன்று உயர் நீரூற்றுகள் உண்டு.
* உள்ளே செயற்கை மலையை உருவாக்கி அதன் மூலம் ஒரு நீர்வீழ்ச்சி விழுவது போல் அமைத்துள்ளனர்.
* புதிதாக இரண்டு ஆசிய சிங்கங்கள் இங்கே கூடுதல் கவர்ச்சியாக நுழைந்துள்ளன.
* யானைகள், கருப்பு மான்கள், ஓநாய்கள், புள்ளி மான்கள், மலைமைனா, மயில்கள், ஒட்டகச் சிவிங்கிகள், வெள்ளை மயில்கள் என பலதரப் பட்ட மிருகங்களும் இந்த பூங்காவில் உள்ளன.
* உள்ளே கார்கள் செல்ல அனுமதியில்லை. முழுவதும் சுற்றி வர, சைக்கிள் வசதி உள்ளது. நூதன வண்டிகள் சுற்றிப் பார்க்க உள்ளன! அவை சிறியவை.
*வருடத்திற்கு 7.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்!
- ராஜிராதா, பெங்களூரு
