தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யார் இவர்?

யார் இவர்?

யார் இவர்?


PUBLISHED ON : மார் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான்காம் வகுப்பிலே கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தது. அச்சமயம், அந்த ஊரில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் குழுவின் தலைவர் அங்கு வந்துச் சேர்ந்தார்.

அவரைக் கண்டதும், ''பையன்களா, நானும் இவரும், ஓர் அவசர வேலையாக வெளியே செல்கிறோம். சிறிது நேரத்தில் திரும்பி விடுவோம். அதற்குள் இதைப் போட்டு வையுங்கள்,'' என்று கூறி ஒரு கணக்கைக் கொடுத்து விட்டு, நாடகத் தலைவருடன் கிளம்பி விட்டார் ஆசிரியர்.

எல்லா மாணவர்களும் கணக்கைப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் கணக்கிலே கவனம் செல்லவில்லை. பாதிக் கணக்குடன் நிறுத்திவிட்டு, சட்டைப் பைக்குள் வைத்திருந்த ஒரு தாளை வெளியில் எடுத்தான். அது ஒரு நாடக விளம்பரத்தாள். அதில் அச்சிடப்பட்டிருந்த படத்தைப் பார்த்தான்.

அந்தப் படத்தில் ஒரு தாமரை இருந்தது. தாமரையின் நடுவிலே ஒரு யானை இருந்தது. யானையின் மேலே இந்திரன் இருந்தான். அந்தப் படத்தைப் பார்த்ததும், அதைப் போல் தன்னுடைய சிலேட்டில் வரைய வேண்டுமென்ற ஆசை அவனுக்குத் தோன்றியது. உடனே வரைய ஆரம்பித்தான். வரைந்து முடித்ததும் பார்த்தான். அது அவ்வளவு நன்றாக இல்லை. இன்னும் நன்றாக வரைய வேண்டும் என்று எண்ணினான். உடனே சிலேட்டின் மறுபக்கத்தில் அதே படத்தை வரைந்தான். படம் போடும் ஆர்வத்தில் அந்தப் பக்கத்திலிருந்த அறைகுறைக் கணக்கையும் அவன் அழித்து விட்டான்.

சிறிது நேரம் சென்றது. ஆசிரியரும், நாடகத் தலைவரும் திரும்பி வந்தனர்.

கணக்கைச் சரியாக போட்டிருக்கிறார்களா என்று ஒவ்வொரு மாணவனாகப் பார்த்துக் கொண்டே வந்தார் ஆசிரியர். படம் வரைந்து வைத்திருந்த அந்த மாணவருடைய பலகையைக் கண்டதும், ஆசிரியருக்கு அளவு கடந்த கோபம் வந்து விட்டது. உடனே பிரம்பை எடுத்தார்.

''டேய், உன்னை நான் கணக்குப் போடச் சொன்னேனா, படம் போடச் சொன்னேனா?'' என்று கேட்டுக் கொண்டே நன்றாக அடித்து விட்டார்.

அப்போது அருகிலே இருந்த நாடகத் தலைவர் அவன் வரைந்திருந்த படத்தைப் பார்த்தார்.

பார்த்ததும், ''ஆஹா, எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறான்! இவனைப் பாராட்டாமல் அடித்து விட்டீர்களே!'' என்றார்.

<உடனே ஆசிரியரும் அந்தப் படத்தைக் கூர்ந்து பார்த்தார். பார்த்ததும், அவருடைய கோபம் பறந்துவிட்டது!

உடனே, அந்த மாணவனை அன்பாக அணைத்துக் கொண்டு, ''மிகவும் அழகாக வரைந்திருக்கிறாய். ஆனாலும், கணக்குப் போட வேண்டிய நேரத்தில் படம் போடலாமா?'' என்றார்.

சிறுவயதிலே சித்திரம் வரைவதில் தேர்ச்சி பெற்று இருந்த அந்த மாணவன், பெரியவனானதும் ஒரு நல்ல ஓவியனாக விளங்கினான். ஓவியனாக மட்டும் விளங்கவில்லை, சிறந்த கவிஞனாகவும் விளங்கினான்.

விடை: நீங்கள் யார் என்று தேடியது இவரைதான். 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற பாட்டைப்பாடி, விடுதலைப் போருக்கு வேகம் கொடுத்த கவிஞர் நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us