
சந்தம் நிறைந்த பாடல்களை உருவாக்கி சிறுவர், சிறுமியர் மனதில் இடம்பிடித்தவர், அழ.வள்ளியப்பா. புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் நவ., 7, 1922ல் பிறந்தார். பள்ளியில் படித்த போதே கவிதை பாடிய முதல் நிகழ்வு நடந்தது.
ஒவ்வொரு நாளும் மாலை வகுப்புகள் முடிந்து நண்பர்களுடன் நடந்தே வீடு செல்வார் வள்ளியப்பா. வழியில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. அதில், 'லாஸ்ட் ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படம் திரையிடப்பட்டிருந்தது. அதை, 'காணாத காடு' என மொழி பெயர்த்து, சுவரொட்டி விளம்பரமாக ஒட்டியிருந்தனர்.
அந்தப் பெயரை சத்தமாக வாசித்தார் வள்ளியப்பா. தொடர்ந்து, 'காணாத காடு... கண்டு விட்டால் ஓடு...' என்று உரக்கப் பாடினார். உடனிருந்தவர்களும் அதை தொடர்ந்தனர். கூடுதலாக ஒரு வரியைச் சேர்த்து, 'காணாத காடு... கண்டு விட்டால் ஓடு... ஒளிய இடம் தேடு...' என்று பாடினார் வள்ளியப்பா. இப்படி பாடல் வரிகள் சேர்ந்து முழுமையாகி உயிர் பெற்றது.
உயர்நிலை படிப்பை முடித்த பின், சென்னை வந்தார். தமிழ் குழந்தை இலக்கிய முன்னோடிகளை சந்தித்தார். பின், 'ஆளுக்குப் பாதி' என்ற தலைப்பில் முதல் கதையை எழுதினார். அதற்கு கிடைத்த பாராட்டே, எழுத்தாளர், கவிஞராக உயர்வதற்கு வழி வகுத்தது.
வங்கியில் பணியில் சேர்ந்தார் வள்ளியப்பா. வங்கி செயல்பாடு தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு, சரியான தமிழ்ச் சொற்கள் தந்து பாராட்டு பெற்றார். குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில், மலரும் உள்ளம் என்ற தலைப்பில் பாடல்கள் தொகுப்பை, 1944ல் வெளியிட்டார். பின், 'சிரிக்கும் பூக்கள்' என்ற பாடல் தொகுதியை வெளியிட்டார். இதையடுத்து, குழந்தைக் கவிஞர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.
அவரது பாடல்களில் உயர்ந்த கருத்துடன், ஓசை நயமும் நிரம்பியுள்ளன. சந்தம் சிந்துவதால் சிறுவர்களைக் கவர்ந்து இன்பத்தை அளிக்கிறது. நகைச்சுவையுடன் நற்பண்புகளை வளர்க்கும் கதைகளையும் எழுதியுள்ளார்.
மதுரைப் பல்கலையில் நடந்த கூட்டத்தில், 'குழந்தை இலக்கியத்தை பாடமாக வைக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை வலியுறுத்திப் பேசிய போது மயங்கி விழுந்தார்; மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, மார்ச் 16, 1989ல் மறைந்தார். படைப்புகள் வழியாக இன்றும் பட்டொளி வீசி பறக்கிறது அவரது புகழ்.
- வ.முருகன்