PUBLISHED ON : ஜூலை 05, 2013

லிய்யூ தனி மனிதன். அவனுக்கென்று மனைவி, குழந்தைகள் யாருமே இல்லை. ஊர்கோடியிலுள்ள மலை மீதுள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அருகிலுள்ள காட்டிற்குள் சென்று, மரங்களை வெட்டி, சிறு துண்டுகளாக்கி, ஊருக்குள் சென்று அவற்றை விற்று வரும் பணத்தை, தன் செலவிற்கு வைத்துக் கொள்வான்.
ஒரு நாள், வெட்டிய விறகை முதுகில் சுமந்து கொண்டு கீழே இறங்கியபோது, ஒரு பள்ளத்தில், ஒரு குட்டி நரி, எம்பி, எம்பி எதையோ அங்கிருந்த கொடியிலிருந்து பறிக்க முயன்று, தோற்றுப்போய்க் கொண்டிருந்தது. அது, அக்கொடியிலிருந்து நீளமாக தொங்கிக் கொண்டிருந்த திராட்சை குலையைத்தான்.
''தம்பி! உனக்கு திராட்சை குலைதானே வேண்டும். கவலைப்படாதே... ஒன்றல்ல, இரண்டு திராட்சை குலைகளைப் பறித்து கொடுக்கிறேன்,'' என்று பறித்துகொடுத்தான். அதன் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?
''தேங்க்யூ அங்கிள்!'' என்று சொல்லிவிட்டுச் சென்றது.
''தம்பி! இந்த பள்ளத்தில் இறங்கி பழத்தைப் பறிப்பது மிகவும் ஆபத்தானது. தினமும் நானே உனக்கு பழங்களை பறித்துத் தருகிறேன். விறகு கட்டைகளை சுமந்து நான் இந்த வழியாகத்தான் வருவேன். நான் வரும் வரை, நீ இங்கேயே இரு... நான் பழங்களை பறித்துத் தருகிறேன்!'' என்று சொல்லிப் புறப்பட்டான்.
நாள் தவறாமல் லிய்யூ பழம் பறித்துத் தந்த பின்னரே, அங்கிருந்து தன் வீட்டிற்குப் போவான்.
பழம் காய்க்கும் சீசன் முடிந்துவிட்டதால், இப்போதெல்லாம், ஒன்றிரண்டு பழங்களை தான் அக்கொடியிலிருந்து பறிக்கமுடிகிறது.
அன்று கடைசியாக, மிகவும் கஷ்டப்பட்டு பள்ளத்திலிறங்கி, கொடியிலிருந்த பழங்களை பறித்து வந்தான் லிய்யூ.
''அங்கிள்! என் மம்மிக்கு உங்களை பார்க்க வேண்டுமாம். கட்டாயம் இன்று மாலை நீங்கள் டவுனிலிருந்து திரும்பி வரும்போது, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போக வேண்டும்,'' என்றான் நரி தம்பி.
மாலை நேரம், பை நிறைய பழங்கள், கேக், பிஸ்கட் என்று விதவிதமாக தின்பண்டங்களுடன் தம்பியின் வீட்டிற்குச் சென்றான் லிய்யூ. தம்பியின் வீடு, மலையின் எதிர்புறத்தில் இருந்தது. மிக அழகான சின்ன வீடு. தம்பியின் அம்மா, லிய்யூவை மிக மகிழ்வோடு வரவேற்றாள்.
''சகோதரா! நீங்கள் எங்களுக்கு செய்திருக்கும் உதவிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தயவு செய்து மாட்டேன் என்று சொல்லாமல், இந்த சின்னப் பரிசை எங்கள் ஞாபகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்று சொல்லி, ஒரு, 'ஸ்கார்ப்'பை கொடுத்தாள். இருகரம் நீட்டி மனநிறைவோடு அதைப் பெற்றுக் கொண்டான் லிய்யூ.
அவர்கள் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, சற்றே இருள் சூழ துவங்கிவிட்டது.
மறுநாள் காலை, தன் வீட்டின் அருகிலிருந்த ஒரு மரத்தை வெட்ட புறப்பட்டான். குனிந்து கோடரியை எடுக்க முயன்றபோது, நேற்று இரவு சட்டை பையில் வைத்திருந்த அந்த, 'ஸ்கார்ப்' வெளியில் விழுந்தது.
''ஓ! இதை மறந்துவிட்டேனே... இந்த வெயிலில், 'ஸ்கார்ப்பை' தலையில் கட்டிக்கொண்டு வேலை செய்யலாமே என்று எண்ணி, அதை தலையில் கட்டிக் கொண்டான்.
அப்போது ஒரு குரல், ''என் விதி! என் கணவரைப் போல் ஒரு தீனிக் குண்டானை வேறு எங்குமே பார்க்க முடியாது... ரகமாக தின்றுவிட்டு, கூண்டுக்குள்ளே இருக்கும் இடம் அத்தனையையும் அடைத்து படுத்துக் கிடக்கிறான். இந்த குண்டு உடம்பைத் தூக்கிக்கொண்டு, அவனால் எப்படி பறக்க முடியும்? பறப்பது எப்படி என்பதே அவனுக்கு மறந்து போய் விட்டதே...''
''என்ன சொல்றே! நீ சொல்வதை நம்பவே முடியவில்லையே... எத்தனை ஒல்லியாக இருப்பான் உன் கணவன். நாங்கள் எல்லாரும் அவனை, 'ஒல்லிப்பிச்சான்' என்றுதானே கலாட்டா செய்வோம்!''
அட... இந்த சம்பாஷனை எங்கிருந்து வருகிறது?
சட்டென்று தன் கையிலிருந்த கோடரியை கீழே போட்டுவிட்டு, நாலாபுறமும் நோட்டம் விட்டான். சுற்றுவட்டாரத்தில் யாருமே இல்லையே... மிகவும் குழப்பத்துடன், தன் வீட்டிற்குள் சென்று பார்த்தான். அங்கும் ஒருவரும் இல்லை. இது எப்படி? இப்படியொரு சம்பாஷனை... ஒருவேளை, எனக்குத்தான் புத்தி பேதலித்து விட்டதோ!
''என் வீட்டுக்காரன் ஒரே வயிற்று வலி என்று துடிக்கிறான். பத்து நாட்களுக்கு மேலாயிற்று; இன்னும் வயிற்றுவலி, வயிற்று வலின்னு முனங்கிக்கொண்டே இருக்கிறான். ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் அவனுக்கு, தின்றுகொண்டே இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட வாய்க்கு ஓய்வு கொடுக்க மாட்டான்.
''இப்படி ஓவரா தின்னாதே, உடம்புக்கு நல்லதில்லை என்று நான் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தேன்... கேட்கவில்லை. இப்போ அவஸ்தைப் படறான்...''
நீளமாக பேச்சுக்குரல் தொடர்ந்து கொண்டே போக, 'என்னடா இது விபரீதம்? சுற்று வட்டாரத்தில் மனிதவாடையே இல்லை. இதோ இங்கே என்னைத் தவிர அந்த மரக்கிளையில் இரண்டு குருவிகள் தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. அப்புறம் எப்படி இத்தனை தொனியாக பேச்சுக்குரல்...' தலையை அப்படியும், இப்படியும் திருப்பி திருப்பி சொறிந்தான்.
அப்படி அவன் சொறிந்ததன் பலன், அவன் தலையில் கட்டியிருந்த, 'ஸ்கார்ப்' பொத்தென்று கீழே விழ, அப்படியே அந்த பேச்சுக் குரல்களும் அடங்கி விட்டன! என்ன முயன்றும், பேச்சுக் குரல் கேட்கவே இல்லை; குழம்பிப் போனான்.
சரி, சரி... வெயிலின் உக்கிரம் ஏறும் முன், பாக்கி மரத்தையும் வெட்டலாம் என்று ஸ்கார்ப்பை கட்டிக்கொண்டு மரத்தை வெட்டத் துவங்கினான். என்ன ஆச்சரியம், பேச்சுக் குரல்கள் மிகத் தெளிவாக கேட்க ஆரம்பித்து விட்டன.
''ஓ! என் சகோதரி தான் எனக்கு இப்பேர்ப்பட்ட பரிசைக் கொடுத்திருக்கிறார். இந்த, 'ஸ்கார்ப்'பை அணிந்து கொண்டுவிட்டால் போதும், பறவைகள், மிருகங்கள் பாஷைகள் எனக்குப் புரிகிறது. ஏன், மரங்கள், செடி கொடிகளின் பாஷைகளைக் கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் அதிர்ஷ்டத்தை என்னவென்பது?
இந்த, 'ஸ்கார்ப்'பை எனக்குக் கொடுக்கும்போது, இது மிகவும் பழமையான ஸ்கார்ப்; இதைத் தவிர உங்களுக்கு கொடுக்க என்னிடம் வேறு ஒன்றுமில்லை. ஆகையால், இதை தயவுசெய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாரே அந்த சகோதரி! எத்தனை உயர்ந்த பரிசு இது.
நானும் கூட, பழசாக இருந்தால் என்ன, வெயிலிலிருந்து காப்பாற்றிக்கொள்ளத்தானே, இதுபோதும் என்று மேம்போக்காக நினைத்துத்தான் ஏற்றுக் கொண்டேன். இப்போதல்லவா புரிகிறது, இதன் அபூர்வ சக்தி!''
அன்றிலிருந்து, சீக்கிரமே வீட்டைவிட்டு கிளம்பி விடுவான். இத்தனை காலம் தன்னந்தனியே வாழ் நாட்களை ஓட்டியவனுக்கு, இப்போது இக்காடுகளில் வாழும் பட்சிகள், மிருகங்களிடையே நடக்கும் சண்டைகள், வீண் வம்புகள் என்று அனைத்தையும் கேட்டு மகிழும் வாய்ப்பு கிட்டியது. இந்த அனுபவத்தை மிகவும் ரசிக்க ஆரம்பித்தான்.
-1 தொடரும்.
