PUBLISHED ON : ஜூலை 05, 2013

இதுவரை: பரசுராமின் கடையிலிருந்து தன் வயலினை வாங்கிய வனிதா, அதை தன் அத்தைக்கு தெரியாமல் வைப்பதற்காக வகுப்பு ஆசிரியரின் அனுமதி கேட்க சென்றாள். இனி-
வயலினை எடுத்துக் கொண்டு, ஆசிரியரின் ஓய்வு அறைக்குள் சென்ற வனிதா, ஆசிரியரிடம், தயங்கித் தயங்கி தன் வேண்டுகோளைக் கூறினாள்.
''அப்படியே செய் வனிதா. என் அறையிலுள்ள பீரோவில் உன் வயலினை வைத்துக்கொள். மாலை வகுப்புகள் முடிந்ததும், இங்கேயே இருந்து வயலின் பயற்சி செய்வதும் நல்ல முடிவுதான். அமைதியாக இருக்கும்... குட்லக்,'' என்று கூறி வனிதாவைத் தட்டிக் கொடுத்தார்.
வனிதாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் வயலினை பரசுராம் கடையிலிருந்து மீட்டு தனதாக்கிக் கொண்டதும், டீச்சரின் பீரோவில் அதை பத்திரப்படுத்தி, தினமும் மாலையில் வயலின் வாசிக்க வாய்ப்பு கிட்டியதும், வீட்டில் அவள் படும் அவமானங்களை, கஷ்டங்களை மறக்கும்படி செய்தன. நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு, இசைக் குழுவில் இடம்பெற்று வயலின் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில், அவளுக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வாரத்தில் ஒருநாள் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வருகை தரும் சங்கர்லாலும், இப்போஸ்ட்ராவில் வனிதா ரொம்ப ஈடுபாட்டுடன் வயலின் வாசித்தாள். அவளுடைய ஈடுபாடும், வயலினில் அவள் எழுப்பிய கம்பீரமான இனிமையான நாதமும், அவள் வாசிப்பதை தனிமைப்படுத்தி, சங்கர்லாலின் கவனத்தைக் கவர்ந்தது. அவளைத் தனியாக வாசிக்கச் சொல்லிக் கேட்டு, கண்களை மூடியபடி ரசித்தார்.
அப்போது அவர் மனதில் ஒரு புதிய யோசனை முளைவிட்டது. 'இந்தப் பெண்ணுக்கு தனியாக வயலின் வாசிக்க, இசை விழாவில் ஒரு வாய்ப்பு அளித்தால் என்ன?' என்பதுதான் அது. அதை இப்போது இந்தப் பெண்ணிடம் சொல்ல வேண்டாம். கடைசி நிமிஷத்தில், விழா நெருங்கும் சமயத்தில் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துவிட்டுப் பிறகு சொல்லலாம்' என்று முடிவு செய்தார். வனிதாவை, அவள் வாசிப்பைப் பாராட்டினார்.
வனிதாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கூடவே, கவலையும் உள்ளத்தை அரித்தது. அத்தைக்கும், லீலாவுக்கும் நான் இசை விழாவில் கலந்து கொள்வது தெரியாதிருக்க வேண்டுமே. ஏதேனும் சாக்குக் கூறி, தினமும் மாலையில் தாமதமாக வீட்டுக்கு வருவதை நியாயப்படுத்தி சமாளித்து வருகிறாள். இசைக் குழுவில் நான் இடம்பெற்றிருப்பது அத்தைக்கும், லீலாவுக்கும் தெரிந்தால், என்ன விபரீதம் ஏற்படுமோ, என்ற கவலையும், பீதியும் அவள் உள்ளத்தை கடிக்கலாயின.
இசை விழாவிற்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது.
அத்தை காமாட்சியுடன் கடைக்குச் சென்றாள் வனிதா. அவள் துரதிர்ஷ்டம் தொடர்ந்தது. கடை வீதியில் டீச்சரை சந்திப்போமென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
''ஹலோ! விஜி டீச்சர் சவுக்கியமா? கண்ணிலேயேபடுவதில்லையே!'' என்று நலம் விசாரித்தாள் காமாட்சி. அவளுக்கு எல்லோரையும் தெரியும்.
''சவுக்கியம்தான் காமாட்சி அம்மா. எங்கே வெளியே வரமுடியும்? பள்ளிக்கூடம் விட்டா வீடுன்னு, சரியாப் போயிடுது. நீங்க நல்லா இருக்கீங்களா?'' என்று கேட்ட விஜி, 'அதோடு விடை பெற்றுக்கொள்ள வேண்டுமே' என்று தவித்துக் கொண்டிருந்தாள் வனிதா.
ஆனால், சாதுவாக அருகில் நிற்கும் வனிதாவைப் பார்த்த விஜிக்கு உற்சாகம் பீறிக்கொண்டு கிளம்பியது.
''காமாட்சியம்மா நீங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்க. உங்க சகோதரர் பெண் வனிதாவுக்காக நீங்க ரொம்ப பெருமைப்படணும். தங்கமான பெண். இசையிலே எத்தனை ஈடுபாடு தெரியுமா? பள்ளி மாணவர்கள் நடத்தும் இசை விழாவிலே எங்கள் பள்ளிக் கூடம் பரிசு வாங்கும்கிற நம்பிக்கையோடு இருக்கோம். அதுக்குக் காரணம், உங்க வனிதா தான். என்ன அற்புதமாக வயலின் வாசிக்கிறா தெரியுமா? சங்கர்லால் பெரிய இசை விற்பன்னர். அதான் உங்களுக்குத் தெரியுமே! அவரே வனிதாவோட வயலின் வாசிப்பை ரொம்பப் பாராட்டி அவளுக்காகத் தனி நிகழ்ச்சியை புரோகிராமிலே சேர்த்திருக்காருன்னா பார்த்துக் கோங்களேன்! நீங்கதான் வரப்போறீங்களே! அப்ப பாருங்க, உங்க வனிதாவுக்கு கிடைக்கப் போற பாராட்டுக்களை. வனிதா இதைப் பத்தி யெல்லாம் உங்ககிட்ட சொல்லவே இல்லையா? ரொம்ப அடக்கமான பொண்ணு!'' என்று புகழ்ந்து தள்ளி விட்டாள்.
அவள் பேசப் பேச காமாட்சியின் முகத்தில் இறுக்கம் ஏறிக்கொண்டே போயிற்று. வனிதாவிற்கோ தான் அங்கிருந்து ஆவியாகி மறைந்து விட மாட்டோமா என்றிருந்தது. சாலை வாகனங்களின் சத்தத்தையும் மீறி அவள் இதயத்தில் தடக் தடக் சத்தம் கேட்டது.
'அத்தையின் குணம் தெரியாமல், விஜி டீச்சர் இப்படி யதார்த்தமாக விஷயத்தைக் கொட்டிக் கவிழ்த்து விட்டாரே!' என்று நடுங்கிப் போனாள் வனிதா.
ஏதும் பேசாமல், எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அதிர்ந்து போய் நிற்கும் காமாட்சியைக் கண்டு, ''நீங்க வேற ஏதோ யோசனையா இருக்கீங்க போலிருக்கு. உங்களை தாமதிக்க வைச்சுட்டேன். சாரி... எனக்கும் அவசர வேலை இருக்கு... அப்போ நான் வரேன் காமாட்சி அம்மா... பை...பை.. வனிதா!'' என்று விடைபெற்றுக் கொண்டார் விஜி டீச்சர்.
போலியாக உதட்டில் சிரிப்பைக் காட்டி கையசைத்தாள் காமாட்சி.
அடுத்த வினாடி சுட்டெரிக்கும் தன் பார்வையை வனிதாவின் மீது திருப்பினாள். அத்தையுடைய பார்வையின் தகிப்பை தாங்க முடியாத வனிதா தலையைக் குனிந்து கொண்டாள். வெடிக்கப் போகும் எரிமலையின் பாதிப்பு எப்படி இருக்கப் போகிறதோ என்று நடுங்கலாயிற்று அந்தப் பிஞ்சு உள்ளம். நடு வீதி. நாகரிகம் தெரிந்தவள் காமாட்சி. ஆகவே, ஏதும் பேசவில்லை. வீட்டுக்கு திரும்பினாள். கடைக்குப் போகவில்லையா அத்தே? என்று கேட்கத் துணிவில்லாத வனிதாவும், மவுனமாக காமாட்சியைத் தொடர்ந்தாள்.
வீட்டை அடைந்த காமாட்சி வாசலில் நின்று பார்வையாலேயே வனிதாவை, ''போ உள்ளே!'' என்று கட்டளையிட்டாள்.
வனிதாவின் கால்கள் ரப்பராகத் துவண்டன. வனிதா உள்ளே போனதும், கதவை சாத்தி தாழிட்டாள். சத்தம் கேட்டு உள்ளே இருந்து குதி போட்டபடி வந்தாள் லீலா.
''என்னம்மா கடைக்கு போனீங்களே... ஏன் வந்துட்டீங்க?'' என்று கேட்டவள், காமாட்சி யின் உக்கிரமான முகத்தையும், வனிதா நடுங்கி, ஒடுங்கி நிற்பதையும் கண்டு ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டாள்.
''இவ என்ன செய்தாள்?'' என்று வனிதாவைப் பார்த்தாள்.
ஆனால், காமாட்சி அவளுக்குப் பதில் சொல்லவில்லை. தன் அறைக்குப் போய் ஒரு பிரம்பை எடுத்து வந்தவள் எரிமலையானாள்.
''என்ன ஒரு நெஞ்சழுத்தமும், துணிச்சலும், அகம்பாவமும் இருந்தா, என் பேச்சை நீ அலட்சியம் செய்து இசை விழாவிலே கலந்துக் கிட்டிருப்பே? ம்... இசை நிகழ்ச்சியிலெல்லாம் கலந்துக்கக் கூடாதுன்னு நான் கண்டிச்சு சொன்னேன் இல்லையா? ஏய்! நிமிர்ந்து பதில் சொல்!'' உறுமினாள் காமாட்சி.
''ஓ வயலின் வித்தகி இசை நிகழ்ச்சியிலே வாசிக்கப் போறாங்களாமா? அவளைத் தடுக்க நீ யாரும்மா? அவள் என்ன சாதாரணப் பொண்ணா? பெரிய இசை மேதையாச்சே!'' குத்திக் காட்டினாள் லீலா.
''நீட்டு கையை!'' பிரம்பைச் சொடுக்கினாள் காமாட்சி.
''சொன்ன பேச்சைக் கேட்காத அடங்காப் பிடாரியான உனக்குச் சோறு கிடையாது!''
''அத்தே வேண்டாம் அத்தே! அடிக்க வேண்டாம் அத்தே. என் விரல்களிலே அடிக் காதீங்க. அப்புறம் என்னால வயலின் வாசிக்க முடியாது!'' கண்ணீர் வழியப் பரிதாபமாகக் கெஞ்சினாள் வனிதா. ஆனால், அத்தையின் கைப்பிரம்பு வெறிகொண்டு விளையாடியது.
வனிதாவின் கதறலை, கண்ணீரை ரசித்து மகிழ்ந்தாள் லீலா.
'இசை விழாவிலே எனக்கு இடமில்லேன்னு சொல்லிட்டாங்க. இவமட்டும், எப்படிக் கலந்துக்கலாம்' என்று எரிச்சல்பட்டாள் அந்தப் பொறாமைக்காரி.
''தனியாக வயலின் வாசிக்கப் போறாளாமே... அதையும் பார்க்கிறேன்!'' என்று கறுவியபடி கைப்பிரம்பை மூலையில் வீசி விட்டு, தன் அறைக்குப் போனாள் காமாட்சி.
பிரம்படிகளை ஏந்திய வனிதாவின் விரல்கள் விண் விண் என்று தெரித்துக் கொண்டிருந்தன. உள்ளமும்தான்! வீங்கிப் போயிருந்த விரல்களைத் தொடவே முடியவில்லை. தாங்க முடியாத வலி. நிறுத்த முடியாத கண்ணீர். தேற்றுவாரில்லை. தேம்பித் தேம்பி அழுதாள்.
லீலா தன் அம்மாவிடம் கூறிக் கொண்டிருப்பது வனிதாவின் காதில் விழுந்தது.
- தொடரும்.
