PUBLISHED ON : மே 02, 2014

பூரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஆண்டன் லாரண்ட் லவாய்சியர். வெடிமருந்துத் துறையில் பல அரிய ஆராய்ச்சிகளைச் செய்து பிரெஞ்சு ராணுவம் பல வெற்றிகளை ஈட்ட உதவியவர். ஆனால், அவரை இன்னொரு இளம் விஞ்ஞானியின் பொறாமைக்குணமே பலி வாங்கி விட்டது.
இத்தனைக்கும் லவாய்சியர் பொருளாதார வசதிகளோ, வளமான வாழ்வோ கூடப் பெற்றிருக்க வில்லை. வறுமையில்தான் வாடினார்.
தன் விருப்பப்படி பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான மின்சக்தி, எரிவாயு, ஊது உலை போன்ற எந்தவித அடிப்படை வசதிகளையும் கூடப் பெற்றிராத அவர், அதற்காகக் குறுக்கு வழி ஒன்றைக் கண்டுபிடித்தார்.
மரக்கட்டைகளைத் தன் வீட்டின் கொல்லைப் புறத்தில் குவித்து அவற்றை எரித்து, அந்த வெப்பத்தின் உதவியைக் கொண்டே ரசாயனப் பொருள்களைச் சூடாக்கிக் காய்ச்சித் தம் பரிசோதனை களை நடத்தியவர் லவாய்சியர். இத்தகையவரின் மேல்தான் காரணமின்றிப் பொறாமை கொண்டார் மற்றொரு விஞ்ஞானி.
ஜீன்பால் மாரட் என்ற இளம் விஞ்ஞானி ரசாயன ஆய்வறிக்கை ஒன்றை பிரான்ஸ் விஞ்ஞானக் கழகத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பினார். அதைப் பரிசீலித்த லவாய்சியர், அதில் சாரமில்லை என்று கூறி அதை அங்கீகரிக்க மறுத்து விட்டார். குறைமதி கொண்ட பால் மாரட் அதற்காக, லவாய்சியர் மீது கடுங்கோபம் கொண்டார்.
1793ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தபோது பால் மாரட் புரட்சிக்காரர் குழுவில் ஊடுருவி தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். புரட்சியின் எதிரி என்று குறை கூறி லவாய்சியரைக் கைது செய்து காவலில் வைத்தார். லவாய்சியரின் மாமனாரை யும் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கவும் ஏற்பாடு செய்தார்.
லவாய்சியரின் விஞ்ஞான அறிவுக்காக வாவது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எத்தனையோ அறிஞர்களும், விஞ்ஞானிகளும் வேண்டு கோள் விடுத்தனர். ஆனால், பால் மாரட்டின் பொறாமை உள்ளம் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை.
1794 மே 8ம் நாளன்று கில்லட் என்னும் ஒரு கொலைக் கருவியால் லவாய்சியரின் தலை வெட்டப்பட்டது. தவறான அந்தத் தண்டனைக்கான பலனை அதற்கு அடுத்த ஆண்டிலேயே பிரெஞ்சு ராணுவம் அடைந்தது.
எதிரிநாட்டுப் படைகளின் தாக்குதலை முறியடிக்க பிரெஞ்சு ஜனநாயக ராணுவத்திடம் போதுமான வெடி மருந்து இல்லை. லவாய்சியர் இருந்திருந்தால் வெடி மருந்துப் பற்றாக்குறையே ஏற்பட்டிருக் காது என்பதை அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து வருந்தினர்.
அதன் பின்னர், 1796ம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம், முன்பு ஆதரவற்ற நிலையில் புதைக்கப்பட்ட விஞ்ஞானி லவாய்சியரின் பிணத்தைத் தோண்டியெடுத்து, அரச மரியாதையோடு மீண்டும் அடக்கம் செய்தது.
***
