தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி (8)

விஞ்ஞானி (8)

விஞ்ஞானி (8)


PUBLISHED ON : மே 30, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்து, கையும் காலும் சூம்பிப்போய் நோஞ்சானாக, அருவருப்பான தோற்றத்தோடு வளர்ந்து வந்த அந்தச் சிறுவன் பிற்காலத்தில் 'அறிவியலின் தந்தை' என்றழைக்கப்படுவார் என்றோ, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார் என்றோ யாரும் எண்ணியதே இல்லை. அவர் தான் 'புவி ஈர்ப்பு' விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன்!

இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த நியூட்டனின் தாயார் மறுமணம் செய்து கொண்டதால், பாட்டியின் வீட்டில் வளர்ந்தார். 13 வயதில் மீண்டும் தாய் வீட்டுக்குச் சென்று சேர்ந்து கொண்ட அவர் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து பி.ஏ., பட்டமும் பெற்றார். அவருடைய கணித ஆசிரியரின் பெயர் ஐசக் பாரோ. அவரிடம் பயின்ற நியூட்டன் சில ஆண்டுகளுக்கு பிறகு, அதே பல்கலைக் கழகத்தில் அந்த ஆசிரியரின் பதவியிலேயே (கணிதப் பேராசிரியர்) அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார்.

எப்போதும் ஆராய்ச்சி நோக்குடனேயே இருந்த அவர்தான், ஒரு மரத்திலிருந்து பழம் ஒன்று கீழே விழுந்ததைக் கண்டவுடன், அதைத் தீவிரமாக ஆராய்ந்து, 'புவி ஈர்ப்பு' விதியைக் கண்டறிந்து உலகப் புகழ்பெற்ற மேதையாகப் போற்றப்பட்டார்.

மேலும், தொலைநோக்கு தயாரிப்பு, புவி ஈர்ப்பு விதிகள் ஆகியவற்றின் மூலம் முப்பது வயதுக்குள்ளேயே பெயரும், புகழும் பெற்ற நியூட்டன் மிகவும் சுறுசுறுப்பாக உழைக்கக் கூடியவர். ஒவ்வொரு நாளும் 18 மணி நேரத்திற்குக் குறையாமல் உழைத்து வந்த அவர், ஆராய்ச்சிப் பணியில் மூழ்கி விட்டால் உலகத்தையே மறந்து விடக் கூடியவர்.

ஒருமுறை தம் வீட்டில் நியூட்டன் தம் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை அளித்தார். நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். வேலைக்காரர்கள் சிலர் பரிமாறிக் கொண்டிருந்தனர். விருந்தினர்களுக்கு திராட்சை ரசம் பரிமாறப்படாததைக் கண்ட நியூட்டன் தாமே சென்று அதை எடுத்து வரவிரும்பி சமையலறைக்கு விரைந்தார். போன போது அதுவரை தீர்வு காணப்படாதிருந்த ஓர் அறிவியல் பிரச்னைக்கு தீர்வு காணும் முறை அவருக்கு நினைவுக்கு வந்து விட்டது.

அவ்வளவுதான்! நியூட்டன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். அவருக்கு வீடு, விருந்து, நண்பர்கள், திராட்சை ரசம் ஆகிய அனைத்துமே மறந்து விட்டன.

நேராக வீட்டின் ஒரு பகுதியிலிருந்த தம் சோதனைச் சாலைக்குள் புகுந்து கொண்டார். கதவை மூடிவிட்டு ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டார். விருந்துக்கு வந்திருந்த அவரது நண்பர்கள் அவரைக் காணாமல் எங்கே எங்கே என்று தேடினர். பணியாளர்கள் வீடு முழுவதும் தேடினர். இறுதியில் அவர் சோதனைச் சாலையில் இருப்பதைக் கண்டனர். பிறகு அந்தச் செய்தியை அவருடைய நண்பர்களிடம் போய்ச் சொல்ல, அவரது இயல்பை நன்குணர்ந்திருந்த நண்பர்கள் சிரித்துக் கொண்டே போய்விட்டனர்.

நீங்கள் இப்படி ஆராய்ந்து புதிய பொருட்களை கண்டுபிடிப்பீர்களா இல்லை கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாண்டே நேரத்தை வேஸ்ட் பண்ண போறீங்களா குட்டீஸ்......

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us