PUBLISHED ON : மே 30, 2014

கருங்குழி என்னும் ஊரில் ரவி என்ற சலவைத் தொழிலாளி வாழ்ந்து வந்தான். அவன் அன்றாடம் கிடைக்கும் வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்தி வந்தான். இருப்பினும் ரவி மனம் எப்போதும் குறைப்பட்டுக் கொண்டிருக்கும். அவன் தன் வாழ்க்கையை பிறரது வாழ்க்கையோடு, ஒப்பிட்டு மனம் புழுங்குவான்.
'தான் எப்படி உழைத்தாலும் தன்னால் நிறைய செல்வம் சேர்க்க இயல வில்லையே...' என்று கவலை கொள்வான். எப்படி யேனும் குறுக்கு வழியில் தான், நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவர் ஊர் எல்லையில் இருந்த ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவ்வூர் மக்கள் அந்த துறவியைச் சந்தித்து ஆசி பெற்றனர். துறவியும் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அக்குறைகளை நீக்கும் அறிவுரையும் உபதேசமும் செய்தார்.
ரவியும் அந்த துறவியைப் பற்றி அறிந்தான். அவன் ஒருநாள் துறவியைக் காணச் சென்றான். அப்போது துறவி மட்டும் தனியே அமர்ந்திருந்தார்.
ரவி துறவியிடம், ''துறவியே! நான் எவ்வளவோ உழைத்துப் பார்க்கிறேன். ஆனாலும் என்னால் நிறைய செல்வம் சேர்க்க இயலவில்லை. என்னை விட குறைவாக உழைப்பவர்களெல்லாம் நிறைய பணம் சேர்த்து விட்டனர். நானும் அவர்களைப்போலவே சீக்கிரமே செல்வந்தன் ஆக நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்!'' என்று வேண்டினான்.
ரவியின் பேராசையும், பிறர்மீது அவன் கொண்டிருந்த பொறாமையும் துறவிக்குப் புரிந்தது. இருப்பினும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. துறவியும் ரவியிடம், ''உன்னிடம் இப்போது ஏதேனும் பணமோ, பொருளோ இருந்தால் அதை எல்லாம் என்னிடம் கொண்டுவா! நான் அவற்றை பல மடங்காகப் பெருகச் செய்து தருகிறேன். நீயும் செல்வந்தன் ஆகிவிடு வாய்!'' என்று கூறினார்.
துறவி சொன்னதைக் கேட்ட ரவியின் மனம் மகிழ்ந்தது. அவன் தன் வீட்டுக்குச் சென்றான். தான் இதுநாள் வரை சேமித்து வைத்திருந்த காசுகளை எல்லாம் ஒரு துணியில் கட்டி, அதை துறவியிடம் கொண்டு வந்தான். துறவி அக் காசுகளை எல்லாம் பல மடங்காகப் பெருகச் செய்தால், தானும் செல்வந்தன் ஆகலாம் என்பது அவன் திட்டம்.
காசுகள் அடங்கிய மூட்டையுடன் வந்த ரவி அதை துறவியின் முன்னே வைத்தான். துறவியும் ரவியிடம், ''மகனே! நான் ஒரு மந்திரம் சொல்லி இந்த காசுகளை பல மடங்கு பெருகச் செய்யப் போகிறேன். அதுவரை நீ கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்!'' என்று கூறினார்.
ரவியும், கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்றதும், துறவி என்ன செய்கிறார் என்பதை அறிய தனது கண் களைத் திறந்து பார்த்தான். அப்போது அவன் கண்ட காட்சி அவன் மனதை உலுக்கியது. துறவி தனது காசு மூட்டையை எடுத்துக் கொண்டு சற்று தூரத்தில் ஓடுவது தெரிந்தது.
'ஐயோ! நான் இதுவரை உழைத்து சேர்த்த காசுகளை துறவி திருடிக் கொண்டு போகிறாரே! நான் என்ன செய்வேன்? இவர் கள்ளத் துறவியாக இருப்பார் போல!' என்று நினைத்த ரவி, துறவியைப் பிடிக்க அவரது பின்னால் ஓடினான்.
துறவியும் வேகமாக ஓட, ரவியும் அவரை விடாமல் துரத்தினான். இறுதியில் துறவி அங்குமிங்கும் ஓடி தான் முன்பு அமர்ந்திருந்த அரச மரத்தடிக்கே வந்து சேர்ந்தார். ரவியின் காசு மூட்டையை அங்கேயே வைத்துவிட்டு, மரத்தடியில் அமர்ந்து கொண்டார்.
ரவியும் ஓடி வந்து, தன் காசு மூட்டையை எடுத்துக் கொண்டு பெருமூச்சு விட்டான். தான் பறிகொடுக்க இருந்த காசுகள், திரும்பக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தான்.
''துறவியே! நீர் முற்றும் துறந்த துறவி என்று நினைத்துக் கொண்டேன். நீரோ என் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடப் பார்த்தீரே!'' என்று கோபமாகக் கேட்டான்.
அதைக்கேட்ட துறவியும், ரவியிடம், ''மகனே! எனக்கு உன் பொருள் மீது ஆசை எதுவும் இல்லை. உன்னைத் திருத்தவே நான் இவ்வாறு செய்தேன். இதுநாள் வரை இவை உன்னிடம் இருந்த போது இல்லாத மகிழ்ச்சி யையும், திருப்தியையும் இப்போது உன்னிடம் காண்கிறேன். நிறைய செல்வம் இல்லாவிட்டாலும் உழைப்பதற்கான உடல் ஆரோக்கியம் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற வருமானமும் கிடைக்கிறது. இவ்வூரிலுள்ள மக்களின் நம்பிக்கைப் பெற்றிருக்கிறாய்...
''இதையெல்லாம் விட்டுவிட்டு நீ பிறரைப் பார்த்து பொறாமைப் படுகிறாய். உன்னை விட செல்வந்தர்கள் எத்தனையோ பேர் உடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களை விட நீ எத்தனையோ விதத்தில் உயர்ந்தவன் என்பதைப் புரிந்துகொள்! இனியேனும் பேராசையோ, பிறர்மீது பொறாமையோ கொள்ளாமல், இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்!'' என்று அறிவுரை கூறினார்.
துறவியைத் தான் தவறாக நினைத்து விட்டோமே என்று வருந்திய ரவி, தன் பேராசையையும், பொறாமையையும் விட்டு ஒழித்தான். அன்று முதல் அவன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.
***
