PUBLISHED ON : செப் 03, 2022

முன்கதை: கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்ற சிறுவன் மிகிரனை, போட்டிக்கு அழைத்தான் மற்றொருவன். நீச்சல் பயிற்சியாளர் கணேசன் அதற்கு ஏற்பாடு செய்து, 'டிவி'யில் ஒளிபரப்பவும் முடிவு செய்தார். இனி -
போட்டி துவங்கியது -
நீச்சலில் பின் தங்கினான் மிகிரன்.
போட்டியாளர் முதல் சுற்றை முடித்திருந்த போது, பாதி துாரம் தான் நீந்தியிருந்தான்.
கரையில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், 'விடாதே... வேகமாக நீந்தி முந்திவா... தோற்கடி...' என கூவினர்.
''வேகம்... வேகம்... நீந்தும், உன் கை, கால்களுக்கு அசுர பலம் கிடைக்கட்டும்...'' வீறிட்டாள் சிற்பிகா.
கணேசனின் முகத்தில், சாணக்கியத்தனம் கூடாரமிட்டது.
'மிகிரன் பயன்படுத்தும் உத்தி சிறப்பானது; போட்டியாளன் ஆர்வக்கோளாறால் வேகமாய் நீந்தி, இரண்டொரு சுற்றுகளில் சோர்ந்து விடுவான். நிதானம் வெற்றிக்கு முதல்படி' என யோசித்து அமைதியானார்.
'ஹோ... ஹோ...' என, கிணற்றை சுற்றியிருந்த கூட்டம் இரைந்தது.
மிக நுணுக்கமாக வேகத்தை கூட்டினான் மிகிரன்.
எதிராளி மூன்றாவது சுற்றை முடித்திருந்த போது, மூன்றாவது சுற்றுக்குள் பிரவேசித்திருந்தான் மிகிரன்.
கூடியிருந்த கூட்டம், சேகரித்திருந்த, குல்மொஹர் பூக்களை உதிர்த்து, கிணற்றுக்குள் துாவியது.
சிலர், பூவரசம் இலையில் செய்த வாத்தியத்தை ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லாரியில் பொருத்தும் ஹாரனை எடுத்து வந்து, 'பாம்...பாம்...' என முழக்கமிட்டான் ஒருவன்.
ஐந்தாவது சுற்று -
போட்டியாளனைத் தாண்டி நீந்த ஆரம்பித்தான் மிகிரன்.
உற்சாக கூச்சல் கிளம்பியது.
ஒரு விரால் மீனைப் போல நீந்தினான் மிகிரன்.
முரட்டுத்தனம் அறவே இல்லை; வெண்ணெயை கத்தி வெட்டுவது போல, நீருக்குள் லாவகமாக ஊடுருவினான்.
தொடர்ந்து, 100 ஆண்டுகள் நீந்திய அனுபவம் தெரிந்தது.
நீச்சல் அவனை துன்புறுத்தவில்லை; மாறாக உள்ளும், புறமும் மேம்படுத்தியது.
''வாங்க அண்ணே... அசராம நீந்துங்க...''
குரல் கொடுத்தபடி அதிவேகமாக நீந்தினான் மிகிரன்.
பல்லை கடித்தபடி, ''என்னடா சில்வண்டு... ஊக்க மருந்து சாப்பிட்டிருக்கியா...'' என்று கூவினான் போட்டியாளன்.
''தன்னம்பிக்கை, தொடர் உழைப்பு, குரு பக்தி இவை தான், என் ஊக்க மருந்து...''
''ரொம்ப, 'பிலிம்' காட்டாதடா...''
மிகிரனை எட்டி உதைத்தான் போட்டியாளன்.
உதையிலிருந்து, நளினமாக தப்பியபடி, ''வன்முறை கூடாது அண்ணே...'' என, 12ம் சுற்றை முடித்தான் மிகிரன்.
'ஸ்டார்... ஸ்டார்... லிட்டில் சூப்பர் ஸ்டார் மிகிரன் வாழ்க...' கூடியிருந்தவர்கள் கோஷமிட்டனர்.
''நீர் கடவுள் பொசிடனின் அருளை பெற்றிருக்கிறான்...'' நெகிழ்ந்தார் கணேசன்.
தொடர்ந்து, 17ம் சுற்றை முடித்தான் மிகிரன்.
கால், கைகள் ஓய்ந்து, 14ம் சுற்றில், மரவட்டை போல தத்தளித்தபடி, ''மாஸ்டர்... இனி இம்மி அளவு கூட நீந்த முடியாது...'' என ஒப்பாரி வைத்தான் போட்டியாளன்.
அப்போது தான் அது நடந்தது.
தொடர்ந்து, 18வது சுற்றை முடித்திருந்த மிகிரன், யாரும் எதிர்பாராவண்ணம், போட்டியாளனை முதுகில் சுமந்தபடி நீந்த ஆரம்பித்தான்.
விசில் சத்தம் பறந்தது.
''விடுடா... என்னை... விடு...''
''சும்மா இருங்கண்ணே... நான் மட்டும் ஜெயிச்சா சரியா இருக்குமா... நீங்களும், நானும் சேர்ந்து, 20 சுற்றுகளை முடிப்போம்... இருவருக்குமே வெற்றி... யாரும், யாருக்கும் அடிமை ஆக வேண்டாம்...''
போட்டியாளனை சுமந்து இரட்டை வாழைப்பழம் ஆனான்.
ஆரவாரமும், கை தட்டலும், விசிலும் காட்சியமைப்பை ரணகளப்படுத்தின.
'அட்ரா சக்க... அட்ரா சக்க... அட்ரா சக்க...'
'பின்னி பெடல் எடுத்திட்டான் மிகிரன்...'
பலவாறாக குரல்கள் எழுந்தன.
போட்டியாளன் கை, கால்களை உதறினாலும், விடாப்பிடியாக நத்தை போல் முதுகில் சுமந்து, 20ம் சுற்றை வெற்றிகரமாக முடித்தான் மிகிரன்.
கரையில் ஒதுங்கிய இருவரையும் பற்றி துாக்கினார் கணேசன்.
ஒரு சிறுவன், 10 ரூபாய் நோட்டுகள் கோர்க்கப்பட்ட மாலையை, மிகிரனுக்கு அணிவித்தான்.
கட்டியணைத்த கணேசன், ''உன்னை போல், ஒரு நீச்சல் வீரனை இதுவரை பார்த்ததில்லை. 28 ஒலிம்பிக் மெடல்களை வாங்கிய, அமெரிக்க நீச்சல் மேதை மைல்கேல் பெல்ப்சின் சாயல், உன் நீச்சலில் தெரிகிறது. புது சரித்திரம் படைக்கப் போகிறாய் வாழ்த்துகள் செல்லமே...'' என்று புகழ்ந்தார்.
'மிகிரனின் வாழ்க்கையில் நீச்சல் பல அற்புதங்களை நிகழ்த்த காத்திருக்கிறது...'
அசரீரி குரல் சொன்னது!
- தொடரும்...
ஆர்னிகா நாசர்
