
முன்கதை: கிராமத்தில் நீச்சல் கற்ற சிறுவன் மிகிரனும், சிறுமி சிற்பிகாவும், சர்வதேச போட்டி பயிற்சிக்காக ராமேஸ்வரம் கடலில் நீந்தினர். அப்போது நீர் சுழலில் சிக்கி, கடல் கன்னி நகரத்துக்கு வந்தனர். ஆதரித்து சிறப்பாக உபசரித்து விருந்தளித்தார் மன்னர். ஆனால், கடும் கோபத்தில் இருவரையும் கொல்ல உத்தரவிட்டது சுறா மீன். இனி -
'நிறுத்துங்கள்...'
மிகிரன், சிற்பிகா அருகே உறங்கிய ஜில்லி எழுந்து வந்தது.
'ஜில்லி... ஏன் குறுக்கே வருகிறாய்...'
கடிந்தது ராஜமாதா சுறா மீன்.
'விருந்தாளிகளை நரித்தனமாக கொல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்...'
'இந்த ராஜமாதாவின் உத்தரவு மன்னரை விடவும் மேன்மையானது...'
'வேண்டுமென்றால், இருதரப்பும் பாதுகாப்புடன் இருப்பதற்கு, என்னால் இயன்ற யோசனையை கூறுகிறேன்...'
'என்ன யோசனை...'
கடுங்கோபத்தில் சீறியது ராஜமாதா சுறா மீன்.
'நம் நகரத்தில் இருந்து புறப்படும், மிகிரன், சிற்பிகாவுக்கு தற்காலிக மறதி நோயை ஏற்படுத்துவோம். கடல் நீர் சுழலில் சிக்கி, மீண்டும் கரை சேர்வது மட்டுமே நினைவில் இருக்கும். கடல் கன்னி நகரம் பற்றி, அறவே மறந்து விடுவர்...'
'ஜில்லி சொல்வது நல்ல யோசனை; சிறிது கருணையுடன், இந்த விஷயத்தை அணுகுங்கள் ராஜமாதா...' என்றார் மன்னர்.
'மிகிரனும், சிற்பிகாவும், கடல் கன்னி நகரத்தில், 15 நாட்கள் என்ன செய்தனர், யாரை சந்தித்தனர் என்பதை முழுதும் மறக்குமாறு செய்து விடு...'
கட்டளையிட்டது, ராஜமாதா சுறா மீன்.
அதற்கு பணிந்தது ஜில்லி.
'மின்சார ஈல் மீன்களே... நீங்கள் விலகி, செல்லலாம்...'
அடுத்து உத்தரவிட்டது ராஜமாதா சுறா மீன்.
விடிந்ததும், மிகிரனும், சிற்பிகாவும் காலை உணவை உண்டனர்.
'குழந்தைகளே... நீங்கள், ஊர் திரும்பும் வேளை நெருங்கி விட்டது...' என்றார் மன்னர்.
''ஆம் மன்னா... நாங்களும், அதே மனநிலையில் தான் உள்ளோம்...'' என்றான் மிகிரன்.
'இருவருக்கும், நினைவுப் பரிசாக, எண்ணெய் திமிங்கலங்களின் வாந்தி எனப்படும், 'ஆம்பர்கிரிஸ்' தருகிறேன். அது கிலோ, 36 லட்சம் ரூபாய் விலை மதிப்பு உடையது. ஆளுக்கு, ஐந்தைந்து கிலோ, பரிசளிக்கிறேன்...' என்றார் மன்னர்.
இரு உருண்டைகளை எடுத்து வந்து, ஆளுக்கு ஒன்று என வழங்கினார் மன்னர்.
ஆளுக்கொரு டால்பினில் ஏறினர்; கடல் வாழ், உயிரினங்கள் அணிவகுத்து இருவருக்கும் பிரியா விடை தந்தன.
டால்பின்களை தொடர்ந்து வந்து, 50 கடல் கன்னியர் வழி அனுப்பினர். கை அசைத்தவாறு கடலின் மேல்மட்டத்துக்கு சென்றனர்.
இருவரையும் கட்டிப்பிடித்து, 'இன்னும் சில நிமிடங்களில், என்னை மறந்து விடுவீர்; ஆனால், உங்களை எக்காலத்திற்கும் மறக்க மாட்டேன்...' என்ற ஜில்லி, இருவரின் கழுத்தை நீவியது. உடனே செவுள்கள் மறைந்தன; கண், வாய் மற்றும் உடலை ஒருமுறை நீவியதும் அனைத்து விசேஷ சக்திகளும் மறைந்தன. இருவரின் நெற்றிப் பொட்டை தொட்டு, 'உங்களுக்கு மறதி நோய் உருவாகட்டும்...' என பிரார்த்தித்தது ஜில்லி.
கடலின் மேற்பரப்புக்கு வந்ததும் இருவரையும் கடற்கரையில் விட்டு, தோழியருடன், கடல் கன்னி நகரத்தை அடைந்தது ஜில்லி.
கடற்கரையில் ஒதுங்கியிருந்த மிகிரனையும், சிற்பிகாவையும் நோட்டமிட்டார் கடலோர காவல் படை தலைவர்.
''நீங்கள் தானே, 15 நாட்களுக்கு முன், தனுஷ்கோடி கடலில் காணாமல் போன சிறுவர், சிறுமியர்...''
'ஆமாம்...'
''இந்த, 15 நாட்கள் எங்கிருந்தீர்...''
'ஞாபகமில்லை...'
இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
''இருவரின் உடலும் ஆரோக்கியமாக உள்ளது...'' என்றார் மருத்துவர்.
இருவரையும் கட்டியணைத்து, ''இந்த, 15 நாட்கள் எங்கே போயிருந்தீங்க, கன்னுக்குட்டிகளா...'' என அன்புடன் விசாரித்தார், கணேசன்.
'ஞாபகம் இல்லை... மாஸ்டர்...'
''நீங்கள், எடுத்து வந்த திமிங்கல வாந்தியை விற்று, நிரந்தர வைப்பு தொகையாக, மிகிரனுக்கு, 1.8 கோடி ரூபாயும், சிற்பிகாவுக்கு, 1.8 கோடி ரூபாயும் அவரவர் வங்கி கணக்கில் போட்டுள்ளேன்...''
'நன்றி மாஸ்டர்...'
இருவரும் பெற்றோரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை பார்த்ததும், 'செல்லங்களா... மறு பிறவி எடுத்து வந்துருக்கீங்க...' என ஆனந்த களியாட்டம் போட்டனர் பெற்றோர்.
மிகிரனும், சிற்பிகாவும் அவரவர் பெற்றோரை முத்தமிட்டனர்.
கிராம மக்கள் தாரை, தம்பட்டம் இசைத்தனர்; கெண்டை மேளம் முழங்கியது. இருவரும் திரும்பியதை மகிழ்வுடன் கொண்டாடினர்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில், 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கியது. நான்கு வகை நீச்சல் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றான் மிகிரன்; இரண்டு போட்டிகளில், தங்க பதக்கம் பெற்றாள் சிற்பிகா.
இருவரும், இந்திய தேசியக் கொடியை உயர்த்தி, 'ஜெய்ஹிந்த்...' என முழங்கினர்.
அப்போது கடல் கன்னி நகரத்தில் -
'நண்பர்களே... எங்களுடன் கொண்ட நட்பின் வெகுமானம், நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்கள். தொடர்ந்து, முயன்று வெல்லுங்கள்; கடல் கன்னி நகர ஆசி எப்போதும் உண்டு...' என்றது ஜில்லி.
- முற்றும்.
- ஆர்னிகா நாசர்