தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடல் கன்னி நகரம்! (9)

கடல் கன்னி நகரம்! (9)

கடல் கன்னி நகரம்! (9)


PUBLISHED ON : அக் 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: கிராமத்து கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் மிகிரனும், சிறுமி சிற்பிகாவும், போட்டிகளில் சாதனை படைத்தனர். அவர்களுக்கு உரிய உதவி பெற்று, நகரத்தில் நீச்சல் பயிற்சியில் சேர்க்க முயன்றார், கிராமத்து நீச்சல் பயிற்சியாளர் கணேசன். இனி -



நகரில் அழகிய நீச்சல் குளம்!அது, 50 மீட்டர் நீளமும், குறைந்தபட்சம், 2 மீட்டர் ஆழமும், அதிகபட்சம், 3 மீட்டர் ஆழமும் உடைய, 'பைபர் கிளாஸ்' குட்டை அது.கரையில் பயிற்சியாளர் நின்றிருந்தார்; அவரது கையில், 'ஸ்டாப் வாட்ச்' இருந்தது.மிகிரனையும், சிற்பிகாவையும் பயிற்சியாளரிடம் அழைத்து வந்து, ''வணக்கம்...'' என்றார் கணேசன்.பதில் வணக்கம் கூறினார் பயிற்சியாளர்.''இந்த சிறுவனும், சிறுமியும் சாய் வேலுக்காஸ் நிறுவனத்தால், 'ஸ்பான்சர்' செய்யப்பட்டவர்கள்; இவர்களுக்கு நீங்கள் தான், நீச்சலில் அனைத்து நுட்பங்களையும் கற்றுத் தர வேண்டும்...''மிகிரன் பக்கம் திரும்பினார் பயிற்சியாளர்.ஸ்பீடோ கால்சட்டையும், தலையில் சிலிகான் தொப்பியும், கண்களில் நீச்சல் கண்ணாடியும், கால்களில் துடுப்புகளும், நீருக்கடியில் வாயால் சுவாசிக்கும் ஸ்நோர்கெல் குழாயும் மாட்டியிருந்தான் மிகிரன். இடது கையில், 'ஸ்மார்ட் வாட்ச்' கட்டியிருந்தான்.சிங்கிள் பீஸ் நீச்சலாடை அணிந்திருந்தாள் சிற்பிகா. கையில் ஸ்மார்ட் வாட்ச். தலையில் மெஷ் பேப்ரிக் தொப்பி. கண்களில் நீச்சல் கண்ணாடி, கால்களில் துடுப்புகள், வாயில் ஸ்நோர்கெல்.'காலை வணக்கம் கோச்...' மிகிரனும், சிற்பிகாவும் கோரசாக கூறினர்.''கிராமத்து வாண்டுகளா... நீங்கள் நினைப்பது போல, நீச்சல் பயிற்சி எளிதானதல்ல. நீச்சலுக்கு முன், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன்பின், இரண்டு மணி நேரம் நீச்சல் பயிற்சி, உணவு கட்டுப்பாடும் தேவை...'''நீங்கள் சொல்வது அனைத்தையும், முழுமையாக கடைபிடிப்போம்...'''இங்கு நீச்சல் கற்றுக் கொள்ள வரும் அனைவரும் ஆங்கிலம் தான் பேசுவர். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் ஆங்கிலத்தை சரளமாக பேச கற்றுக் கொள்கின்றீரோ, அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களுடன் நட்பாகலாம். ஆங்கிலம் இல்லை என்றால், முற்றிலும் புறக்கணிக்கப்படுவீர்...''''கற்றுக் கொள்கிறோம் கோச்...'' என்றான் மிகிரன்.''என்னை, அங்கிள் என்றோ, சார் என்றோ அழைக்க கூடாது; எப்போதுமே, உங்களுக்கு கோச் தான். அப்படியே அழையுங்கள்...'''சரி கோச்...'''ஒரு நீச்சல் வீரனுக்கு, ஏழு அடிப்படை திறன்கள் தேவை...''இருவரும் கூர்மையாக கவனித்தனர்.''நீருக்குள் பிரவேசித்து மேல் மட்டம் வருதல், சுவாசத்தைக் கட்டுப்படுத்துதல், மிதத்தல், திரும்பல், நீரில் பாதுகாப்பாய் செயல்படுதல், கடைசியாக நீரிலிருந்து வெளியேறுதல்...''''சரி...''''காதுகளுக்குள் நீர் புகுந்து விடாமல் இருக்க, காது செருகிகளை அணிய வேண்டும்... ''நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது, வாந்தி, குமட்டல் மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நீர் காயங்கள் ஏற்படாமல், பாதுகாப்பாய் செயல்பட வேண்டும்...'' கூறியபடி, கணேசனிடம் திரும்பினார் பயிற்சியாளர்.''என்னிடம் இவர்களை விட்டதுடன், உங்கள் பணி முடிந்து விட்டது. இடையில் வந்து, என் பணியில் குறுக்கிடுவதை நான் விரும்ப மாட்டேன். அதனால, ஒன்ஸ் பார் ஆல் குட்பை மிஸ்டர் கணேசன்...''முறுவலித்து தலையாட்டினார் கணேசன்.மிகிரனுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.கணேசனை கட்டிக் கொண்டான்.''நோ சென்டிமென்ட்ஸ் மிகிரன்... நான் உங்கள் திறமை மீது, அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த பயிற்சியாளர் வைரத்தை, பட்டை தீட்டி பிரகாசிக்க வைக்கப் போகிறார். எனக்கு கொடுக்கும் மரியாதையில், இரண்டு பங்கை இவருக்கு கொடுங்கள்...'''அடுத்து, உங்களை எப்போது பார்க்கலாம்...'''குறைந்தது, மூன்று மாதங்களுக்கு, உங்களை பார்க்க வர மாட்டேன்... இருவரும் சொந்தக் காலில் நில்லுங்கள். அட்டவணைப்படி, நீச்சல் பயிற்சிக்கும், பள்ளிக்கும் செல்லுங்கள். வாழ்த்துகள் குழந்தைகளா...''

கணேசனுக்கு அழுகை வந்தது. அழுகையை பதுக்கினார்.''நான் கிளம்புகிறேன்...'''இன்னிக்கு மட்டுமாவது எங்களுடன் இருக்க கூடாதா...'''வாய்ப்பு இல்லை...'' நடந்தார் கணேசன்; கடைசியாக, ஒருமுறை திரும்பி பார்த்தார்; டாட்டா காட்டும் வாண்டுகளுக்கு பதில் டாட்டா காட்டினார்.கைகளை தட்டினார் பயிற்சியாளர்.''நல்லது... வாங்க... வாங்க... உங்களுக்கு ஒரு கேள்வி...'''கேளுங்க கோச்...'''நுாறு மீட்டர் ப்ரீ ஸ்டைல் இந்தியன் சாதனை என்ன...''யோசித்த படி, ''49.47 நொடிகள்...'' என்றான் மிகிரன்.''நுாறு மீட்டர் ப்ரீ ஸ்டைல், உலக சாதனை என்ன...'' என்று சிற்பிகாவை கேட்டார்.''44.94 நொடிகள்; பிரான்ஸ் நாட்டு வீரர் அமரி லீவாக்ஸ் தான், அந்த நீச்சல் சாதனையாளர்...'' என்று பட்டென்று கூறினாள்.''உலகத்திலேயே அதிவேக நீச்சல் வீரர் யார்...''''மைக்கேல் பெல்ப்ஸ்; அவர், 200 மீட்டர் ப்ரீ ஸ்டைலை, 1.42 நிமிடத்தில் நீந்திய சாதனையாளர்...'' என்றான் மிகிரன்.''பரவாயில்லையே... கிராமத்தில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு, இவ்வளவு விஷயங்கள் தெரிகின்றனவே...''''கிராமத்தானுக்கும், நகரத்தானுக்கும் அறிவு ஒண்ணு தான். பயன்படுத்துற விதத்துல தான், வித்தியாசம் இருக்கு...''''நீங்கள் இருவரும், 100 மீட்டர் ப்ரீ ஸ்டைலை எவ்வளவு நொடிகளில் நீந்துவீர்...'''அதை இப்போதே செய்து பார்த்து விடுவோம்...'இருவரும் நீந்தினர்.மிகிரன், 54.20 நொடிகளிலும், சிற்பிகா, 56.90 நொடிகளிலும், 100 மீட்டர் ப்ரீ ஸ்டைலை நீந்தி கடந்தனர். ''நீங்க ரெண்டு பேரும் ஒலிம்பிக்கை வேடிக்கை பார்க்க கூட வாய்ப்பில்லை...''''கோச், 44.50 நொடிகளில், 100 மீட்டர் ப்ரீ ஸ்டைலை நீந்தி காட்டுகிறேன்... இது எனக்கு நானே விடுகிற சவால்...''அமைதியாக கூறினான் மிகிரன்.''சவாலை ஏற்றுக்கொள்கிறேன்...'' கோச்சின் குரல் நாலா பக்கமும் எதிரொலித்தது!

- தொடரும்...- ஆர்னிகா நாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us