PUBLISHED ON : ஜன 14, 2011

முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் ஒரு கிழவன் தன்னுடைய வயதான மனைவியுடன் தனிமையில் வசித்து வந்தான். அவன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தக் காட்டிலே கிடைத்த மூங்கில்களை அறுத்து விற்பனை செய்து வந்தான்.
ஒரு சமயம் அவன் காட்டிற்குள் சென்று மூங்கில்களை வெட்டிக் கொண்டிருந்த போது ஒரு மூங்கிலுக்கு அடியில் பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று தோன்றியது. அது அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் அருகிலே சென்று அதை உற்றுப் பார்த்தான். அந்த மூங்கிலின் துளையில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
அவள் பத்து சென்டி மீட்டர் உயரமே இருந்தாள். கிழவன் வியப்படைந்தான். அவனுக்குக் குழந்தைகளில்லை. ஆகவே அந்தப் பெண்ணைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அவன் மனைவியிடம் தந்து பத்திரமாக வளர்க்கச் சொன்னான். அவர்கள் ஏகப்பட்ட பாசத்தைப் பொழிந்து அவளை வளர்க்கத் துவங்கினர். அதற்குப் பிறகு அவன் வெட்டிய மூங்கில் தண்டுகளில் இருந்து அவனுக்கு ஏகப்பட்ட தங்க நாணயங்கள் கிடைக்கத் துவங்கின. இதன் காரணமாக அவனுடைய வறுமை மெல்ல மெல்லப் பறந்தது.
அந்தப் பெண் வளர்ந்தாள். சாதாரண பெண்களைப் போல அவளது வளர்ச்சி மெதுவாக அமையாமல் அவள் ஓரிரண்டு ஆண்டுகளிலேயே மளமளவென வளர்ந்து விட்டாள். பருவ மங்கையாகி இளமை ததும்பும் பேரழகியானாள். அவளுக்கு இளவரசி என்று பெயரிடப்பட்டிருந்தது.
அவளைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர் கிழத் தம்பதியர். அவள் அழகு பற்றிய செய்தி மற்றவர்களுக்கும் மெல்லப் பரவியது. அவளை மணக்கப் பலர் துடி துடித்தனர். பல இளவரசர்களும் அரசர்களும் அதற்காகப் போட்டியிட்டனர். ஆனால், அவளோ யாரையும் லட்சியம் செய்வதே இல்லை!
இருப்பினும் சில இளவரசர்கள் விடாப் பிடியாக அவளைச் சுற்றி வந்தனர். அப்போது அவள் அவர்களிடம் மிகவும் கடுமையாகவும், யாராலும் நிறைவேற்றப்பட முடியாததாகவும் உள்ள நிபந்தனைகளை விதித்தாள்.
''இந்த உலகத்தில் இல்லாத பொருட்களை எவர் ஒருவர் கொண்டு வருகின்றாரோ அவரையே மணப்பேன்'' என்று கூறினாள். அதை அவர்களால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை. எனவே, நாளடைவில் இவள் நமக்குக் கிடைக்க மாட்டாள் என்று ஒதுங்கி விட்டனர்.
இளவரசியுடைய பேரழகு அந்நாட்டுச் சக்கரவர்த்தியின் காதுகளிலும் விழுந்தது. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும், திருமணம் செய்து கொள்ள மறுப்பதும் கூடச் சக்கரவர்த்தியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இளவரசியின் அழகின் மேல் ஆசை கொண்ட சக்கரவர்த்தி கிழவருக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். உடனடியாக கிழவர் தம்முடைய மகளைத் தமக்கு மணம் செய்விக்க வேண்டும் என்றும், இதற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
கிழவன் கவலையில் மூழ்கினான். சக்கரவர்த்தியின் ஆசையை அவன் தன் மகளிடம் கூறினான். ஆனால், இளவரசி சக்கரவர்த்தியை மணக்க மறுத்து விட்டாள்.
இதைக் கேள்விப்பட்ட சக்கரவர்த்தி பெரிதும் ஆத்திரம் அடைந்தார். தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டு கிழவன் இருக்குமிடம் சென்றார். அவளைச் சிறைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால், அவளோ மறைந்து போனாள்.
தம் தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது என்று எண்ணியவராக அரண்மனை திரும்பினார் அரசர். படை பரிவாரங்கள் திரும்பிச் சென்றவுடன் தம் மகள் மறைந்து போய் விட்டாளே என்ற துக்கத்துடன் வீட்டுக்கு வந்தனர் முதிய தம்பதியர்.
வீட்டுக்குள் முற்றத்தில் இளவரசி உட்கார்ந்திருந்தாள். ''மகளே...'' என்று கதறியவாறே கிழவி அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். இவ்வாறு இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. இதற்குள் அவளுடைய அழகு மேலும் மேலும் கூடிக் கொண்டேயிருந்தது.
அவள் பிரகாசிக்க ஆரம்பித்தாள். நான்காவது ஆண்டு நிறைவுற்றதும் ஓர் வசந்தத்தில் அவள் மிகவும் சோகமானாள். கவலை அவளை வாட்டியது. எப்போதும் வாடிய முகத்துடன் இருந்தாள். இரவு நேரத்தில் நிலவின் ஒளியை அவள் பார்த்தவுடன் அதிகச் சோகம் உடையவளானாள்.
இதையெல்லாம் கவனித்து கொண்டுதான் இருந்தான் கிழவன்.
''மகளே! உன் முகம் வாடி இருக்கிறது. உன் முகத்தில் சிரிப்பு இல்லை. உன் மனதில் மகிழ்ச்சி இல்லை. எதையோ எண்ணிப் பெரு மூச்சு விடுகிறாய். காரணம் என்ன?'' என்று அவன் கேட்டான்.
''அப்பா! நான் மானிடப் பெண் அல்ல. சந்திர மண்டலத்தைச் சேர்ந்த பெண். அங்கே நான் ஒரு முறை பாவம் செய்ய நேர்ந்தது. ஆகவே பூமியில் வந்து வாழும்படி சபிக்கப் பட்டேன். அதன்படியே வாழ்ந்தேன்.
''நான் சாப விமோசனம் பெறும் காலம் நெருங்கி விட்டது. அடுத்த மாதம் வரும் பவுர்ணமியில் என்னைச் சந்திர மண்டலம் அழைத்துச் செல்ல சந்திர மண்டல வாசிகள் வருவர். உங்கள் அன்பை எண்ணிப் பார்த்தேன்.
''உங்களைப் போல இனி என் மேல் அன்பு செலுத்துவார் யார்? உங்களை நிரந்திரமாகப் பிரியப் போகிறேனே, இனிமேல் நான் நினைத்தாலும், நீங்கள் நினைத்தாலும் நாம் சந்திக்கவே முடியாதே! பிரியப் போகிறோம் என்ற துயரம் என்னை வாட்டுகிறது. என் இதயத்துக்குக் கனம் ஏறுகிறது. ஆகவேதான் கவலைப்படுகிறேன்!'' என்றாள் இளவரசி.
கவலையில் ஆழ்ந்தான் கிழவன்.
''நீ நம் நிலவறையில் போய் மறைந்து கொள். சக்கரவர்த்தியின் உதவியுடன் பெரும் படை ஒன்றை இங்கே நிறுத்தி விடுகிறேன். நான் வீட்டுக்கு வெளியே காவல் இருக்கிறேன். உன் அம்மா வீட்டுக்குள் காவல் இருப்பாள். சக்கரவர்த்தி உன்னை காப்பார்!''
அவன் இவ்வாறு கூறினான். இளவரசி அந்தச் சோகத்திலும் சிறித்தாள்.
''அது முடியாது. நிச்சயமாக என்னைக் காப்பாற்ற உங்களால் முடியாது!''
''பார்ப்போம்!''
அடுத்த பவுர்ணமி வந்தது. கிழவன் விஷயத்தை அரசனிடம் கூறி உதவி கேட்டான். சக்கரவர்த்தியும் எந்தவித பகை உணர்ச்சியும் இன்றி, உடனே விரைந்து வந்தார். அவள் வீட்டைச் சுற்றி ஐயாயிரம் பேரைக் காவலுக்கு நிறுத்தினார். அவரும் உருவிய வாளுடன் குதிரை மேல் விழிப்பாகச் சுற்றி வந்தார்.
இளவரசி நிலவறையில் அடைந்து கிடந்தாள். கிழவன் வெளி வாசலில் நின்றான். கிழவி உள்ளே காவல் இருந்தாள். நள்ளிரவாயிற்று. விண்ணிலிருந்து வினோத ரதம் ஒன்று வந்து நின்றது. ஐந்து நிலவு மனிதர்கள் அதிலிருந்து இறங்கினர். வீரர்கள் உஷாராயினர். அவர்களைக் கொல்ல ஒரே நேரத்தில் அத்தனைப் பேரும் வில்லை நாண் ஏற்றிப் பூட்டினர்.
அவ்வளவு தான் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் கற்சிலைகளைப் போல் ஆயினர். உணர்வுகள் இருந்தும் செயலாற்ற முடியாத நிலை. அவர்கள் எந்தத் தடங்களுமில்லாமல் கிழவன் வீட்டுக்குள் பிரவேசித்து நிலவறையைத் திறந்து அவள் கையைப் பிடித்து அழைத்து வந்து ரதத்தில் ஏற்றினர்.
ரதம் வானில் விரைந்து பறந்து மறைந்தது.
அவர்கள் மறைந்தவுடன்தான் அவர்களால் இயங்க முடிந்தது. கிழவனும், கிழவியும் எழுப்பிய அந்த ஒப்பாரி, கேட்போர் இதயத்தைப் பரிதவிக்கச் செய்வதாக இருந்தது.
மன்னனும், படை வீரர்களும் கனத்த இதயத்துடன் கிழவனை தேற்றிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் விண்ணில் இருந்து அதே ரதம் வந்தது.
அதிலிருந்து இறங்கிய நிலவுப் பெண், ''அம்மா, அப்பா உங்களது அன்பு என்னை இங்கே மீண்டும் அனுப்பி விட்டது. இனிநான் உங்களோடே இருப்பேன். எந்த கோபமும் இன்றி உதவி செய்த சக்ரவர்த்தியை நான் மணக்கிறேன்...'' என்றாள். அதிர்ச்சியடைந்த சக்ரவர்த்தி, அப்படியே நிலவுப் பெண்ணின் கரம் பற்றிக் கொண்டு அந்த முதியோரையும் தன் ரதத்தில் ஏற்றியபடி அரண்மனைக்குச் சென்றான். ***
