PUBLISHED ON : ஜன 14, 2011

ஏழுகிணறு என்ற ஊரில் சீனு, வேணு, ராமு என்று மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டிருந்தனர்.
''வெகு தொலைவில் துறவி ஒருவர் உள்ளார். அவர் சோதனை வைத்தே சீடர்களைச் சேர்ப்பார். நாம் அவரிடம் செல்வோம். சோதனையில் வெற்றி பொற்றால் சீடர்களாகச் சேர்வோம். இல்லையேல் திரும்பி விடுவோம்,'' என்றான் சீனு. மற்ற இருவரும் அதற்குச் சம்மதித்தனர்.
பல நாட்கள் பயணம் செய்து துறவியின் குடிலை அடைந்தனர். ''எங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று வேண்டினர்.
அருகே கிடந்த மரக் குச்சி ஒன்றைக் கையில் எடுத்த துறவி, ''என் பின்னால் வாருங்கள்!'' என்றார். தோட்டத்திற்குச் சென்றார். அவர்களும் பின்னால் சென்றனர். அங்கே நிறைய பூக்கள் அழகாகப் பூத்திருந்தன. தன் கையிலிருந்த குச்சியினால் அந்தப் பூக்களை எல்லாம் அடித்து வீழ்த்தினார் அவர். அவர்கள் மூவரும் இதைப் பார்த்தனர். பிறகு அவர் குடிலுக்கு வந்தார். அவர்களும் அவருடன் வந்தனர்.
''நான் செய்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள்!'' என்றார் அவர்.
அதற்கு வேணு, ''மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவனாக நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அழிவு ஏற்படும். அதைத்தான் இந்தப் பூக்களின் நிலை காட்டுகிறது!'' என்றான்.
அடுத்ததாக ராமு, ''தோற்றத்தில் அழகாக இருப்பவை எல்லாம் உயர்ந்தவை அல்ல. அதைத்தான் இந்தப் பூக்களின் நிலை காட்டுகிறது!'' என்றான்.
மூன்றாவதாக சீனு, ''உயிர் இல்லாத குச்சி, உயிர் உள்ள பூக்களுக்குத் துன்பம் தந்தது. அறிவு இல்லாதவர்களால் அறிவு உள்ளவர்களுக்குத் துன்பம் தர முடியும். இதைத்தான் இந்தப் பூக்களின் நிலை காட்டுகிறது!'' என்றான்.
மகிழ்ந்த அவர், ''நீங்கள் மூவருமே சோதனையில் வெற்றி பெற்று விட்டீர்கள். உங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்கிறேன்!'' என்றார். ***
