PUBLISHED ON : ஜூலை 29, 2023

அலுவலகம் செல்வதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார் ரகு. பள்ளியில் படிக்கும் மகன் கணேசுக்கு அன்று விடுமுறை. அவசரமாக அருகில் வந்தவன், ''அப்பா... நிறைய பொது அறிவுக்கான வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார் ஆசிரியர். உங்க அலைபேசி வேணும்; கூகுள் இணைய தளத்தில் தேடி கண்டறிந்து தான் விடை எழுத முடியும்...'' என்றான்.
''பொது அறிவை வளர்க்கத் தானே வீட்டுப்பாடம் தரப்பட்டுள்ளது; அதற்கு விடையை, கூகுளில் தேடிப் பிடித்து எழுதுறது சரியில்லை; புத்தகங்களை வாசித்து அறிந்து கொள். அலுவலக பணிக்கு கட்டாயம் அலைபேசி எனக்கு தேவை; படிக்கும் போது, ஏதாவது சந்தேகம் எழுந்தால் அம்மாவின் அலைபேசியில் என்னை அழை...''
மகன் பதிலை எதிர்பார்க்காமல் புறப்பட்டார் ரகு.
ஏமாற்றத்துடன் நின்றான் கணேஷ்.
அலுவலகத்தை அடைந்ததும் முதல் வேலையாக அலைபேசியை, 'ஏரோப்ளேன்' மோடில் வைத்தார் ரகு. பின், சிரத்தையுடன் பணிகளை கவனித்தார். மாலையில் வீடு திரும்பியதும், மகனை தேடினார்; மனைவியிடம் விசாரித்தார்.
''வீட்டுப்பாடம் எழுத முற்பகலில் உட்கார்ந்தவன், மதியம் சாப்பிட மட்டும் தான் வெளியே வந்தான். இன்னும் சந்தேகங்கள் இருக்காம்; என் அலைபேசியில் இருந்து நிறைய முறை உங்களை அழைத்தான்...'' என்றார் மனைவி.
''நான் தான், அந்த அழைப்புகளை தவிர்த்தேன். எதற்கெடுத்தாலும், இணைய தளத்தில் தேடும் பழக்கத்தை அவன் மாற்றி கொள்ள வேண்டும். அதற்காகவே அப்படி செய்தேன்; பொது அறிவு விபரங்களுக்கு இணையத்தில் தேடி விடை எழுதுவது, நம்மையே ஏமாற்றி கொள்வதற்கு சமம்; இனி, புத்தகங்கள் படித்து, சுயபுத்தியுடன் எல்லாவற்றையும் அறிவான்...''
நம்பிக்கையுடன் கூறினார் ரகு.
குழந்தைகளே... இணையதளம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை உரிய வகையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். புத்தகங்கள் படித்து, அறிவு ஆற்றலை வளர்க்க முயலுங்கள்.
எம்.பி.தினேஷ்
