PUBLISHED ON : செப் 02, 2016

நான் 8-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் பள்ளியில் எங்களை சுற்றுலா அழைத்துச் சென்றனர். வகுப்பு ஆசிரியர் எங்களை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள மிருகங்களை காட்டிய ஆசிரியர், யானைகளிடம், நாம் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்; சிங்கத்திடம், கம்பீரத்தை கற்றுக் கொள்ள வேண்டும்; முயலிடம், வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மிருகமாக சுட்டிக் காட்டி அறிவுரை கூறினார்.
அப்போது ஒரு குறும்புக்கார மாணவன், 'சார் எனக்கொரு சந்தேகம்!' என்றான்.
'என்ன சந்தேகம்?' என்றார் ஆசிரியர்.
'சார் நீங்க எல்லாத்தையுமே மிருகங்க கிட்ட கத்துகிட்டா, உங்ககிட்ட எதை கத்துக்கிறது. அப்ப அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் குடுக்கறது வேஸ்டா?' என வேடிக்கையாக கூறினான்.
இதை எதிர்பார்க்காத ஆசிரியர் அசடு வழிந்தார். பின், அதை ஜாலியாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் அந்த மாணவனை பார்த்து, 'உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்க நான் முதல்ல கத்துக்கணும்' என்று கூற, நாங்கள் சிரித்த சிரிப்புக்கு அளவே இல்லை.
- எஸ்.ப்ரியா, கோட்டமங்கலம்.