sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

நெருப்புக்கோட்டை (5)

/

நெருப்புக்கோட்டை (5)

நெருப்புக்கோட்டை (5)

நெருப்புக்கோட்டை (5)


PUBLISHED ON : செப் 02, 2016

Google News

PUBLISHED ON : செப் 02, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்றவாரம்: கிழவி கூறியபடி இளங்குமரன் தாம்பாலத்தில் நெருப்பு துண்டுகளை வைத்து அதை சாப்பிட்ட தொத்தல் குதிரையை கண்டுபிடித்தான். பின், குதிரையில் ஏறி மின்னல் வேகத்தில் வந்து அரசரை சந்தித்தான். இனி-

''அத்தனை பெரிய குதிரை லாயத்தில், இந்தத் தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இந்தக் குதிரையைப் பார்த்தாலே உன்மீதுள்ள நம்பிக்கை குறைகிறதே குழந்தாய்!'' என்றார் வேதனையுடன்.

''அப்பா, இந்தக் குதிரையின் தோற்றத்தை பார்த்து, என் திறமையை எடை போடாதீர். வெளித் தோற்றம் எப்போதுமே ஏமாற்றத்தைத்தான் தரும். 'தரிசலான பொட்டல் வெளியின் அடியிலேதான் அபூர்வங்கள் புதைந்து கிடக்கும்' என்று கூறுவர்.

''அப்பா, நான் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். பல்வேறு இனத்தவர்கள் வாழும் நாடுகளைக் கடந்து போக வேண்டும். கம்பீரமான குதிரையும், பகட்டான ஆடை அலங்காரத்துடன் போனால், மக்களின் கவனம் என்மீது பதியும். அதனால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். சில வேளைகளில் குதிரை மீது சவாரி செய்வேன், சில நேரம் நடந்து போவேன். ஆகவே, என் பயணத்துக்கு இந்த கிழட்டுக் குதிரைதான் ஏற்றது!'' என்றான் இளங்குமரன்.

குதிரை மீது, பழைய சேணம் முதலியவற்றைப் பூட்டினான். உணவு மூட்டையையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டான். அதன் பிறகு, தந்தையை வணங்கி விடை பெற்றான்.

பெரியப்பாவான மரகதபுரியின் சக்கரவர்த்தி, மகேந்திரவர்மருக்கு அறிமுகக் கடிதத்தையும், மறக்காமல் வாங்கிக் கொண்டான். அப்பாவின் அருகிலே ஏளனச் சிரிப்புடன் நின்ற அண்ணன்கள் இருவரிடமும் விடைப்பெற்று புறப்பட்டான் இளவரசன் இளங்குமரன்.

ஆடி அசைந்தபடி, எந்த நேரத்தில் எந்தக் கல் இடறி தலைகுப்புற விழப்போகிறதோ என்று பார்த்தவர் பரிதாபப்பட, அந்தக் கிழட்டுக் குதிரை இளவரசனை சுமந்தபடி சென்றது.

பகலெல்லாம் இப்படிப் பயணம் செய்து கந்தர்வபுரியைக் கடந்து, இருட்டும் வேளையில் கானகத்தை அடைந்தான். அந்த எல்லைக்குப் பிறகுதான், காட்டாற்றுப் பாலம் உள்ளது. இளங்குமரன் தயங்கவில்லை. நன்றாக இருட்டிய பிறகும் தொடர்ந்து சென்றான்.

'எதற்காகப் பயப்பட வேண்டும்? கரடிக்குப் பயந்து பயணத்தை நிறுத்தக்கூடாது. ஆறிலும், சாவு நூறிலும் சாவு. ஆகவே, கரடிக்குப் பயந்து ஓடக்கூடாது' என்ற உறுதியோடு முன்னேறிச் சென்றான்.

நிலாக் காலம்; நிர்மலமான வானில், பாலாகப் பரவிக் கிடந்தது வெண் நிலவு. தூரத்தில் மூங்கில் பாலத்தின் நடுவிலே கரேலென்ற அது என்ன? உற்றுக் கவனித்தான் இளங்குமரன். கரடி! அவன் சகோதரர்களைக் கோழையாக்கி ஓட வைத்த அதே கரடி.

வழக்கம்போல அரசர், கரடி உடையில் குறுக்கு வழியில் விரைந்து வந்து, இளங்குமரன் முன் காத்திருந்தார்.

இளங்குமரன் குதிரையை முன்னேறும்படி முடுக்கினான். உயர்த்திய கையில் உருவிய வாள் இருந்தது. கிழட்டுக் குதிரையும் தயங்காமல் கரடியை நோக்கி நடந்தது.

ராட்சதக் கரடி குதித்தது. பின்னங்கால்களில் நின்றபடி கைகளை ஆட்டி ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தியது. உளி போன்ற பற்களைக் காட்டி உறுமிற்று. ஆனால், இளங்குமரன் கொஞ்சமும் அஞ்சவில்லை. வெற்றி அல்லது வீர மரணம் என்ற உறுதியோடு வாளைச் சுழற்றி கரடியைக் தாக்க முற்பட்ட போது...

சட்டென்று ஒரு மனிதக்குரல், ''மகனே! நிறுத்து. வாளை வீசிவிடாதே! நான் உன் தந்தை; கரடியல்ல!'' என்றது.

கரடியின் தோற்றத்தினால் பீதியடையாதவன் இப்போது கரடியிடமிருந்து வெளிப்பட்ட மனிதக் குரலை கேட்டு சற்று பயந்து போனான்.

தலையை முறுக்கித் திருகித் தனியாக எடுத்து கைகளில் வைத்துக்கொண்டார் அரசர். கரடியின் உடலில் மன்னரின் தலை எட்டிப் பார்த்தது!

இந்த விந்தையைக் கண்ட இளங்குமரன் சட்டென, குதிரையிலிருந்து கீழே குதித்தான். உருவியிருந்த வாளை உறைக்குள் போட்டான். ஓடோடி வந்தான். தாவி வந்து, மகனை தழுவிக்கொண்டார் மன்னர்.

''குமரா! உன் சகோதரர்கள் கரடியைக் கண்டதுமே கதிகலங்கிப் போய் ஓட்டமெடுத்தனர்; யோசிக்கவில்லை. கரடியோடு போராடி அதை வீழ்த்திவிட்டு முன்னேற வேண்டும் என்ற வீரம் பிறக்கவில்லை. உயிர் மீது ஆசை; சுக வாழ்விலே மோகம் அவர்களை அரண்மனைக்கு ஓடிவரும்படி செய்துவிட்டது. அவர்களைப் போலவே அவர்களுடைய குதிரையும், கரடியைக் கண்டதும் முன்னேறாமல் அரண்டு, மிரண்டு திரும்பி ஓடத் தயாராகி விட்டது.

''ஆனால், உன் குதிரை உன்னைப் போலவே உறுதியோடு கரடியை நோக்கி முன்னேறியது; மிரளவில்லை. நீயாக இக்குதிரையைத் தேர்ந்தெடுத்து இருப்பாயானால் நீ புத்திசாலி; அறிவாளி! சக்கரவர்த்தியாவதற்கான தகுதி உனக்கு உண்டு. ஆகவே, நீ உன் பயணத்தை தொடரலாம்,'' என்றார்.

கரடித் தோல் போர்த்தி நிற்கும் தன் தந்தையை காணக் காண இளங்குமரனுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. அதே நேரம், பெருமையாகவுமிருந்தது. தனக்கு முன்னால் கரடி வேஷத்தில் அவரால் இங்கு எப்படி வர முடிந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டான். பிறகு, அவர் பாதங்களை தொட்டு வணங்கி விடை பெற்று புறப்பட்டான்.

உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டு, ''மகனே! வெற்றியை நோக்கிச் செல்லும் உனக்கு சில அறிவுரைகள் வழங்க விரும்புகிறேன். கவனமாக கேட்டுக்கொள். பல நாடு நகரங்களையும், பல இன மக்களையும் சந்திக்கப் போகிறாய். உன் நட்பை நாடிப் பலர் வருவர். உன் மனமும் கூட, தனிமையைப் போக்க யாராவது துணையாக வரமாட்டார்களா என்று ஏங்கலாம்.

''நீ சந்திப்பவர்களில் நல்லவர்களுமிருப்பர்; கெட்டவர்களுமிருப்பர். ஆகவே, நட்பாக்கிக் கொள்ள விரும்பும்போது கவனமாக இரு. செம்பட்டை முடியுடையோரை நம்பாதே. அதே போல, தலையிலும், முகத்திலும் முடியே இல்லாமல் மழுமழுவென்ற மொட்டைத் தலையர்களையும் அண்ட விடாதே.

''கன்னத்தில் முடி இல்லாதவர்களை ஜென்மத்திலும் நம்பாதே என்பது முதுமொழி. கன்னத்திலும் இல்லாமல், தலையிலும் முடியில்லாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள் கொலைக்கும் அஞ்சாத கொடியவர்கள். போகும் வழியில் இத்தகைய மனிதர்கள் எதிர்ப்படுவர். அவர்கள் பேச்சைக் கேட்காதே. அவர்களை நண்பர்களாக ஏற்காதே.

''இந்தக் குதிரை உனக்கு ஒரு வரப்பிரசாதம். துன்பம் நேரும் வேளையில், உனக்குத் துணையாயிருக்கும். அறிவுரை வழங்கும்; ஆறுதல் அளிக்கும். என் இளமைப் பருவத்தில் இது எனக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறது. மின்னல் வீரன், என்பது இதன் பெயர். ஆனாலும், உன் துணிவையும், தைரியத்தையும் கொண்டே நீ காரியங்களைச் சாதிக்க வேண்டும். ஆகவே, சில காலம் இக்குதிரை தன் சக்திகளைப் பயன்படுத்தக் கூடாது என்று இதனிடம் கூறுகிறேன். இந்தக் கரடித்தோல் உடையையும் எடுத்துச் செல். ஏதாவது ஒருசமயம் இது உதவியாயிருக்கும்,'' என்று குதிரையை தட்டிக் கொடுத்தார்.

''சென்று வா மகனே! மீண்டும் நாம் எப்போது சந்திப்போம் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஆனால், ஆண்டவன் துணை உனக்கு உண்டு! நான் கூறியவற்றை மறக்காதே! அதன்படி நடந்து கொள்!'' என்று குதிரையைத் தட்டிவிட்டார். மின்னலெனப் பாய்ந்து முன்னேறினான் மின்னல் வீரன்.

இரவு, எங்கும் நிற்காமல் சென்றது மின்னல் வீரன். களைப்பாயிருந்தால் தன் முதுகிலேயே படுத்துக்கொள்ளும்படி கூறியது குதிரை. இளங்குமரனும் அவனை அறியாமலே அதன் பரந்த முதுகில் சரிந்து, பிடரியைப் பற்றியபடி கண்ணயர்ந்து போனான். எத்தனை நேரம் அப்படித் தூங்கினான் என்பது அவனுக்கே தெரியாது.

கண்விழித்தபோது, விடிந்து வெகுநேரமாகி இருந்ததைக் கண்டான். கானகத்தின் மையப்பகுதிக்கு வந்திருப்பதையும், அங்கு மரங்களும், காட்டுக் கொடிகளும் அடர்ந்து கிடப்பதையும் கண்டான்.

பாதை என்று எதுவுமே இல்லை. மரங்களிடையே புகுந்து, பாதை உண்டாக்கியபடி போயிற்று குதிரை. அவ்வப்போது நிசப்பதத்தைக் கலைத்து விநோதமான பறவைகளின் ஒலி கேட்டது. எங்கோ தூரத்தில் கொட்டும் நீர்வீழ்ச்சியின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

குதிரை போகும் வழியில் முறியும் கிளைகளின் ஒலியும், புதர்களில் பதுங்கியுள்ள காட்டுப் பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறக்கும் போது உண்டாகும் ஓசையுமாக, அந்தக் கானகத்தினுள் அதன் அழகை ரசித்தபடி போய்க் கொண்டிருந்த போது...

திடீரென்று, எங்கிருந்தோ ஒரு மனிதன் தோன்றினான்.

குதிரை கணைத்தபடி இரண்டடி பின்வாங்கியது.

- தொடரும்...






      Dinamalar
      Follow us