
எறும்பு, கரையானுக்கு புற்று கட்டும் திறன் இருக்கிறது. அதுபோல, பீவர் என்ற நீர்எலிக்கு அணை கட்டும் ஆற்றல் உள்ளது. இது ஐரோப்பா, வட அமெரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது. குண்டு சொம்பு போன்ற தலை, முயலுக்கு உள்ளது போல் பிளவுபட்ட வாய் உடையது. அதில், உளி போல முன் பற்கள் அமைந்திருக்கும். கீழ் உதட்டு பகுதியிலும் பற்கள் உண்டு.
உடலின் மேல் பழுப்பு நிற உரோமம் அடர்த்தியாக காணப்படும். குட்டை, தட்டையான வாலை உடையது. எலி குடும்பத்தை சேர்ந்த அபூர்வ விலங்கினம். கண்களில், இரண்டு இமைகள் இருக்கும். கண்ணாடி திரை போன்ற மென்தோல் கண்களின் மீது அமையப் பெற்றது. தண்ணீரில் நீந்தும் போது சேறு, துாசி கண்களில் படாதபடி, இந்த திரை பாதுகாக்கும்.
இதற்கு பார்க்கும் திறன் குறைவு. ஆனால், நுகரும் ஆற்றலும், கேட்கும் திறனும் அதிகம். தண்ணீருக்குள், 15 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி இருக்கும்.
பற்கள் கூர்மையாகவும், நுனி சற்று வளைந்து வலிமையாக இருக்கும். சாகும் வரை பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். இதன் துணையால், பெரிய மரங்களையும் சாய்த்து விடும். வாய்க்குள், தொங்கும் திரை போன்ற அமைப்பு காணப்படுகிறது. அது மரத்தை கடித்து சிதைக்கும் போது, துாள் தொண்டைக்குள் சென்று விடாதபடி பாதுகாப்பு தருகிறது.
முன்னங்கால்களால் உணவை பிடித்து, அணில் போல மரத்தில் அமர்ந்து உண்ணும். வாலில் உரோமம் அடர்த்தியாக இல்லை. அமர்ந்த நிலையில் முட்டு கொடுக்கும் உறுப்பாக மூன்றாவது கால் போல உதவுகிறது. வாலால் தண்ணீரை தட்டி வருகையை தெரிவிக்கும்.
வாழிடத்தை அற்புதமாக வடிவமைக்கும் திறன் உடையது. இதன் வாழிடத்திற்கு, 'லார்ட்ஸ்' என்று பெயர். நீருக்கு நடுவில் குடிசை போல அமைக்கும். காற்று உள்ளே வருவதற்காக உச்சியில் துவாரம் போட்டிருக்கும். இருப்பிடத்தின் வாசல்களை தண்ணீருக்குள் அமிழ்ந்திருப்பது போல் அமைக்கும். மேடாக இருக்கும் நடுப்பகுதியில், குட்டிகள் வளரும். உணவும், இங்கு தான் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆற்றின் குறுக்கே இந்த விலங்கு அற்புதமாக அணை அமைக்கும். மரக்கிளை, கல், சேறு வைத்து கட்டும். இவ்வாறு அற்புத திறன் பெற்றுள்ள இந்த உயிரினத்திற்கு முக்கிய எதிரி கரடி, ஓநாய் மற்றும் மனிதன்.
விந்தையான வாழ்க்கை முறை உடைய உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்.
- திருமுகில்