
தானாக்குளம் கிராமத்தில் வசித்து வந்தான் வைரவன். அவன் வியாபாரத்தில் எல்லாம் பொன்னாக மாறியது.
பெரிய மளிகைக் கடை வைக்கும் அளவு உயர்ந்தான். செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தான்.
யோசனையின்றி வியாபாரத்தில் அகலக்கால் வைத்தான். அது நட்டத்தில் முடிந்தது. சரியாக கொள்முதல் செய்ய முடியவில்லை. மக்கள் அவன் கடையை புறக்கணித்தனர்.
மிகவும் நொடித்துப் போனான் வைரவன். வீட்டை விற்று, சிறு குடிசையில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. வெளியில் செல்லாமல் முடங்கிக் கிடந்தான்.
அவன் நிலை அறிந்தான் நண்பன் தங்கமணி. வருந்தியபடி வைரவனை காண வந்தான். நம்பிக்கை இழந்திருப்பது கண்டு ஆறுதல் கூறினான்.
''வியாபாரத்தில் வெற்றியும், தோல்வியும் சகஜம். முடங்கிக் கிடக்காதே... சிறிது பணம் தருகிறேன். மீண்டும் வியாபாரம் துவங்கு; நல்ல நிலைக்கு வந்த பின், திருப்பிக் கொடுத்தால் போதும்...''
''எனக்கு நேரம் சரியில்லை. மீண்டும் நஷ்டமானால் கடன்காரன் ஆகிவிடுவேனே... அந்த நிலை வேண்டாம்...''
நம்பிக்கை இழந்து நேரம் மீது பழி போட்டு பேசினான் வைரவன்.
நண்பனை திருத்த திடமாக யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாக, ''வா... சற்று காலாற நடந்து வரலாம்...'' என்று அழைத்துச் சென்றான்.
வழியில் கரையான் புற்று ஒன்று கண்ணில் பட்டது.
'இது தான் நல்ல சமயம்' என எண்ணினான் தங்கமணி.
வேகமாக சென்று கரையான் புற்றை கலைத்தான்.
''உனக்கு என்ன ஆயிற்று; ஏன் புற்றை கலைத்தாய்...''
ஆட்சேபமும், கண்டனமும் தெரிவித்தான் வைரவன்.
''ஒன்றுமில்லை நண்பா... நடக்க இருக்கும் வேடிக்கையை மட்டும் பார்...''
சிறிது நேரம் புற்றையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்.
கலைத்த புற்று மீண்டும் அதிவேகமாக உருவாகியது.
''சிறிய உயிரினமான கரையானுக்கு இருக்கும் நம்பிக்கை கூட, உனக்கு இல்லையே. கலைத்த புற்றை எவ்வளவு வேகமாய் எழுப்பி விட்டது பார்த்தாயா... நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை; தீமையை கண்டு அஞ்சாதே... நஷ்டம் ஏற்படுவது சகஜம்; அதற்காக கவலையில் விழுவது சரியில்லை. வியாபாரத்தை துவங்கு. நம்பிக்கை இழக்காதே...'' என கூறினான் தங்கமணி.
''உன் அறிவுரை என்னை காத்தது. தக்க சமயத்தில் தக்கவாறு துாண்டி விட்டாய். நாளையே வியாபாரத்தை துவங்குகிறேன்...''
மனம் திருந்திய நண்பனை கண்டு மகிழ்ந்தான் தங்கமணி.
சுட்டீஸ்... தன்னம்பிக்கை இருந்தால் எப்போதும் ஜெயிக்கலாம்!
- எஸ்.சுரேஷ் பாபு