
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, பொறையார் தவசுமுத்துநாடார் உயர்நிலைப் பள்ளியில், 1955ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வந்தார் என் தந்தை வைத்தியலிங்கம்.
ஒவ்வொரு மாதமும், 3 ரூபாய் 75 காசுகள் கட்டணமாக செலுத்தி பயண அட்டை வாங்கித் தந்திருந்தார். பள்ளிக்கு காரைக்காலில் இருந்து பேருந்தில் சென்று வருவேன்.
அப்பாவின் நண்பர், 'என்ன படிக்கிறாய்...' என்று அவ்வப்போது விசாரிப்பார். படிக்கும் நிலையை சொல்வேன். பின், கல்லுாரியில் சேர சென்னை சென்று விட்டேன். விடுமுறையில் திரும்பியதை கேள்வியுற்று வந்தவர், 'அப்படி என்ன தான் வெளியூரில் இரண்டு ஆண்டாய் படிக்கிறாய்...' என்று கேட்டார். மென்மையாக, 'முதலில் சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில் பி.யு.சி., முடித்து, லயோலா கல்லுாரியில் பி.ஏ., சேர்ந்திருக்கிறேன்...' என்று பதில் அளித்தேன்.
உடனே என் தந்தையிடம், 'நண்பரே... எஸ்.எஸ்.எல்.சி., என்ற நான்கு எழுத்தை, உள்ளூரில் நான்கு ஆண்டுகளாக படிக்கிறான் என் மகன். குறைந்த எழுத்துகளை வெளியூரில் படிப்பதாக கூறுகிறான் உங்கள் மகன்.
இதுபோல் படிப்பதற்கு பணத்தை வீணாக செலவு செய்கிறீரே...' என்று ஆதங்கப்பட்டார். அவருக்கு தக்க பதில் சொல்ல சொற்கள் கிடைக்காமல் தவித்து நின்றேன்
என் வயது, 86; புதுச்சேரி அரசில் சட்டத்துறை செயலராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். ஆய்வு, பயணம், கட்டுரை, கதைகள், வரலாறு போன்ற பொருண்மைகளில், 29 நுால்கள் எழுதியுள்ளேன். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளேன். ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், அந்த சம்பவம் நினைவுக்கு வந்தால், அடக்க முடியாமல் சிரித்து மகிழ்கிறேன்.
- வி.நாராயணசாமி, புதுச்சேரி.