
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ராஜா சேதுபதி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 10ம் வகுப்பு படித்த போது, சீனா போருக்கு வந்தது. நாடே வெகுண்டு எழுந்திருந்தது. எங்கும் அது பற்றிய பேச்சாகவே இருந்தது. கொந்தளிப்புடன் காணப்பட்டது.
எங்கள் வகுப்பில், 45 பேர் இருந்தோம். அந்த யுத்தம் பற்றி, எழுச்சி மிக்க கவிதை எழுதி வரக் கூறினார் தமிழாசிரியர் அம்பிகாபதி. அதன்படி எழுதிய கவிதையை மறுநாள் கொடுத்தேன். எழுதாதோரை கோபத்தில் கண்டித்து, என் கவிதையை வாசிக்க சொன்னார்.
சினிமா பாடல் ராகத்தில் கவிதையை உற்சாகம் பொங்க பாடினேன். மெய்மறந்து தலையை ஆட்டி ரசித்தவர், 'தொடர்ந்து பயற்சிகள் செய்து, இதுபோல் நன்றாக எழுது...' என வாழ்த்தினார். அதை தவறாது பின்பற்றினேன்.
தற்போது, என் வயது, 78; தேசிய நுாற்பாலைக் கழகத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றேன். பல்வேறு பொருண்மைகளில், 200க்கும் அதிகமாக கவிதைகள் படைத்துள்ளேன். சிறுகதை, நகைச்சுவை நாடகங்கள் எழுதி இயக்கி, நடித்து இருக்கிறேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய விருதும், பரிசும் பெற்றுள்ளேன். இவை, அந்த தமிழாசிரியர் தந்த ஊக்குவிப்பால் தான் நிகழ்ந்தது. முன்னேற நம்பிக்கையூட்டியவர் பாதங்களில் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- ஏ.சி.ஆர்.பிரேம்குமார், செங்கல்பட்டு.