PUBLISHED ON : ஏப் 04, 2026

கர்நாடக மாநிலம், பெங்களூரு, நியூ ஹொரைசன் பொதுப் பள்ளியில், 2004-ல், 9-ம் வகுப்பு படித்தேன். என் கையெழுத்து அழகாக இருந்ததால், கரும்பலகையை அலங்கரிக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது.
கரும்பலகையில், 'அன்றைய சிந்தனை' மற்றும் பல தகவல்களை அழகாக எழுதி வைப்பது என் வழக்கம். ஒரு நாள், நான் எழுதி வைத்திருந்ததை, பள்ளிப் பணியாளர் தெரியாமல் அழித்துவிட்டார்.
இதை அறியாத கணித ஆசிரியை செங்கொடி, என்னை கண்டித்தார். என் உழைப்பு வீணான வருத்தத்தில், ஆசிரியையிடம் கோபப்பட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். இதை கேள்விப்பட்ட, வகுப்பு ஆசிரியை அஜிதா, என்னை அழைத்தார்.
'உன் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அமைதியாகவும், மரியாதையாகவும் விளக்க வேண்டும்; கோபம் தீர்வாகாது. எதிர்காலத்தில் அலுவலகப் பணிகளில் இவ்வாறு பல சவால்கள் வரும். அப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்...' என, அன்பாக அறிவுரை வழங்கினார். என் தவறை உணர்ந்து, ஆசிரியைகளிடம் மன்னிப்பு கேட்டேன்.
தற்போது எனக்கு, 36 வயது. மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதுடன், மாணவர்களுக்கு கணிதப் பாடமும் கற்றுத்தருகிறேன். 'எப்போதும் கோபத்தை குறைத்து, அமைதியை கடைப்பிடித்தால் வாழ்வில் பெரிய சிகரங்களை எட்டலாம்' என, வகுப்பாசிரியை அஜிதா கற்றுக்கொடுத்த நிதானத்தை, என் இரு பணிகளிலும் கடைப்பிடிக்கிறேன். அதுவே, என் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
- எஸ்.ஜெயசங்கர், சென்னை. தொடர்புக்கு: 99948 21793
