PUBLISHED ON : ஏப் 04, 2026

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. கோவிலில் கொள்ளையடிக்க மூன்று திருடர்கள் திட்டமிட்டதை தெரிந்து கொண்ட நாடோடி, அதை முறியடிக்க வியூகம் வகுத்தான். இனி -
கோ வில் கருவறையில் சாமி நகைகளை திருடி, கோணிப்பையில் போட்டு மூன்று திருடர்களும் வெளியேற முயன்றனர். அந்த சமயத்தில், கோவில் நுழைவுக் கதவைத் திறந்து, அரண்மனை வீரர்களுடன் உள்ளே நுழைந்தான், படைத்தளபதி.
வெளியேற முயன்ற திருடர்கள், அரண்மனை வீரர்களைப் பார்த்து திகைத்துப் போயினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.
அவர்களை படைத்தளபதி எச்சரித்தான்.
'டேய்... மூணு பேரும் அப்படியே நில்லுங்க. தப்பிச்சு ஓடப்பார்த்தால், உங்க உயிரை விடும்படியா ஆகிடும்...'
அரண்மனை வீரர்கள் சுற்றி வளைக்க, பயந்து போன மூன்று திருடர்களும், சரணடைந்தனர்.
மூன்று திருடர்களையும் கைது செய்த படைத்தளபதி, அவர்களை மன்னர் முன் நிறுத்தினான். கோவில் நகைகளை ஒப்படைத்து, நடந்த விபரங்களை மன்னரிடம் கூறினான்.
நாடோடியின் செயல், மன்னருக்கு தெய்வச் செயலாக தோன்றியது.
'நம் காவல் தெய்வம் தான் கோவில் நகைகளை காப்பாற்றியுள்ளது. தெய்வம் நமக்குத் துணையாக இருக்கும் வரை, எந்த பிரச்னையும் வராது...'
மனப்பூர்வமாக தெய்வத்திற்கு நன்றி கூறினார், மன்னர்.
திருடர்கள் மூவரையும் சிறையில் தள்ள உத்தரவிட்ட மன்னர், சாமி நகைகளை கோவில் பூசாரியிடம் ஒப்படைத்தார்.
இதைப்பார்த்து மனம் நிம்மதி அடைந்த நாடோடி, அங்கிருந்து புறப்பட்டான்.
ஒவ்வொரு நாளும் கிடைக்கும் புதுப்புது விநோதமான அனுபவங்களை அசை போட்டபடி, பயணத்தை தொடர்ந்தான். இரண்டு நாட்களில், ஒரு புதிய நாட்டிற்குள் நுழைந்தான்.
அந்த நாட்டின் தலைநகரம், வழக்கத்திற்கு மாறாக கலகலப்பின்றி, களையிழந்து காணப்பட்டது. மக்களின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. நாடோடிக்கு குழப்பம் ஏற்பட்டது.
எதிரே தென்பட்ட முதியவரிடம் விசாரித்தான்.
'மக்கள் அனைவரும் சோகமாக காணப்படுகின்றனரே... என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா...' என்றான், நாடோடி.
நாடோடியை உற்றுப்பார்த்த முதியவர், 'நீ இந்த மரகத நாட்டிற்குப் புதியவனா...' என்றார்.
'ஆம். நான் ஒரு நாடோடி. இன்று தான் இந்த நாட்டிற்கு வந்தேன்...'
'எங்கள் மன்னர் ராஜசிம்மவர்மன், மிகவும் நல்லவர். சில மாதங்களுக்கு முன், திடீரென அவர் காணாமல் போய்விட்டார். எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் அனைவரும் மிகவும் கவலையுடன் இருக்கிறோம்...'
நடந்ததை நாடோடியிடம் சுருக்கமாக கூறினார், அந்த முதியவர்.
'கவலைப்படாதீர்... உங்கள் மன்னர், இன்னும் சில நாட்களில் திரும்பி வந்து விடுவார்...'
நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் ஆறுதல் கூறினான், நாடோடி.
'அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்...'
அங்கிருந்து கவலையுடன் அகன்ற முதியவரை பார்த்தபடியே நின்றான், நாடோடி.
'மன்னரை நினைத்து, அந்நாட்டின் குடிமக்கள் கவலைப்படுகின்றனர் என்றால், அந்த மன்னர் மிகவும் நல்லவராகத்தான் இருப்பார். அவரை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்...' என, மனதிற்குள் உறுதி ஏற்றான், நாடோடி.
அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்து, தீவிரமாக யோசித்தான். அந்த சமயத்தில், தேவதையின் நினைவு வந்தது. உற்சாகமடைந்தான் நாடோடி.
நகரின் எல்லையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேடி விரைந்தான்.
ஓரிடத்தை தேர்வு செய்து, அங்கு நின்றான்.
மனதார தேவதையை நினைத்து, 'தேவதையே, வா...' என, அழைத்தான்.
உடனே, அங்கு தேவதை தோன்றியது.
'என்னை அழைத்த காரணம் என்னவோ... என்ன உதவி வேண்டும்...' என்று, புன்னகையுடன் கேட்டது, தேவதை.
'இந்த நாட்டின் மன்னர் ராஜசிம்மவர்மன் காணாமல் போய்விட்டார். அவர் மிகவும் நல்லவர் என்று கேள்விப்பட்டேன். நல்லவர்களைக் காப்பாற்றுவது நம் கடமையல்லவா...' என்றான், நாடோடி.
'உண்மைதான். நல்லவர் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும்...' என்றது, தேவதை.
'மன்னர் இப்போது எங்கே இருக்கிறார்...' என்றான், நாடோடி.
தேவதை தன் வலது உள்ளங்கையை அவனுக்குக் காட்டியது. அதில் காட்சிகள் விரிந்தன...
ஒரு சிறிய மலை மீது, சிதைந்து போன ஒ ரு கோட்டை தெரிந்தது. அதற்குள், ஒரு அறையில் மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்தார். மன்னரின் முகத்தில், சோகம் கவிழ்ந்து இருந்தது. சிறை அறையின் வெளியே, இருவர் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
'இந்த கோட்டை எங்கிருக்கிறது...'
தேவதையிடம் கேட்டான், நாடோடி.
'இங்கிருந்து, வடகிழக்கு திசையில் இரண்டு மைல் தொலைவில் உள்ளது...' என்றது, தேவதை.
அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று விவரித்து, அங்கிருந்து தேவதை மறைந்தது.
'அடுத்து என்ன செய்வது' என்று சிந்தித்தபடி, புறப்பட தயாரானான், நாடோடி. அப்போது தான், அதை கவனித்தான்.
அவன் காலடியில் ஒரு நாகப்பாம்பு, படமெடுத்தபடி கொத்துவதற்கு எத்தனித்தது. பயத்தில் உடல் வியர்த்து நின்றான், நாடோடி.
- தொடரும்...
- ஆர்.வி.பதி
