
அசையாக்கரடி என்ற விலங்கை ஆங்கிலத்தில், 'ஸ்லாத்' என்பர். இது, நீண்ட நேரம் ஒரே இடத்தில், அசையாமல் இருக்கும். மிக மெதுவாக நகரும். பொதுவாக, 60 முதல், 80 செ.மீ., நீளம் உடையது. இனத்தைப் பொறுத்து, 8 கிலோ வரை எடை இருக்கும். வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த, ஆறு இனங்கள் உள்ளன.
இதில், மூன்று விரல்கள் உடைய, 'பிராடிபொடிடீ' குடும்பத்தைச் சேர்ந்த, மூவிரல் அசையாக்கரடி ஒரு வகை. இருவிரல் உடைய, 'மெகலோனிசிடீ' அசையாக்கரடி ஒரு வகை. இது, சற்று வேகமாக இயங்கும். பெரிதாகவும் காணப்படும். மத்திய மற்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படுகிறது.
பொதுவாக, மரத்தின் மீது நாட்களைக் கழிக்கும். வாரத்திற்கு ஒருமுறை, கழிவு அகற்ற தரையில் இறங்கும். ஒரு ஆண், ஒரே பெண்ணுடன் வாழும்.
ஒரு நாளைக்கு, 16 மணி நேரம் உறங்கும். தாவரம், பூச்சி மற்றும் பல்லியையும் உண்ணும். உடல் இயக்கம், மிகவும் மெதுவாக இருப்பதால் உண்ணும் உணவுகள், செரிக்க, 1 மாதம் கூட ஆகும்.
- விஜயன் செல்வராஜ்