
சென்னை, பெரம்பூர், லுார்து மாதா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 11ம் வகுப்பு படித்தேன். ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வகுப்பு நடக்கும். ஆசிரியை விமலா பாடங்களை நடத்திய பின், பொது அறிவு தொடர்பாக உரையாடுவார்.
அன்று சுவாரசியமாக, 'பிடித்த சினிமா பாடல் எது...' என்று கேட்டார். என் முறை வந்ததும், கற்பகம் படத்தில், 'மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா...' என்றேன். ரசித்தபடி, 'உனக்கு பொருத்தமான பாடல் தான்...' என சிரித்தார்.
யாராவது உணர்ச்சி மயமாக பேசுவதைக் கேட்டால், என் கண்களில் நீர் குளம் கட்டி விடும். இதை அறிந்திருந்த ஆசிரியை, விளையாட்டாக சீண்டுவார். என் பலவீனமாக அது இருந்தது.
ஒருநாள், தனியாக அழைத்து, 'எதற்கெடுத்தாலும் அனாவசியமாக கண்ணீர் விடுவதை மாற்ற முயற்சி செய். இல்லையெனில், வாழ்வில் துன்பமே புலப்படும்...' என பரிவுடன் அறிவுரை வழங்கினார். எவ்வளவோ முயன்றும், அதை மாற்ற முடியவில்லை.
எனக்கு, 75 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். குடும்ப நிகழ்வுகளில் உணர்வு மயமாகி கண்ணீர் பெருக்கெடுத்து, பேச முடியாது தவிக்கும் போதெல்லாம், அந்த ஆசிரியையின் முகம் நினைவுக்கு வந்து விடுகிறது.
- எஸ்.விஜயலட்சுமி, சென்னை.
தொடர்புக்கு: 88387 24422