/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - முழுமை உணவு முந்திரி!
/
அதிமேதாவி அங்குராசு - முழுமை உணவு முந்திரி!
PUBLISHED ON : நவ 23, 2024

சிறுநீரக வடிவம் உடையது முந்திரி. உலகம் முழுதும் விரும்பும் அதிசுவை உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது.
அனாகார்டியசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது முந்திரி மரம். இது, 46 அடி வரை வளரும். இதன் பழம், பூவின் சூலகப் பகுதியில் உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் காம்பு தடித்து புடைத்து உருவாகிறது. இதை, முந்திரி ஆப்பிள் என அழைப்பர். இதன் அடிப்பகுதியில், வலுவான ஓட்டுடன் இருப்பதே உண்மையான பழம். அதன் உள்ளே இருக்கும் பருப்பு தான் உண்ணத் தகுந்தது.
தென் அமெரிக்க நாடான பிரேசில் இதன் தாயகம். அங்கு பேசும் மொழிகளில் ஒன்று டூபியன். இதில் வழங்கும், 'அகாஜூ' என்ற சொல், 'தானே உருவாகும் விதை' என்ற பொருள் தருகிறது. இதில் இருந்து போர்த்துகீசிய மொழியில், 'கஜூ' என்ற சொல் உருவானது. இதுவே, ஆங்கிலத்தில், 'கேசிவ்' என்றானது. தமிழில் முந்திரி எனப்படுகிறது.
இந்தியாவுக்கு, போர்த்துகீசிய மாலுமிகள் முந்திரி விதையை, 1565ல் எடுத்து வந்தனர். கோவாவுக்கு தான் முதன்முதலில் வந்தது. அங்கு செழித்ததால், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பரவியது. வெப்பமண்டலத்தில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில், கடலுார், அரியலுார், புதுக்கோட்டை, விழுப்புரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
முந்திரி பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இனிப்பு வகைகள், பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சுவையுடன் உடலுக்கு நன்மையும் பயக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
முந்திரியில், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், பொட்டாஷியம், செலினியம் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கின்றன. முந்திரி பழத்தில், புரோட்டீன், பீட்டா -கரோட்டீன், டானின் என்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில், பழச்சாறு தயாரிக்கப்படுகிறது.
மேற்கு ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகிறது. உலகளவில், 2023ல், 10.95 கோடி கிலோ முந்திரி பருப்பு உற்பத்தியானதாக புள்ளி விபரம் கூறுகிறது. முந்திரி விதையின் ஓடு, இரண்டாம் உலகப் போரில் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய பயன்பட்டது.
தென் அமெரிக்க நாடான பிரேசில், பார்னாமிரிம் என்ற இடத்தில் உலகின் புகழ்மிக்க முந்திரி மரம் வளர்கிறது. இது, 1888ல் நடப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது, 8,400 சதுர மீட்டர் பரப்பில் விரிந்துள்ளது. ஆண்டுக்கு, 80 ஆயிரம் பழங்கள் தருகிறது. இதை சுற்றி வேலி அமைத்து, அழகிய பூங்காவாக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில், 1994ல் இடம் பிடித்தது.
முந்திரி விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய முந்திரி தினம், நவம்பர் 23ல் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் முதல் முறையாக, 2015ல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.