
டைனோசர் காலத்தில் வாழ்ந்த, டைனோசச்சஸ் என்ற மிருகம் தான், தற்போதைய முதலையின் முன்னோடி.
அது, டைனோசர்களையும் சாப்பிடும் வலிமை பெற்றிருந்தது. அதிலிருந்து, உருமாறியது தான் முதலை.
இது, க்ரோக்கடிலியன் என்ற உயிரினக் குடும்பத்தை சேர்ந்தது. உலகில், 23 வகை முதலை இனங்கள் உள்ளன.
இவற்றில், க்ரோக்கடைல், கெய்மன், அலிகேட்டர், கரியல் என்பவை பெரும் பிரிவுகள். இதை இனம் காண சில வழிமுறைகள் உள்ளன.
வாயை மூடிய பின்...
* இரண்டு தாடைப் பற்கள் தெரிந்தால் அது க்ரோக்கடைல்
* மேல் தாடைப் பற்கள் மட்டும் தெரிந்தால் அலிகேட்டர்.
முதலைகள்...
* பெரும்பாலான நேரம் நீருக்குள் இருக்கும்
* கால்களை துடுப்பாகப் பயன்படுத்தி மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நீந்தும்
* நீந்துவதில் மட்டுமின்றி தண்ணீருக்கடியில் தம்கட்டுவதிலும் கில்லாடி. கோடையில், 15 நிமிடமும், குளிரில், 1 மணி நேரம் வரையிலும் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்
* பெரும்பாலும், இரவில் வேட்டையாடும்
* மறைந்திருந்து திடீரென பாய்ந்து இரையை பிடிக்கும்
* ஷட்டர் போல் திறந்து மூடும், 'ஸ்லிட்' இமைகள் இருப்பதால் நிறைய வெளிச்சம் கண்ணுக்கு செல்லும். கண்களுக்கு பின்புறம் கண்ணாடி போன்ற அமைப்பு இருப்பதால், இரவிலும் நன்கு பார்க்க இயலும்
* வெப்ப காலத்தில் வாயை திறந்து வைத்திருக்கும். அதன் வழியாக காற்று சென்று ரத்தத்தை குளிர்படுத்தும்
* காது, மூக்கு துவாரங்களில் சிறு அடைப்பு இருக்கும். நீருக்குள் செல்லும் போது, தண்ணீர் உள்ளே புகாமல் தடுக்கும்
* இரையின் உடலை கிழிக்க பற்களை மட்டுமே உபயோகப்படுத்தும். கடித்து மெல்வதில்லை. அப்படியே விழுங்கும். பின், கற்களை விழுங்கி உணவை அரைக்கும்
* வாழ்நாளில், 50 முறை பற்கள் விழுந்து முளைக்கும்
* இணையை அழைக்க கத்தும் சத்தம், நில அதிர்வை ஏற்படுத்துவது போல் இருக்கும்
* முட்டையிட ஈரப்பதமான இடத்தை தேர்வு செய்யும்
* புல், இலைகளால் கூடு போல் அமைக்கும்
* செய்தி பரிமாற, பன்றி, பாம்பு போல பல விதமாக ஒலி எழுப்பும்.
நீரில் வசிக்கும் மீன் போன்றவை தான், முதலையின் உணவு. நீருக்கு அருகில் வரும் மான், பாம்பு என, எந்த உயிரினத்தையும் பாய்ந்து பிடித்து விடும். இது, 60 வயது வரை வாழும்; ஆஸ்திரேலியா அடிலெய்ட் பூங்காவில், 63 வயது வரை வாழ்ந்த முதலை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சீனாவில் முதலை மாமிசத்திற்காகவும், அமெரிக்காவில் முதலை தோலிற்காகவும் கொல்லப்படுகின்றன. சூழலை பாதுகாப்பதில் இந்த உயிரினத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
- எம்.நிர்மலா