sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு - இணை பிரியாத இருவாய்ச்சி!

/

அதிமேதாவி அங்குராசு - இணை பிரியாத இருவாய்ச்சி!

அதிமேதாவி அங்குராசு - இணை பிரியாத இருவாய்ச்சி!

அதிமேதாவி அங்குராசு - இணை பிரியாத இருவாய்ச்சி!


PUBLISHED ON : நவ 30, 2024

Google News

PUBLISHED ON : நவ 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயுள் வரை இணையை பிரியாமல் வாழும் அபூர்வ வகை பறைவையினம், இருவாய்ச்சி. ஆங்கிலத்தில், 'ஹார்ன்பில்' என அழைக்கப்படுகிறது. இதன் ஆயுள், 50 ஆண்டுக்கும் அதிகம். நீண்டு வளைந்த பெரிய இரட்டை அலகு, புதுமையாக இருக்கும். இதற்காக, இருவாய்க்குருவி என விந்தைப் பெயர் சூட்டியுள்ளது தமிழகம்.

வளர்ந்த இருவாய்ச்சி பறவை, 4 அடி வரை நீளமிருக்கும். அதிகபட்சம், நான்கு கிலோ வரை எடையுள்ளது. ஆண் பறவையின் விழி படலம் சிவப்பாக காட்சி தரும். பெண்ணுக்கு, நீல-ம் கலந்த வெண்மையாக இருக்கும். பெரிய அலகு மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். அதன் மீது மற்றொன்று கவிழ்ந்து ஒட்டியது போல் தோன்றும். அலகின் மீது, குதிரை லாட வடிவில் தொப்பி போன்ற அமைப்பு இருக்கும்.

கால்கள், பசுமை கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். முகம், முதுகு, உடலின் கீழ்ப்பகுதி, இறக்கைகள் கறுப்பு வண்ணத்தில் காட்சி தரும். இறக்கைகளில் இரண்டு வெள்ளைப் பட்டைகள் தீட்டப்பட்டுள்ளதால் வனப்பு கூடுதலாக தெரியும். கழுத்தைத் தோள்களுக்குள் இழுத்து, வானை நோக்கி அலகை சாய்த்தபடி அமர்ந்த நிலையில் துாங்கும். இறக்கையை நிதானமாக அடித்து, மிதந்தவாறு எழிலாக பறக்கும்.

சிறு குழுவாக மரக்கிளைகளில் தங்கும். தாவியபடியே பழங்களை அலகால் கவ்வி நிதானமாக உண்ணும். ஒணான், சிறு பாம்புகளையும் வேட்டையாடி தின்னும். குறிப்பிட்ட வேளையில் தவறாது இரை தேடும் பழக்கமுள்ளது இருவாய்ச்சி.

மேற்கு தொடர்ச்சி மலையில், பெரும் பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சி என்ற வகைகள் வசிக்கின்றன. தமிழகத்தில் பொள்ளாச்சி, ஆனைமலைப் பகுதிகளில் பார்க்கலாம்.

ஒருமுறை இணை சேரும் ஆண், பெண் பறவைகள், மரணம் வரை பிரிவதில்லை. ஜனவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் காலம். அதற்காக, பெண் பறவை, உயரமான மரங்களில் பாதுகாப்பு மிக்க பொந்தை தேர்வு செய்யும்; அதில் ஐந்து முட்டைகள் வரை இடும். ஆண் பறவை எச்சரிக்கை உணர்வுடன், பொந்தின் வாயிலை, இலை, தழைகள் மற்றும் களிமண்ணால் மூடி விடும். உணவு கொடுக்க, பொந்தின் மேல் பகுதியில் ஒரு துளையும், கழிவு வெளியேற்ற கீழ்ப்புறம் மற்றொரு துளையும் அமைத்திருக்கும்.

ஆண் தான், இணை பறவைக்கும், குஞ்சுகளுக்கும் தேவையான உணவை தேடி வந்து தரும். குஞ்சுகள் பறக்கும் ஆற்றலைப் பெற்றவுடன், பொந்தில் மூடியிருப்பதை அலகால் உடைத்து வழி ஏற்படுத்தும். இதுபோல், திட்டமிட்ட வியப்பூட்டும் வாழ்க்கை உடைய அபூர்வ பறவை இனம் இருவாய்ச்சி.

இந்த பறவையில் உலகம் முழுதும், 55 இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் புதை படிவங்கள், ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா, மொராக்கோ, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் கிடைத்துள்ளது.

கேரளா, அருணாசலப்பிரதேசத்தில், மாநில பறவையாக கவுரவம் பெற்றுள்ளது இருவாய்ச்சி. இதை, அழியும் வாய்ப்புள்ள உயிரினங்களில் ஒன்றாக, 2018ல் பட்டியலிட்டுள்ளது சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு. நம்மை சுற்றி இயற்கை சூழலை மேம்படுத்தினால், இது போன்ற உயரினங்களை பாதுகாக்கலாம்.

ஹார்ன்பில் விழா!

இருவாய்ச்சி பறவை பெயரில், டிசம்பர் முதல் வாரம், நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியினர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இங்கு நாட்டுப்புறக் கலைகளில் இந்த பறவைக்குள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்படுகிறது. பாடல், நடனம், வினோத விளையாட்டுகள் என கவரும் வண்ணம் நிகழ்வுகள் இருக்கும். பாரம்பரிய சிறப்பை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள், ஓவியம், உணவு கண்காட்சியும் இடம் பெறும். நிகழ்வை காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணியர் ஒவ்வொரு ஆண்டும் குவிகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, சரவாக் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரான இபானியர், இருவாய்ச்சி பறவையை போர்க்கடவுளாக மதிக்கின்றனர். அதை கொண்டாட, 'கவாய் கென்யாலாங்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்படுகிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us