
அணில் போன்ற உடலமைப்பில், 365 உயிரினங்கள் உலகில் உள்ளன. இவற்றை ஏழு குடும்பங்களாக பிரித்துள்ளனர் விலங்கியல் வல்லுனர்கள். அவற்றில் தரை அணில், பறக்கும் அணில், மா அணில் முக்கியமானது.
அணில் மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் ஓடும். ஆயுட்காலம் சராசரியாக, ஆறு ஆண்டுகள். இதன் முக்கிய உணவு விதை, தானியம், பருப்பு வகைகள். இவற்றில் எதுவும் கிடைக்காத போது மாமிசத்தை தின்னும்.
தின்றது போக மிச்சத்தை சேமிக்கும் பழக்கம் உண்டு. சிவப்பு அணில் ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும். க்ரே அணில் குறைந்தது, 100 இடத்தில் உணவை மறைத்து வைக்கும்.
அணிலின் கர்ப்ப காலம், 60 நாட்கள். குட்டிகளை 10 வாரங்கள் வரை கண்காணிப்பில் வைத்திருக்கும்; பின், குட்டிகள் கூட்டை விட்டு வெளியேறி வாழ்வை அமைத்துக் கொள்ளும். பெரும்பாலும் தனியாகவே வாழும். குளிர்காலங்களில் மட்டும் பிற அணில்களை கூட்டிற்குள் விடும்.
அணிலின் கால்களில் வியர்வை சுரப்பிகள் உண்டு. வெப்பம் அதிகமாக இருக்கும் போது காய்ந்த தரையில் இதன் ஈரத்தடம் நன்கு தெரியும். இது, ஒரு அணிலின் வாழிட எல்லையை தீர்மானிக்க உதவும்.
உலகில் மிகப்பெரிய அணில் ரமிபா. தென் கிழக்கு ஆசியாவிலும், நேபாளத்திலும் காணப்படுகிறது. மிகச் சிறிய அணில் ஆப்பிரிக்க பிக்பி வகையை சேர்ந்தது. இது, இரண்டரை அங்குல நீளம் தான் இருக்கும். தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. அணிலின் வால் நீளம் அதன் உடல் அளவிற்கு இருக்கும். உயரத்தில் இருந்து விழும் போது, வாலை பாராசூட் போல் பயன்படுத்தி தப்பிக்கும். பிற அணில்களோடு தொடர்பு கொள்ள வாலை பயன்படுத்தும்.
அணில் இனத்தை, பருந்து, நரி, ஆந்தை, பாம்பு போன்றவை வேட்டையாடும். நகர அணில்களுக்கு, முக்கிய எதிரி மனிதன். சாலையில் வாகனங்களில் சிக்கி இறக்கும் அணில்கள் ஏராளம் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- ரா.அருண்குமார்

