/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - நோபல் பரிசு பிறந்த கதை!
/
அதிமேதாவி அங்குராசு - நோபல் பரிசு பிறந்த கதை!
PUBLISHED ON : டிச 07, 2024

உலகை காக்கும் அரும்பணி ஆற்றுவோருக்கு வழங்கப்படும் மதிப்பு மிக்க கவுரவம், நோபல் பரிசு. இயற்பியல், வேதியியல், மருத்துவ கண்டுபிடிப்பு, இலக்கியம், பொருளியல் மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணிக்கு வழங்கப்படுகிறது. விருதில் தங்கப்பதக்கம், பாராட்டு பட்டயம், மதிப்புமிக்க பணம் பரிசில் அடங்கும்.
இந்த பரிசு பற்றி பார்ப்போம்...
ஐரோப்பிய நாடான சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் அக்., 21, 1833ல் பிறந்தார் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல். பயங்கர வெடிபொருளான, 'டைனமைட்' உட்பட, 355 கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினார். அதில் ஈட்டிய பணத்தில், போபர்ஸ் இரும்பு ஆலையை வாங்கி, போர் தளவாடங்கள் உற்பத்தி செய்து விற்றார். பெரும் செல்வம் சேர்ந்தது. தன் காலத்துக்கு பின், இதை செலவிடும் வழிமுறையை, உயில் என்ற விருப்புறுதி ஆவணமாக்கியிருந்தார்.
இந்த நிலையில் அவர் இறந்ததாக செய்தி வெளியிட்டது ஒரு பிரெஞ்சு இதழ். நோபலின் சகோதரர் லுட்விக் மரணத்தை அது தவறாக பிரசுரித்திருந்தது. செய்தி தலைப்பு, 'மரண வியாபாரி மரணம்' என இருந்தது கண்டு அதிர்ந்து போனார் நோபல். அதுவே, சிந்தனையை உலுப்பி, நோபல் பரிசு உருவாக வழிவகுத்தது.
ஐரோப்பிய நாடான இத்தாலி, சான் ரெமோ மாளிகையில், டிசம்பர் 10, 1895ல், 63ம் வயதில் காலமானார் நோபல். திருத்தி எழுதியிருந்த அவரது உயில் ஆவணம், உலகை வியப்பில் ஆழ்த்தியது. மனிதகுலம் முன்னேற பாடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில், சொத்தில், 94 சதவீதம் பங்கை ஒதுக்கியிருந்தார் நோபல். ஐரோப்பிய நாடான நார்வே நாடாளுமன்றம், ஏப்ரல் 26, 1897ல் இதை அங்கீகரித்தது. இதற்கான பிரகடனம், 1900-ல் வெளியானது.
பரிசு நிதியை நிர்வகிக்க நோபல் அறக்கட்டளை, ஜூன் 29, 1900ல் துவங்கப்பட்டது. விஞ்ஞானி நோபல் சம்பாதித்த சொத்தை முதலீடு செய்து, ஈட்டும் வருவாயில் பரிசு கொடுப்பது தான் இந்த அமைப்பின் பணி. பரிசுக்குரியோரை, சுவீடன் அகாடமி தேர்வு செய்து வருகிறது.
முதல்முறை நோபல் பரிசு, 1901ல் வழங்கப்பட்டது. அப்போது, பிரெஞ்சு மொழி எழுத்தாளர் சல்லி புருதோம் இலக்கியத்துக்காக தேர்வு பெற்றார். இவருக்கு எதிராக, 42 எழுத்தாளர்கள் போர்க்கொடி பிடித்தனர். பரிசு பெறும் தகுதி, ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கே உள்ளதாக வாதிட்டனர். அது எடுபடவில்லை.
சுவீடன் மத்திய வங்கி, 300-ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியது. அதில், பொருளியலுக்கான பரிசு, 1968ல் அறிவிக்கப்பட்டது. அமைதி பரிசுக்கு யாரும் தகுதி பெறாத ஆண்டு, அந்த பணமும் அறிவியலுக்கு பகிர்ந்து தரப்படுகிறது.
நோபல் நினைவு தினமான டிச.,10ல் பரிசு வழங்கும் நிகழ்வு நடக்கும். அறிவியல் சார்ந்த பரிசுகள், ஸ்டோக்ஹோம் நகரிலும், அமைதி பரிசு, நார்வே, ஒஸ்லோ நகரிலும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானிகள் சி.வி.ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு முறையே, 1930, 1983, 2009ம் ஆண்டுகளில் நோபல் பரிசு கிடைத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கீதாஞ்சலி கவிதை தொகுப்புக்காக, 1913ல் நோபல் பரிசு பெற்றார்.
அமைதிக்கு கவுரவம்!
அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியோர் உருவாக்கிய அமைப்பிற்கு, அமைதி நோபல் பரிசு, இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய
நாடான ஜப்பான், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டாம் உலகப் போரில்
அணுகுண்டு வீசியது அமெரிக்கா. இதில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியோர்,
'நிஹான் ஹிடான்கியோ' என்ற அமைப்பை, 1956ல் உருவாக்கினர். இது, அணு ஆயுதமற்ற
நிலையை உருவாக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த பணியை அங்கீகரிக்கும்
வகையில் அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அணுகுண்டால்
பாதிக்கப்பட்டோர் அனுபவிக்கும் துன்பங்களை உலகம் எங்கும் பகிர்கிறது இந்த
அமைப்பு. அத்துடன் 'அணு ஆயுத போர் கூடாது' என பிரசாரம் செய்துவருகிறது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.