
அடர்ந்த காட்டின் ஓரம் இருந்தது, சுந்தரபுரம். அங்கு, வனப்பள்ளியில் படித்து வந்தாள் சித்ரா. படிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவள். உடன் படிப்போருடன், அன்பு, மரியாதையுடன் பழகுவாள்.
அவளது வீடு, மலை அடிவார வனபகுதியில் அமைந்திருந்தது. பெற்றோர் கூலி வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். குழந்தை பருவத்தில் இருந்த தங்கை மீனாவை பொறுப்புடன் கவனித்துக் கொள்வாள்.
அன்று பள்ளி செல்ல தயாராகி கொண்டிருந்தாள் சித்ரா.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை.
விறகு அடுப்பில் சமைக்க முற்றத்தில் உலை வைத்து, தேவையான பொருட்களை எடுக்க சென்றார் அம்மா.
குடிசை வாசலில் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது.
உலையில் தண்ணீர் கொதித்தது.
திடீரென்று வீட்டின் முன் வந்தது ஒரு இளஞ்சிறுத்தை.
பயந்து அழ துவங்கியது குழந்தை.
என்ன செய்வது என்று பொறுமையாக யோசித்தாள் சித்ரா. பள்ளியில் படித்த பாடங்கள் மனதில் ஓடின.
திடீரென பாய்ந்து அடுப்பில் எரிந்த நெருப்பு கட்டையை கையில் எடுத்தாள். நிதானம் தவறாமல் சிறுத்தை முன் காட்டினாள்.
அதைக் கண்டு மிரண்டு பின் வாங்கி ஓடியது.
ஓடி வந்து குழந்தையை துாக்கி அணைத்தபடி, ''சிறப்பாக செயல்பட்டு விரட்டினாய். இப்படி செய்ய வேண்டும் என்பதை எங்கே அறிந்தாய்...'' என்று கேட்டார் அம்மா.
''காட்டு விலங்குகள் நெருப்புக்கு பயப்படும் என்பது சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ளது. ஆசிரியர் விளக்கமாக சொல்லி கொடுத்ததை கவனமுடன் படித்திருக்கிறேன்...'' என விளக்கினாள் சித்ரா.
மனங் கனிந்து, '' மனம் ஊன்றி படித்தால் கல்வி வாழ்க்கைக்கு உதவும்... பெண்களுக்கு மிக்க துணையாக நிற்கும்... கவனம் செலுத்தி படி...'' என அன்புடன் அறிவுரைத்தார் அம்மா. அதை மனதில் பதித்துக் கொண்டாள் சித்ரா.
குழந்தைகளே... வகுப்பில் படிப்பதை நினைவில் பதித்து செயல்படுத்தி வாழ வேண்டும்.
-கவி.சுகரத்னம்