PUBLISHED ON : அக் 05, 2024

நவராத்திரி பண்டிகை, இந்தியாவின் வட மாநிலங்களில் துர்கா பூஜா என கொண்டாடப்படுகிறது. -கன்னட மொழி பேசும் மக்கள், கொம்பே ஹப்பா என பெருமைப் படுகின்றனர். தெலுங்கு பேசுவோர், பொம்ம கொலுவு என சிறப்பிப்பர். தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது இந்த பண்டிகை.
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, தெய்வங்களை சிறப்பிக்கிறது நவராத்திரி. இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்காக, பொம்மைகளை கொலு வைப்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. அவற்றை அடுக்க அமைக்கப்படும் படிகள், ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். அதாவது, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கைகளில் இருக்கும்.
சில ஆண்டுக்களுக்கு முன் வரை, வீட்டில் உள்ள மேஜை, பெரிய இரும்புப் பெட்டிகள், பெரிய புத்தகங்களை அடுக்கி, அதன் மீது, சுத்தமான துணியை போர்த்தி, வண்ண பொம்மைகளை வைப்பர். இப்போது, பல வடிவங்களில் கொலு படிகள் சந்தையில் கிடைக்கிறது.
அழகிய பூங்கா போன்ற வடிவமைப்பு, மலைப் பிரதேசம், ரயில் நிலையம் போன்று சிறிய அளவில் உருவாக்கியும் கொலு வைக்கின்றனர். நவராத்திரி பண்டிகையின் முதல் நாள், கலசம் எனப்படும் சிறியகுடத்துக்கு பூஜை செய்வர். இதுவும் கொலுவில் இடம் பெற்றிருக்கும்.
மணமகனுடன் மணமகள் விரைப்பாக நிற்கும் மரத்தால் செய்த, 'மரப்பாச்சி பொம்மைகள்' தவறாமல் இடம் பெறும். இதற்கு ஆடைகள் வண்ணமயமாக அணிவிக்கப்பட்டிருக்கும்.
கொலுவில் பொம்மைகளை எந்த வரிசையில் அடுக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...
படியின் கீழ் தட்டில்...
உயிரற்ற பொருட்களை சித்தரிக்கும் பொம்மைகள் வைக்கலாம். இதில் பிளாஸ்டிக் பொம்மைகள், மெழுகில் செய்யப்படும் பழ வகைகள் இடம் பெற செய்யலாம். பறவைகள், மிருகங்கள் போன்ற உயிரினங்களின் உருவங்களையும் வைக்கலாம்.
அடுத்த படியில்...
பல்வேறு கலாசாரங்களுடன் வாழும் மக்களை காட்சிப்படுத்தலாம். பல்தொழில் செய்வோரின் உருவங்களும் இடம் பெறலாம்.
அதற்கு மேல் படியில்...
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், நாயன்மார், ஆழ்வார் போன்ற மகான்களின் உருவங்களை வைக்கலாம்.
அடுத்துள்ள படிகளில்...
நவராத்திரி நாயகிகளான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை சித்தரிக்கும் பொம்மைகள் பெருமிதப்படுத்தும் விதமாக இடம் பெற வேண்டும். இந்த நடை முறையே, கொலுவை வனப்புமிக்கதாக உருவாக்கும்.
உறவினர், நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நல்வாய்ப்பாக அமைகிறது, நவராத்திரி பண்டிகை. ஓரளவு அறிமுகமானோர் வீட்டில் நடக்கும் நிகழ்வில் கூட பங்கேற்று நட்பை வலுப்படுத்த உதவுகிறது. பல்வகை கலைஞர்கள், கைவினைஞர்களின் திறன்களை காட்சிப்படுத்த உதவுகிறது. அதன் வழியாக, பொருள் ஈட்டி, வாழ்வில் உயர வாய்ப்பளிக்கிறது.
பாரம்பரியத்தை தொடரும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது நவராத்திரி பண்டிகை. இதை சிறப்புடன் கொண்டாடினால் மேன்மையும், சுபிட்சமும் ஏற்படும்.
வீட்டில் போதிய இடமில்லை என எண்ணாமல், சிறிய அளவிலாவது பொம்மைகளை கொலு வைத்து, கலைகள் சிறக்க வழி செய்ய வேண்டும். இது, கல்வி, செல்வம், நலமிக்க வீரத்தில் ஓங்கி பிரகாசிக்க செய்யும் நல்ல நாட்களாக அமையும். அனைவருக்கும் நவராத்திரி திருநாள் வாழ்த்துகள்.
- அருண் சரண்யா