
செல்லுார் என்ற சிறுநகரில் குடும்பத்துடன் வசித்தார் துரை. மாடுகளை சாலையில் கட்டி வளர்த்து வந்தார்.
அவற்றின் கழிவை சாலையிலே கொட்டினார். அது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. அவ்வழியே செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். எவ்வளவு எடுத்து சொல்லியும் துரை கேட்கவில்லை. லாபம் ஈட்டுவதிலே குறியாக இருந்தார்.
அவரது மகன் கோகுல். பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தான். ஒருநாள் தந்தையிடம், ''மாடுகளை சாலையில் அலைய விடுவதை தடை செய்து, அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மீறினால், அபராதம் விதிப்பதாக உத்தரவு உள்ளது. அதனால், வீட்டிலே தொழுவம் அமைத்து மாடுகளை வளர்க்கலாம். இல்லையென்றால், நம் கிராமத்திற்கு கொண்டு சென்று விடலாம்... அங்கு தான் விவசாய நிலம் இருக்கிறதல்லவா...'' என்று கனிவாக கூறினான்.
சமயலறையில் இருந்தபடியே, மகன் பேசியக் கருத்தை ஆமோதித்தார் தாய்.
எல்லாவற்றையும் அலட்சியம் செய்து, ''உங்கள் வேலையை பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக மாடு வளர்க்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாதா... இப்போது நகரத்தில் சாலையில் பலரும் மாடுகள் வளர்க்கின்றனர். அரசு அதிகாரிகள் ஏதாவது சொல்வாங்க... பின், அதை கண்டு கொள்ள மாட்டாங்க. அப்படியே பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்...'' என திமிராக கூறி வெளியே சென்றார் துரை.
அன்று வழக்கம் போல் மாடுகளை சாலையில் ஓட்டி விட்டார்.
காலை நடைபயிற்சி முடித்து, அவ்வழியாக வந்த முதியவர் மீது, ஒரு மாடு முட்டியது. நிலை தடுமாறி விழுந்தவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்ட கோபத்தில் பலரும் குரல் கொடுத்தனர். பின், புகார் எழுதி காவல்நிலையத்தில் அளித்தனர். துரையை அழைத்து வந்து விசாரித்தனர் அதிகாரிகள். மாடுகளை சாலையில் விடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கினர்.
அதை முறையாக பராமரிக்க தவறியதற்காக குற்ற வழக்கு பதிவு செய்து, 'வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் கொடுத்துள்ளீர். சட்டத்தை மீறியுள்ளீர்...' என எடுத்துக் கூறி அபராதம் விதித்தனர். அங்கிருந்த மாடுகளையும் இழுத்து சென்றனர்.
அப்போது அங்கு வந்த கோகுல், ''நான் சொன்னதை கேட்காததால் எவ்வளவு பெரிய கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது பார்த்தீங்களா அப்பா...'' என்றான்.
மகன் அறிவுரை கேட்டு திருந்தினார் துரை.
குட்டீஸ்... சாலையில் மிகவும் கவனமுடனும், விதிகளை பின்பற்றியும் செல்ல வேண்டும்!
- கிருஷ்ணவேணி நாகராஜ்