
தேனி மாவட்டம், போடிநாயக்கனுார், பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2013ல், 12ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியை ஜக்கம்மாள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.
பாடவேளை துவங்க மணி ஒலிக்கும் போது, வகுப்பறைக்குள் வந்து நிற்பார். முடிந்தவுடன், தாமதிக்காமல் வெளியேறுவார். இதை கவனப்படுத்தி, 'பெல் டு பெல்' என, நகைச்சுவையாக அவரை குறிப்பிடுவோம்.
அன்று, இயற்பியல் ஆய்வகத்திலிருந்து திரும்ப சற்று தாமதமாகி விட்டது. யாருமற்ற வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியை. வியப்புடன் நாங்கள் கேட்ட போது, 'நான் சம்பளம் வாங்குகிறேனே... சுவருக்காவது பாடம் நடத்த வேண்டுமே...' என புன்னகைத்தார்.
வகுப்பில், பேசினால் மற்ற ஆசிரியர்கள் திட்டுவர். இவர் மட்டும், 'வருங்காலத்தில் அரசியல்வாதியாகவோ, ஆசிரியராகவோ வரப்போகிறீர்...' என்பார். அவரது கற்பித்தல் முறையே, இயற்பியலில் ஆர்வம் தந்து, முதுகலை பட்டம் பெற வைத்தது.
என் வயது, 28; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியையின் அடியொற்றி நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கிறேன். இன்றும் வேகம் குன்றாமல் தலைமையாசிரியராக பணியாற்றும் அவரை கண்டு வியப்பு ஏற்படுகிறது. வழிகாட்டியாக மனதில் நிறைந்துள்ளவரை போற்றுகிறேன்.
- எம்.கவுரிபிரியா, தேனி.