
ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் குமரன். பள்ளியில், 6ம் வகுப்பு படித்தான். பாடங்களிலும், விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினான். வகுப்பில் முதலிடம் வகித்து வந்தான்.
ஒவ்வொரு நாளும் காலை எழுந்து, அப்பாவுடன் வயலுக்கு செல்வான். விவசாயப் பணிகளில் ஒத்தாசையாய் இருப்பான். அங்கிருந்து நடந்தே குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவான்.
உடன் படித்த பிரபுவும், சாலமனும் பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள். பள்ளிக்கு குடும்பக் காரில் வருவர்.
அவர்களுக்கு, 'சாதாரணமாக நடந்து வருபவன் மட்டும், எல்லாவற்றிலும் முதலிடம் பெறுகிறானே' என்ற சந்தேகம் எழுந்தது.
அன்று அது குறித்து தெரிந்து கொள்ள முடிவு செய்தனர்.
''நேரம் கிடைக்கும் போது கேட்போம்...'' என்றான் பிரபு.
சாலமன் அதை ஆமோதித்தான்.
வகுப்புகள் முடிந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்தான் குமரன்.
அவனை வழி மறித்த பிரபுவும், சாலமனும், 'நண்பா... நீ படிப்பில் முதலிடம் பெறும் ரகசியம் என்ன... விளையாட்டுகளிலும் முதலிடம் பிடிக்கிறாயே... எங்களுக்கும் அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லேன்...' என்று கேட்டனர்.
மிக நிதானமாக, ''பெரிய ரகசியம் எதுவுமில்லை. உங்களை போலவே படிக்கிறேன்; பசி வந்தால் சாப்பிடுவோம் இல்லையா... விக்கல் எடுத்தால் தண்ணீர் குடிப்போம்; அதுபோல் தான் படிப்பதிலும் கவனம் செலுத்துகிறேன்...''
'நீ சொல்றது புரியவில்லையே...'
ஒருமித்த குரலில் கேட்டனர்.
''மிகவும் கஷ்டமான சூழலிலும் சிறந்த பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர் என் பெற்றோர்; அதை உணர்ந்து செயல்படுகிறேன். உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதால் விளையாட்டுகளில் வெற்றி பெறுகிறேன்... நாள் தவறாமல் வயலுக்கு சென்று அப்பாவுக்கு உதவுகிறேன். இதுபோன்ற செயல்களால் என் உடல், நான் சொல்வது போல் கேட்கிறது. போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. மனதையும், உடலையும் துாய்மையாக வைத்திருந்தால் எதையும் சாதிக்கலாம்...'' என இயல்பாக கூறினான் குமரன்.
தாழ்வுமனப்பான்மை நீங்கி, உற்சாகம் பெற்றனர் இருவரும். குமரன் அறிவுரைத்த வழிமுறையை ஏற்றனர்.
பட்டூஸ்... தினமும் கடமையை சரியாக செய்து வந்தால், எதிலும் வெற்றி கிடைக்கும்!
- ஆர்.தனபால்