
சிவகங்கை மாவட்டம், பள்ளத்துார், அருணாசலம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில், 1973ல், 9ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார் பி.ஏ.எஸ்.தோத்தாத்திரி ஐயங்கார். கண்டிப்பு செயல்பாடுகளால் புகழ் பெற்றவர். தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
அன்று அரையாண்டு தேர்வு எழுதிக் கொண்டிருந்தேன். அறை கண்காணிப்பாளராக இருந்த வணிகவியல் ஆசிரியர் மலைச்சாமி, திடீரென என்னையும், அதே மேஜையில் மறு முனையில் எழுதிக் கொண்டிருந்த பெரியசாமியையும் எழுப்பினார்; கடுமையுடன் தலைமையாசிரியர் அறைக்கு செல்லக் கூறினார்.
ஒன்றும் புரியாமல் சந்தித்த போது முறைத்து பார்த்தபடி எழுந்தார் தலைமையாசிரியர். இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டை அவிழ்த்து, 'ஏன்டா... காப்பியா அடிக்கிறீங்க...' என்றபடி, உடனிருந்தவனை விளாசினார். ஒரே அடியில் சுருண்டு தரையில் விழுந்தான்.
அடுத்து என் பக்கம் திரும்பிய போது சுதாரித்தபடி, 'ஐயா... நான், 9ம் வகுப்பு; அவன், 10ம் வகுப்பு...' என்றேன். திகைத்தவர் தயங்கியபடி தேர்வறை கண்காணிப்பாளரை அழைத்து கடுமையாக திட்டினார்.
அடி வாங்கும் முன், உண்மையை தயங்காமல் சொல்லியதால் தப்பினேன். ஒரே மேஜையில் மறுமுனையில் அமர்ந்திருந்தவர் ஏதோ கேட்டதை தவறாக புரிந்து புகார் செய்திருந்தார் கண்காணிப்பாளர்.
என் வயது, 65; தமிழக வருவாய்த்துறையில், துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். கண்டிப்பு நிறைந்த பள்ளி சூழல், வாழ்வில் முன்னேற வழிகோலியது. இதுபோன்ற நிகழ்வுகளை, என் பிள்ளைகளிடம் சொல்லி அறிவூட்டி வருகிறேன்!
- வெ.வீரப்பன், சென்னை.
தொடர்புக்கு: 94433 47682