
மதுரை, நரிமேடு அனிதா ஆரம்ப பள்ளியில், 2015ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
பள்ளியில் பேச்சுப் போட்டி நடந்தது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிகழ்த்திய சாதனைகளை அவர் போல் வேடமிட்டு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பது விதி. அதில் பங்கேற்க மூத்த மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். அவர்களுடன் போட்டியிட தைரியம் இல்லாததால் ஒதுங்கியிருந்தேன்.
இதையறிந்த வகுப்பு ஆசிரியை ரெஜிமேல் அறிவுரைத்து சிறப்பு பயிற்சி தந்து பங்கேற்க வைத்தார். போட்டியன்று வேடம் அணிய இயலாததால் சோகமாக அமர்ந்திருந்தேன். அதைக் கண்டதும் சிறிதும் கோபமின்றி, 'பரவாயில்லை... மேடைப்பேச்சுக்கு நன்கு பயிற்சி எடுத்திருக்கிறாய் அல்லவா... அது போதும்...' என்று, நம்பிக்கையூட்டி மேடையில் ஏற்றினார்.
முயற்சியுடன் பேசி இரண்டாம் பரிசு பெற்றேன். தொடர்ந்து, வகுப்பு தலைவியாக்கி, தலைமை பண்பு ஏற்க தக்க பயிற்சி தந்தார். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, 'சிறுவர்மலர்' இதழை அறிமுகம் செய்தார். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்தார். தோற்றாலும் அரவணைத்து தேற்றினார். அந்த செயல் பெரும் நம்பிக்கை ஊட்டியது.
என் வயது, 21; சட்டக்கல்லுாரியில் இளங்கலை படித்து வருகிறேன். வாழ்வில் தடுமாறும் போதெல்லாம், அந்த ஆசிரியை விதைத்த நம்பிக்கை எழுந்து நிற்க வைக்கிறது. என் ஒவ்வொரு வெற்றியையும், நன்றியுடன் அவருக்கு சமர்ப்பித்து மகிழ்கிறேன்.
- ரா.ஸ்ரீஐஸ்வர்யா, மதுரை.