PUBLISHED ON : செப் 07, 2024

முன்கதை: பள்ளி மாணவன் மகிழ், வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டு கற்பனையில் சஞ்சரித்து வந்தான். அவன் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. அதற்கான நடைமுறை முடிந்தது. பின், அவர்களுடன் செல்ல மறுத்து கால்களை விரித்து எதிர்ப்பை தெரிவித்தது செங்கிஸ்கான். இனி -
மோப்ப நாய் செங்கிஸ்கான் முன் மண்டியிட்டு ஆலாபித்தான் அதற்கு பயிற்சியாளனாக இருந்த காண்டீபன்.
மிகுந்த நெகிழ்வுடன், ''செங்கிஸ்கான்... உன்னை தத்து கொடுத்துட்டோம். உனக்கும், போலீசுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. நான், உனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. உன் வாழ்க்கையில், எட்டு ஆண்டுகள் காவல்துறை சேவைக்கு, கரைத்து விட்டாய். இது, உனக்கு இரண்டாவது வாழ்க்கை...
''டப்... டுப்... டமார்... டுமீல்... இது போல் இனி, உன் காதுகளுக்கு எதுவும் கேட்காது. அடுத்து, அமைதியான வாழ்க்கை கிடைக்கும்; உன் மன பலமும், உடல் பலமும் எனக்கு நன்கு தெரியும். இயலாமல் சோர்ந்து, மூலையில் கிடக்க மாட்டாய். நீ, போகும் வீட்டில், இனி தினமும், தீபாவளி தான்...''
'போ டோலா... ஏதாவது பேசி, என்னை உசுப்பேத்தாதே...'
காண்டீபனிடம் பார்வையால் கூறியது செங்கிஸ்கான்.
மோப்ப நாய் பயிற்சியாளர்கள், அவரவர் நாய்களுடன் அங்கு பிரவேசித்தனர். அவற்றின் கழுத்தில் இருந்த செயின்களை கழற்றி விட்டனர்.
'மோப்ப நாய்களே... செங்கிஸ்கானுக்கு பிரியா விடை கொடுங்கள்...'
உத்தர விட்டனர் பயிற்சியாளர்கள்.
செங்கிஸ்கானை சூழ்ந்தன, 10 மோப்ப நாய்கள்.
'அன்பு சகோதரா... ஓய்வு வாழ்க்கை, இனிதாக அமைய வாழ்த்துகள்...'
'வப்... வப்...'
குரைத்து கூறின மோப்ப நாய்கள்.
செங்கிஸ்கானை நக்கி, ஈர மூக்கோடு மூக்கு வைத்து உரசின.
அங்கு, அன்பும், அபிமானமும் கரை புரண்டோடியது.
'சீனியர் செங்கிஸ்கான்... இது என்ன... படுத்து அடம் பிடிக்கிறீர். ஒழுக்கமாய் இருந்த, எட்டு ஆண்டுகளை காற்றில் பறக்க விடலாமா...
'ஓய்வு அறிவித்து விட்டனர். கம்பீரத்துடன் கையசைத்து, புறப்பட வேண்டும். அதை விடுத்து, இப்படி அழுது புலம்பலாமா... ஷேம்... ஷேம்...
'சீனியர்... உங்கள் ஆட்டத்தில், முதல் பாதியை தான் முடித்திருக்கிறீர். இரண்டாவது பாதியில், அதிரடி ஆட்டம் ஆடி, 'ஹாட்ரிக் கோல்' போடுங்கள்...
'இறைவன், காண்டீபன் என்ற ஒரு கதவை மூடி, மகிழ், அவனுடைய பெற்றோர் என, மூன்று கதவுகளை திறந்திருக்கிறார். மோப்ப நாய்களின் மன்னா... கம்பீரமாக புறப்படுங்கள். மீண்டும் வாய்ப்பிருந்தால் சந்திப்போம்...'
இளைய நாய்கள் அறிவுரை கேட்டு, சரேலென எழுந்து, உடலை உதறியது செங்கிஸ்கான்.
'ஜூனியர் பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்... நான் ஒரு சென்டிமென்ட் இடியட். உங்களுடைய வார்த்தைகள், எனக்குள் இருக்கும் ஒரு மிடுக்கனை உசுப்பேத்தி விட்டன; பை ஜூனியர்... பை மை டியர் ப்ரெண்ட் காண்டீபன்...'
மகிழுக்கும், அவனுடைய தந்தைக்கும் இடையே ராஜ நடை நடந்தது செங்கிஸ்கான்.
காரின் பின் கதவை திறந்து விட்டான் மகிழ்.
''உள்ளே சென்று அமர் செங்கிஸ்கான்...''
தாவி காரின் உள்ளே அமர்ந்தது.
காரை மகிழின் தந்தை கிளப்பினார்; சாலை போக்குவரத்தை வேடிக்கை பார்த்தது செங்கிஸ்கான்.
மற்ற காரில் செல்லும் குழந்தைகளுக்கு முன்னங்காலால், 'டாட்டா' காண்பித்தது; வாகன இரைச்சலை ரசித்தது.
வேடிக்கை பார்த்து வரும் செங்கிஸ்கானை கவனித்து, ''அப்பா... இது மிகவும் ரசனையானதாக இருக்கிறது...'' என்றான் மகிழ்.
தலையாட்டி சிரித்தார் மகிழின் தந்தை.
பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பின் வெளிவாசலை அடைந்தது கார். ஆறு செண்டை மேளக்காரர்கள், ஆவேசம் பொங்க மேளம் அடித்தனர்.
'ரக்காரக்கா... ட்ரன்ட ரக்கா... ரக் ரக்...'
அந்த இசை தாளத்துக்கு ஏற்றவாறு, வண்ணமயமாக கதக்களி ஒப்பனை இட்ட நபர் ஒருவர், இதமாக ஆட்டம் போட்டார்.
''அப்பா... இதெல்லாம் உங்கள் ஏற்பாடு தானா...''
''ஆமாம்... மிகப்பெரிய வரவேற்பு அளிக்க விரும்பினேன்... அதனால் தான் இதையெல்லாம் செய்திருக்கிறேன்...''
அனிச்சையாக செண்டை மேளத்துக்கு ஆடின செங்கிஸ்கானின் கால்கள்.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அங்கு குழுமி இருந்தனர். என்ன நடக்கிறது என்பதை முண்டியபடி உற்றுப் பார்த்தனர்.
காரின் பின் கதவை திறந்து, ''வெல்கம் டு அவர் ஹவுஸ் செங்கிஸ்கான்...'' என வரவேற்றான் மகிழ்.
காரிலிருந்து குதித்தது செங்கிஸ்கான்.
ஆரத்தி தட்டுடன் ஓடி வந்தார் மகிழின் அம்மா.
'போலீஸ் டிபார்ட்மென்ட்ல பார்த்த கண்ணு... கிரிமினல்கள் கண்ணு... சக மோப்ப நாய்கள் கண்ணு... அபார்ட்மென்ட் வாசிகள் கண்ணு... அங்க, இங்க பார்த்த கண்ணு... காட்டுக்கு போ... மேட்டுக்கு போ'
ஆரத்தி சுற்றி, செங்கிஸ்கானின் வாயில் வழியும் உமிழ் நீர் எடுத்து, ஆரத்தி தட்டில் உதறினார் மகிழின் அம்மா.
ஆரத்தி கரைசலை கொட்டி, திரும்பியவரை பெரும் குரல் எதிர் கொண்டது.
''இந்த குடியிருப்பில் மொத்தம், 64 பிளாட்டுகள் உள்ளன. அவற்றில் வசிக்கும் அனைவருக்கும், நான் தான் செயலர். என்னை கேட்காமல், என் அனுமதியின்றி இந்த ஜந்துவை, இங்கு எப்படி அனுமதித்தீர்...''
'குறுக்கால யாருடா இவர்' என குழப்பத்துடன் பார்த்தது செங்கிஸ்கான்.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்