
தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின், 155ம் பிறந்தநாள் அக்.,2ல் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக அகிம்சை வழியில் கடுமையாக போராடி வென்றவர்.உலகில் தியாக தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருப்பவர்.
காந்திஜியின் அப்பா பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. குஜராத், போர்பந்தர் பகுதி திவானாக, அதாவது, தலைமை அமைச்சராக விளங்கியவர். ராஜஸ்தான் அரசவையில் உறுப்பினராக இருந்தார். இவரது நான்காவது மனைவி பெயர் புத்லிபாய். இவர் தான் காந்திஜியின் தாய்.
குடும்பத்தில், இறுதியாக பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்தார். குடும்பத்தினர், 'மோனியா' என்று அழைத்தனர்.
அடிக்கடி காதுகளைத் திருகுவதாக, அண்ணன் மீது புகார் தெரிவித்தார் காந்திஜி. 'பதிலுக்கு நீயும் அடித்து விடு...' என்று கூறியுள்ளார் தாய். இதைக் கேட்டதும், 'யாரையும் எதிர்த்து தாக்குவதால் என்ன பயன்... அதற்கு அறிவுரை கூறலாமே...' என்று கேட்டிருக்கிறார் காந்திஜி. அகிம்சைப் பண்பு அப்போதே அவருக்குள் துளிர் விட்டிருந்தது.
காந்திஜிக்கு இருந்த சிறப்பியல்புகள் பற்றி பார்ப்போம்...
* கையெழுத்து அழகாக இல்லை என்று வெட்கப்பட்டது உண்டு
* பள்ளியில் ஆங்கிலப் பாடத்தில் தான் அதிக மதிப்பெண் பெறுவார்
* ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்
* தென்னாப்பிரிக்கா, நாட்டல் பகுதி உச்ச நீதிமன்றத்தில் வழக்காட பதிவு செய்த முதல் இந்தியர்
* ஆசிய நாட்டவருக்கு ஏற்பட்டிருந்த அநீதிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் குரல் கொடுத்தார்
* ஐரோப்பிய பாணியில் உடைகள் அணிவதை, 1912ல் விடுத்தார்
* பால் பொருள் உணவுகளை கைவிட்டார்
* உலர்ந்த பழங்களை அதிகம் உட்கொண்டார்
* ரயிலில், மூன்றாம் வகுப்பில் மட்டுமே பயணித்தார்.
ஒவ்வொரு நாளும் சராசரியாக, 18 கி.மீ., துாரம் நடப்பார். இதை, 40 ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடித்து வந்தார்.
உலக நாடுகளில், 48 சாலைகள் இவர் பெயரில் அமைந்துள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசில், வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோ, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மத்திய கிழக்கு நாடான ஈரான், ஆப்ரிக்க நாடுகளான ஜமைக்கா, தென்ஆப்பிரிக்கா போன்றவை இதில் அடக்கம்.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் படைப்புகளை விரும்பி படித்தார் காந்திஜி. இருவரும் கடிதம் எழுதி தொடர்பில் இருந்தனர். கொடுங்கோலன் ஹிட்லருக்கு, இருமுறை கடிதம் எழுதி இருக்கிறார் காந்திஜி. அவை, 'அன்பு நண்பருக்கு' என்றே துவங்குகின்றன.
குஜராத் மொழியில் நவ்ஜீவன், ஆங்கில மொழியில், யங் இந்தியா இதழ்களுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் ஹரிஜன் இதழை, 1933ல் துவங்கினார் காந்திஜி.
உலகம் முழுதும் பிரபலமாக விளங்கும், ஆப்பிள் நிறுவனத்தை துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், காந்திஜியை மிகவும் போற்றி வந்தார். அவர் அணிந்திருந்தது போலவே வட்ட வடிவிலான மூக்குக்கண்ணாடியை பயன்படுத்தினார்.
உப்பு மீது விதிக்கப்பட்ட வரியை கண்டித்து, தண்டி யாத்திரை மேற்கெண்டார் காந்திஜி. அதற்கு காரணம் மதுவுக்கு விதித்த அளவு வரியை, உப்பின் மீதும் சுமத்தியிருந்தது ஆங்கிலேய அரசு.
பலமுறை பரிந்துரைத்தும் காந்திஜிக்கு, நோபல் பரிசு அளிக்கப்படவில்லை. காந்திஜி மறைந்த பின், இதற்காக வருத்தம் தெரிவித்தது நோபல் பரிசு குழு. காந்திஜியின் இறுதி ஊர்வலம் ஐந்து கி.மீ., தொலைவுக்கு நீண்டிருந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
- ஜி.எஸ்.எஸ்.,