
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, துாய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், 1982ல், 7ம் வகுப்பு படித்த போது, மிதிவண்டியில் சென்று வருவேன். தமிழாசிரியர் சக்கரையப்பன் இனிமையாக கற்பிப்பார். செய்யுள்களை சந்தம் பிசகாமல் இனிய இசையுடன் பாடி, மனதில் பதிய வைப்பார்.
கரும்பலகையின் முகப்பு பகுதியில் அன்றைய முக்கிய செய்திகளை எழுதும் பணியை தந்தார். இதற்காக, காலையில் நுாலகம் சென்று நாளிதழ்களை படித்து குறிப்பெடுப்பேன். எல்லாருக்கும் புரியும் வகையில், சுருக்கமாக அவற்றை எழுதி வருவேன்.
இந்த பழக்கம், புத்தகங்கள் வாசிக்கவும், கட்டுரைகள் எழுதவும் துதூண்டுகோலாக அமைந்தது. ஆர்வம் மிகுதியால், கையால் எழுதிய இதழ் ஒன்றை தயாரித்தேன். அதன் முதல் பிரதியை, நெல்லை மைய நுாலகத்தில் வெளியிட்டு பாராட்டு பெற்றேன்.
என் வயது, 53; பிரபல நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறேன். சமீபத்தில் ஒரு மழை நாளில் ஓட்டலில் காபி அருந்த சென்றேன். மதிய உணவு மெனு பட்டியலை எழுதிக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஊழியர்.
வகுப்பறை கரும்பலகையில் செய்தி எழுதியது நினைவில் வந்தது. அவரிடம் அனுமதி கேட்டு அன்றைய மெனுவை பிசகாமல் எழுதி முடித்தேன். அங்கிருந்த ஊழியர்கள் வியப்புடன் பார்த்து நின்ற போது,'எழுதுகோல் தெய்வம்... என் எழுத்தும் தெய்வம்...' என அந்த தமிழாசிரியர் வகுப்பில் பாடியது மனதில் நிழலாடியது.
எஸ்.முப்பிடாதி,திருநெல்வேலி.தொடர்புக்கு: 98940 09457