PUBLISHED ON : செப் 21, 2024

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டு கற்பனையில் சஞ்சரித்து வந்தான் மாணவன் மகிழ். அவன் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். பெரிய அடுக்குமாடி குடியிருப்பு செயலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அங்கு வசித்த குழந்தைகள் அனைவரும் அந்த நாயுடன் நெருக்கம் காட்டினர். இனி -
குழந்தைகளிடம் இருந்து பிதுங்கி, ததும்பி வெளியேறியது செங்கிஸ்கான்.
அடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக குடியிருப்பு செயலர் மீது பாய்ந்தது.
ஒரு நல்லி எலும்பை மோப்பம் பிடிப்பது போல் அவரை தலை முதல், கால் வரை முகர்ந்தது.
''செங்கிஸ்கான்... செயலரை நல்லாவே முகர்ந்து பார். கொஞ்ச நாட்களாகவே குளிக்கவில்லை; அந்த நாற்றத்தில், மயங்கி விழப் போகிறாய்... செயலர் முகநுாலில் பிறரின் பதிவுகளை திருடி, தன் பதிவாக போட்டுக் கொள்வார். ஒரு வகையில், அவரும் திருடர் தான்; அறிவுத்திருடரை லபக்கென்று பிடி... மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும், பட்டாபட்டி டவுசரை கூட திருடி அணிந்திருப்பார். நல்லா உற்று பாரேன்...''
குடியிருப்பில் வசித்த ஒருவர் நகைச்சுவை பொங்க கூறினார்.
ஓய்வு பெற்ற போலீஸ் மோப்பநாய் செங்கிஸ்கானின், 80 கிராம் எடை மூளையில், 530 மில்லியன் நியூரான் செல் ஒன்றில், செயலரின் அடையாளத்தை முழுமையாக பதிவு செய்தது.
திமிங்கலத்திற்கு, 500 மில்லியன் நியூரான் செல்களும், ஆப்பிரிக்க யானைக்கு, 11 ஆயிரம் மில்லியன் நியூரான் செல்களும் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்து, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி மீது பாய்ந்தது செங்கிஸ்கான். அவரை முகர்ந்து பார்த்தது. அவர் அமர்ந்திருக்கும் கூண்டுக்குள் சென்று ஆராய்ந்தது. ஒரு வாளி நிறைய இருந்த கொய்யாப் பழங்களை இழுத்து வெளியே போட்டது.
''யோவ் காவலாளி... இது ஏது...''
''ஐயா... காசு கொடுத்து வாங்கினேன்...''
''இல்லை; பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பு கொய்யா மரத்தில், தாத்தா கொய்யாப்பழம் திருடியதை நான் பார்த்தேன்...''
முண்டியடித்து வந்து கூவியது ஒரு வாண்டு.
''பழம் பழுத்து வீணாப் போகுதேன்னு தான் பறித்தேன்... திருட்டு எதுவும் செய்யவில்லை...''
''செங்கிஸ்கான் வந்த ஒரு மணி நேரத்துக்குள், காவலாளியின் திருட்டை கண்டுபிடித்து விட்டது...''
''மகிழ்... ரொம்ப சந்தோஷப்படாதே... நீ ஏதாவது தவறு செய்தாலும், இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தி விடும்...''
''அடுத்து என்ன செங்கிஸ்கான்...''
வினவினான் மகிழ்.
சிறிது நேரம் குறும்பாய் பார்த்து, ஓட ஆரம்பித்தது செங்கிஸ்கான்.
துரத்தியபடி ஓடினான் மகிழ்.
ஒவ்வொரு வீடாக புகுந்து, இண்டு இடுக்கெல்லாம் முகர்ந்தது.
''வா செங்கிஸ்கான்... முதன்முதலாய் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளாய். ஏதாவது சாப்பிடு...''
அந்தந்த வீடுகளில் வசிப்போர் ஆனந்தமாய் வரவேற்றனர்.
'வரவேற்புக்கு நன்றி...' என்ற அர்த்தத்தில், அவர்களை உன்னித்தது செங்கிஸ்கான்.
''என்ன உணவை விரும்பி சாப்பிடுவாய்...''
குறுக்கே வந்தான் மகிழ்.
''கேரட், முட்டை, மாமிசம், தயிர் சாதம், பருப்பு வகைகள் எல்லாம் செங்கிஸ்கானுக்கு கொடுக்கலாம். ஆல்கஹால், அவகாடோ பழம், திராட்சை, உலர் திராட்சை, ஜைலிட்டால் மற்றும் சாக்லெட் கொடுக்க கூடாது...''
அந்த வீட்டில் வசிக்கும் பெண், சிக்கன் லாலிலாப்பை நீட்டினாள்.
வாங்கி கடித்து, முழுங்கியது செங்கிஸ்கான்.
மகிழ் வீட்டை தவிர, குடியிருப்பில் அனைத்து வீட்டிற்கும் விஜயம் செய்தது செங்கிஸ்கான்.
மொட்டை மாடிக்கு சென்று, வாட்டர் டேங்கை பார்வையிட்டது. லிப்ட், பழைய சாமான்கள் இருக்கும் ஸ்டோர் ரூம், மாடி படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், அடுக்குமாடி குடியிருப்புக்குள் கட்டப்பட்டிருக்கும் கோவில், சங்க அலுவலகத்தை எல்லாம் சுற்றி பார்த்து, திருப்தியானது செங்கிஸ்கான்.
''இப்போது நம் வீட்டுக்கு செல்வோம்...'' என அழைத்தான் மகிழ்.
தலையாட்டியது செங்கிஸ்கான்.
மகிழ் வீட்டை நிதானமாக சுற்றி பார்த்தது. மூன்றாவது, படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் மகிழ்.
''இது தான் உன் வசந்த மாளிகை; ஓய்வெடுத்துக்கொள்...''
சிறு படுக்கையில், குப்புற படுத்து, நான்கு கால்களையும் காற்றில் உதைத்து, ஆனந்தமாய் ஊளையிட்டது செங்கிஸ்கான்.
அங்கு இரண்டு செவிகளில், செங்கிஸ்கானின் ஆனந்தக் கூச்சல் முட்டி மோதி, அலை அலையாய் எதிரொலித்தது.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்