PUBLISHED ON : ஆக 23, 2025

ஆகஸ்ட் 27, விநாயகர் சதுர்த்தி
விநாயகரை, குழந்தை கடவுள் என சொல்வர். அவரது யானை முகம் கண்டதும் மகிழ்ச்சி அடையாதோரே கிடையாது.
தமிழ் மாதமான ஆவணியில் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று பிறந்தார், விநாயகர். இதுவே, விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
வானத்தில் நிலா இன்றி இருட்டாக இருக்கும் நாளையே அமாவாசை என்கிறோம். இதற்கு அடுத்த நான்காம் நாளே வளர்பிறை சதுர்த்தி திதி. எல்லா தமிழ் மாதங்களிலும் இந்த திதி வரும். இதில் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தியே விநாயகர் பிறந்தநாள்.
அன்னை பார்வதியால் உருவாக்கப்பட்டவர் விநாயகர். மனித முகத்துடன் தான் பிறந்தார். ஒரு முறை விநாயகருக்கும், தந்தை சிவனுக்கும் ஏற்பட்ட போரில் தலையை இழந்தார் விநாயகர். மகனை இழந்த பார்வதி மீண்டும் உயிர் கொடுக்க, சிவனிடம் வேண்டினார். மகனுக்கு யானை தலையை கொடுத்தார் சிவன். மனிதனைப் போல பூமியில் பிறந்த விலங்குகளும் வணக்கத்திற்கு உரியவை என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்தார் சிவன்.
விநாயகரின் யானை முகத்தில் இரண்டு தந்தங்கள் உள்ளன.
அதில் ஒன்று, நீளமாக அழகுடன் இருக்கும்.
மற்றொன்று ஒடிந்து காட்சி தரும்.
வாழ்வில் இன்பம் வருகிறது; துன்பமும் வருகிறது.
அதிக மதிப்பெண் பெற்றால் மகிழ்கிறோம். குறைந்துவிட்டால் மிகவும் வருந்துகிறோம்.
மதிப்பெண் குறைந்தால் யாரும் வருத்தப்படக்கூடாது. அடுத்த முறை தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றுபோல் பார்க்க வேண்டும். அடுத்து துன்பம் நிகழாத அளவுக்கு நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதையே, விநாயகரின் தந்தங்கள் உணர்த்துகின்றன.
விநாயகருக்கு பானை வயிறு.
அவருக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் மிகவும் விருப்பம்.
உத்தரபிரதேசம், பீஹார் போன்ற வட மாநிலங்களில் விநாயகருக்கு லட்டு படைத்து வழிபடுவர்.
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மோதகம் என்ற கொழுக்கட்டை படைத்து வணங்குவர்.
உலகம் மிக மிக பெரியது.
அதை வயிற்றுக்குள் அடக்கி வைத்திருக்கிறார் விநாயகர்.
அதனால் தான் விநாயகரின் வயிறு மிகப் பெரிதாக இருக்கிறது.
வயிற்றுக்குள் செல்லும் உணவு ஜீரணம் ஆகி விடுகிறது. அதுபோல் எவ்வளவு பெரிய சிரமத்தையும் சகிக்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை தான் விநாயகரின் வயிறு பாடமாக உணர்த்துகிறது.
விநாயகர் முன் மூஞ்சூறு என்ற எலி இருக்கும். எலியை கண்டால் அனைவரும் வெறுப்பர். விநாயகர் அதை விரும்பி ஏற்று, வாகனமாக வைத்துள்ளார்.
இறைவன் முன்னிலையில் அனைத்து உயிரினங்களும் சமம் என்பதை உணர்த்தவே எலியை வாகனமாக கொண்டுள்ளார் விநாயகர்.
விநாயகர் சதுர்த்தியில் களிமண்ணால் விநாயகர் சிலை செய்து, பூக்கள் சூடி, சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்யலாம். விநாயகர் பற்றிய எளிய பாடல்களை பாடலாம். விநாயகரின் அருள் அனைவருக்கும் நிச்சயமாக கிடைக்கும்.
- தி. செல்லப்பா

