
உலகில் சில உயிரினங்கள் தனித்துவ நினைவுத் திறனால் சிறப்பு பெற்றுள்ளன. டால்பின், யானை, சிம்பன்சி, காகம் மற்றும் ஆக்டோபஸ் அபார திறன்களைப் பற்றி பார்ப்போம்...
டால்பின்: நல்ல நினைவு சக்தி உள்ள கடல் உயிரினம் இது. தனித்துவமான ஒலி சமிக்ஞை வழியாக, பிற டால்பின்களை அடையாளம் கண்டு தொடர்பு கொள்ளும் திறன் மிக்கது. பல ஆண்டுகளுக்குப் பிறகும், அதை நினைவில் வைத்திருக்கும். ஒரு ஆய்வில், 20 ஆண்டுக்கு முன் சந்தித்த ஒன்றை கூட நினைவில் வைத்திருக்கும் திறன் பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
யானை: காடுகளில் வாழும் பெரிய உயிரினம். செல்லும் இடம், நீர் ஆதாரம் மற்றும் கூட்டத்தில் பிற யானைகளையும் நினைவில் வைத்திருக்கும் அபார திறன் உடையது. பல ஆண்டுக்கு முன் பயணம் செய்த பாதையைக் கூட மறப்பதில்லை. இறந்த யானையின் எலும்புகளை, பல ஆண்டுக்கு பின்னும் அடையாளம் கண்டு, உணர்ச்சியை வெளிப்படுத்தியதாக பதிவு செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.
சிம்பன்சி: உயிரின பரிணாமச் சூழலில் மனிதர்களுக்கு மிக நெருக்கமானது. எண்கள், பொருட்கள், முகங்களை நினைவில் வைத்திருக்கும் திறன் மிக்கது. மனிதனை விட வேகமாக எண்களை நினைவுபடுத்தும் ஆற்றல் உடையதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காகம்: முகங்களை அடையாளம் காணும் திறன் உள்ள அபூர்வ பறவையினம். தீங்கு செய்த மனிதனை, நினைவில் வைத்து தவிர்க்கும் வழக்கம் இதனிடம் உள்ளது. சிக்கலான பிரச்னையை தீர்க்க ஞாபக சக்தியை காகம் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்டோபஸ்: கடல் உயிரினங்களில் மிகவும் புத்திசாலித்தனமானது. சிக்கலான புதிர்களை தீர்க்கவும், சூழலை கணித்து நினைவில் பதித்து வாழும் திறன் உடையது. உணவு கொடுத்தவரை அடையாளம் கண்டு கொண்டது ஒரு ஆக்டோபஸ். பிடிக்காதவர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து உணர்வை வெளிப்படுத்தியது மற்றொன்று. இது போன்ற சம்பவங்களை பதிவு செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ஒவ்வொரு உயிரினமும் தனித்துவம் வாய்ந்த சூழலில் ஞாபக சக்தியை பயன்படுத்தி வாழ்கின்றன.
- வி.பரணிதா