PUBLISHED ON : மே 24, 2025

உலகில், மிகப்பெரிய அளவில் வாணவேடிக்கை சில நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் முதன்மை பெற்றுள்ளன. அது பற்றி பார்ப்போம்...
அமெரிக்கா: இங்கு சுதந்திர தினம் ஜூலை 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு நியூயார்க் நகரில் கோலாகலமாக நடக்கும். இதற்காக மேசிஸ் நிறுவனம் நடத்தும் வாண வேடிக்கை உலகப் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும், பல வகையான வாணவெடிகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
சீனா: ஆசிய நாடான சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில், வாணவேடிக்கை நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கிறது. வெடிமருந்தை கண்டுபிடித்த சீனர்கள், தீய சக்தியை விரட்ட இது போல் நிகழ்வுகளை நடத்துகின்றனர். உலக நாடுகள் விரும்பும் பட்டாசுகள் சீனாவிலிருந்து தான் அதிகம் ஏற்றுமதியாகிறது.
ஜப்பான்: கிழக்காசிய நாடான ஜப்பான் கோடை விழாவில், 'ஹனாபி' என்ற வாணவேடிக்கை முக்கியமானது. இது பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. அமைதியையும், இயற்கையுடனான தொடர்பையும் வெளிப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா: இங்குள்ள சிட்னி நகரில் புத்தாண்டு தினத்தில் நடக்கும் வாணவேடிக்கை, உலகின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. புதிய ஆண்டை உற்சாகமாக வரவேற்பதற்காக நடத்தப்படுகிறது. இதற்கு ஏழு டன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம்: இது மத்திய கிழக்கில் உள்ள நாடு. இங்குள்ள துபாய் நகரில், புர்ஜ் கலிபாவை சுற்றி புத்தாண்டு வாணவேடிக்கை அபாரமாக நடக்கும். இது ஆடம்பரம், செல்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
இங்கு, 2014ல், உலக சாதனை நிகழ்த்தும் ஒரு வாணவேடிக்கை நிகழ்வு நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் பல்வேறு எண்ணமுள்ள மக்களை ஒன்றிணைக்கின்றன.
- விஜயன் செல்வராஜ்