
விருதுநகர் மாவட்டம், சாத்துார், இந்து நாடார் எட்வர்டு மேல்நிலை பள்ளியில், 1981ல், 7ம் வகுப்பு படித்த போது, சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் ஆசிரியர் டேனியல்.
தக்க பயிற்சி தந்து, அறிவுரைகளும் வழங்குவார். முக்கியமாக, 'நடந்து செல்லும் பாதையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் கிடக்கும் கல், ஊசி, ஆணி போன்ற சிறிய பொருட்களை கண்டவுடன் அப்புறப்படுத்த வேண்டும்... அது பாதிப்பை தடுக்கும்...' என்று எடுத்து கூறுவார். அன்றாடம் செய்வதை குறிப்பேட்டில் எழுதி அவரிடம் காட்ட சொல்வார். இந்த நடைமுறையை தவறாமல் கடைப்பிடித்தேன். அது அன்றாட வழக்கமாகி விட்டது.
தற்போது, என் வயது, 56; தனியார் நுாற்பு ஆலையில் வேலை செய்கிறேன். பணியிடத்தில் சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது அத்தியாவசியம். ஏற்கனவே பள்ளியில் பெற்ற பயிற்சியால் நடைமுறையில் கடைபிடிப்பது எளிதாக உள்ளது. தேவையற்றவற்றை அப்புறப்படுத்தி பாதுகாப்புடன் இருக்க வழிகாட்டிய அந்த ஆசிரியர் டேனியலை போற்றி வாழ்கிறேன்.
- இ.நாகராஜன், விருதுநகர்.