
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2007ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
கல்வி ஆண்டின் இடையில் வடமாநிலத்தை சேர்ந்த மாணவி புதிதாக எங்கள் வகுப்பில் சேர்ந்திருந்தாள். அவளுக்கு தமிழ் தெரியவில்லை. அன்று ஆசிரியை இல்லாத நேரத்தில் ஒன்றாக கூடி தமிழில் அவளை கேலி செய்தனர், சக மாணவியர்.
அப்போது, கணித ஆசிரியை உமாபதி ராஜகோபாலன் வகுப்பிற்குள் நுழைந்தார். மாணவியர் கூடியிருந்ததை கண்டு விசாரித்தார். புதிய மாணவி, 'கிண்டல் செய்து நகைக்கின்றனர். ஒன்றும் புரியவில்லை...' என மிரட்சியுடன் ஆங்கிலத்தில் கூறினாள்.
உடனே, 'இவளுமா...' என, என்னை சுட்டிக்காட்டியதும் மறுப்பு தெரிவித்தாள் அந்த மாணவி. என்னை பாராட்டியதுடன், பிறருக்கு தக்க அறிவுரை கூறினார் ஆசிரியை. அவரது வருகை சற்று தாமதமாகியிருந்தால் கேலி பேசியவர்களுடன் நானும் சேர்ந்திருக்க கூடும்.
என் வயது, 31; பல் மருத்துவத்தில் சிறப்பு வேர் சிகிச்சை நிபுணராக உள்ளேன். வகுப்பறையில் என் மீது ஆசிரியை உமாபதி கொண்டிருந்த அபார நம்பிக்கை சிலிர்ப்பு தருகிறது. அதுவே, நேர்மை, பொறுப்பை உணர உதவியுள்ளது. வாழ்வில் பிடிப்பு ஏற்பட உதவிய அந்த சம்பவத்தை எண்ணும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுகிறேன்.
- ஆர்.வி.அபராஜிதா, சென்னை.